எப்.முபாரக்-
கிழக்கு மாகாண சபையின் 63 வது சபை அமர்வு இன்று (22) தவிசாளர் ஆரியதாச கலாபதி தலைமையில் ஆரம்பமாகியது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன் முன் மொழிந்த பிரேரணையை ஆதரித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாகீர் அனல் மின் நிலையத்திற்கென எடுக்கப்பட்ட காணிகள் மீள அந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் கிழக்கு மாகாண அமைச்சர் மாகாண சபைக்குள்ள காணி அதிகாரங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.
அம்பாறையில் சம்மாந்துறைப்பிரிவில் உள்ள தொட்டாச்சினிங்கி வெட்டை தமிழ் மக்களின் காணி அபகரிப்பு தொடர்பான பிரேரணையை ஆதரித்து லாகீர் உரையாற்றினார். அவர் தொடர்ந்து பேசுகையில், இந்த பிரேரணையை இந்த சபையில் கொண்டு வந்தமைக்கு கலையரசன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி மக்களின் காணிகளை விடுவியுங்கள் என நாங்கள் இந்த சபையில் போராடி வருகின்றோம். மறுபக்கத்தில் படையினர் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற் கொண்டு வருகின்றனர். மூதுாரில் தக்வாநகர் ,கபீப்நகர் வட்டம் பகுதிகளில் உள்ள கடற்படை முகாமை அகற்றுங்கள் என நாம் கோரி வரும் நிலையில் படையினர் அந்தப்பகுதியில் அரச நில அளவை அதிகாரிகளைக் கொண்டு அளவை செய்துள்ளனர். இது மாகாண சபையை கொச்சைப்படுத்தும் செ யலாகவுள்ளன.
இவ்வாறே தோப்பூரில் புல்மோட்டையில் உள்ள படையினரின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். இந்த மாகாண சபை அமைச்சர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். எமது காணி உறுதிகளுக்கு முத்திரை வரிகளை மாகாண சபைக்கு நாம் வழங்கி வருகின்றோம். அதிகாரங்களை பயன்படுத்தக்கூடிய அமைச்சர் ஒருவரையே நாம் நியமித்துள்ளோம். மாகாகண சபை தொடர்பான சட்டங்களில் அவை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறே சம்பூர் அனல் நிலயத்திற்கு எடுக்கப்பட்ட காணிகள் அந்த மக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும் எனவும் மாகாண சபை உறுப்பினர் லாகீர் சுட்டிக்காட்டினார்.