ஹைதர் அலி -
இலங்கை தவ்கீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையினருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று அண்மையில் ஏறாவூர் கதீஜா ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது. ஏறாவூர் கதீஜா ஜும்மா பள்ளிவாயல் நிருவாகத்தினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களை சந்திப்பதற்கு விடுத்த வேண்டுகோளினை அடுத்து இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.
தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அல் குர்ஆன், சுன்னா அடிப்படையில் பின்பற்றி அதனை மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் பள்ளிவாயல்களுள் ஏறாவூர் கதீஜா ஜும்மா பள்ளியும் ஒன்றாகும். தமது பிரச்சார நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்தோ, வேறு வெளி நிறுவனங்களிலிருந்தோ உதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ள விரும்பாத இப்பள்ளிவாயல் நிருவாகிகள் தமது பள்ளிவாயலின் அபிவிருத்தி மற்றும் மார்க்கப் பிரச்சாரத்திற்கான உதவி வேண்டி சந்திக்கும் முதலாவது அரசியல்வாதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஆவார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுடைய நேர்மையான பண்பு, நற்குணங்கள் மற்றும் அரசியலுக்கு அப்பால் மார்க்க விடயங்களில் அவர் காட்டும் அக்கறை என்பன தாம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களை சந்திக்க விரும்பியதன் காரணம் என இதன்போது பள்ளி நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
தகரத்தினால் அமைக்ககப்பட்டுள்ள இப்பள்ளிவாயலில் ஜும்மா தொழுகைக்காக சுமார் 300ற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் ஜும்மா தொழுகைக்காக வரும் மக்கள் இடப்பற்றாக்குறை காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் மழை காலங்களில் இப்பள்ளிவாயல் வெள்ள நீரினால் பாதிக்கப்படுவதோடு தகரத்தினாலான கூறைகள் காரணமாக அதிக வெயிலின் உஷ்ணத்தினையும் இப்பள்ளிவாயலில் தொழுகைக்காக வருபவர்கள் எதிர்கொள்கின்றனர்.
பள்ளிவாயலின் நிருவாக உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இப்பள்ளிவாயல் தொடர்பான விடயங்களை கேட்டறிந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் எதிர்வரும் ஆண்டுக்கான மாகாண சபை நிதி மூலம் ஏறாவூர் கதீஜா ஜும்மா பள்ளிவாயலில் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்து தருவதாகவும், தனிப்பட்ட முறையில் உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்ததோடு பள்ளிவாயலை அபிவிருத்தி செய்வதற்கான தனது ஆலோசனைகளையும் வழங்கினார்.