நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை பூரணப்படுத்துக - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் இவ்வருட வரவு – செலவு திட்டத்தின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்ளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 12ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான வீட்டுத்திட்டம், குடிநீர் திட்டம், மலசலகூடம் அமைக்கும் திட்டம், வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் பூரணப்படுத்தப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குறித்த மாவட்ட அதிபர்கள் மற்றும் திட்டப்பணிப்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இராஜாங்க அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது:-

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களோடு, புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இணைந்ததாக 11 மாவட்டங்களில் 8 இலட்சம் ரூபா பொறுமதியான 10,030 நிரந்தர வீடுகள் 8024 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகின்றன. தற்போது இவ்வீட்டுத் திட்டங்கள் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அதில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் சேதமடைந்துள்ள 2400 வீடுகள் 48 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டின் திருத்த வேலைகளுக்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. 

அதேவேளை, இப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக 7600 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைத்துக் கொடுப்பதற்காக 418 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஒரு மலசல கூடம் 55ஆயிரம் செலவில் கட்டப்படுகின்றது. 

மேலும், யுத்தினால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 647 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுக்கிணறுகள் அமைத்தல், பொதுக்கிணறுகளை திருத்தல் மற்றும் நீர் விநியோக இணைப்புகளை வீடுகளுக்கு வழங்கல் என்பவற்றின் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் மக்கள் மீள் குடியேறியுள்ள பிரதேசங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக 632.70 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் வீதிகள் புனரமைப்பு, பாடசாலை கட்டடங்கள் புனரமைப்பு மற்றும் பாடசாலைகளில் நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தல் போன்ற செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

அத்துடன், போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. இக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஒரு குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வாழ்வாதார உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 1,205 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இத்திட்டங்கள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் பூரணப்படுத்துவதற்கு குறித்த மாவட்ட அதிபர்கள், திட்டபணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -