நிந்தவூர் அட்டப்பளம் 23 ஆம் பிரிவில் இயங்கி வருகின்ற இம்மின்னிலையமானது கடந்த இரண்டரை வருடங்களாக இயங்கி வருகின்றது. இலங்கை முதலீட்டுச்சபையின் கண்காணிப்பின்கீழ் நிறுவப்பட்ட இந்நிலையமானது சகல விதமான அரச அனுமதிகளையும் சுற்றாடல் பாதுகாப்பு சபையிடமிருந்தும்¸ இலங்கை மின்சார சபையிடமிருந்தும் மற்றும் அதனோடு தொடர்புடைய அரச நிறுவனங்கள், திணைக்களங்களிடமிருந்தும் அனுமதி பெற்று Sustainable Energy Authority ன் வகைப்படுத்தலுக்கு அமைய மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி (Renewable Energy) வளங்களின் மூலம் மின் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமமாகிய நிந்தவூரில் அமையப்பெற்ற இம் மின்நிலையமானது நிந்தவூரில் மட்டும் 43 அரிசி ஆலைகளுக்கும்; மொத்தமாக அம்பாரை மாவட்டத்தில் 150 அரிசி ஆலைகளுக்குமிடையே அமையப்பெற்றுள்ளது. இவ்வரிசி ஆலைகளிலிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 332 டொண் உமி கழிவாக வெளியேற்றப்படுகிறது. அதாவது இக்கழிவு உமி 4500 Giga joule அல்லது 10.5Mw சக்தியை (அதாவது 04க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான 275000 மின் அலகுகள்-unit- )தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கழிவு உமியை பிரயோசனப்படுத்தாவிடில் சூழல் மாசடைவுக்கு உட்படுவதுடன் இயற்கை சக்தியும் விரயமாக்கப்படுகிறது.
மின்நிலையமானது இக் கழிவு உமியை மீள்சுழற்சிக்கு உட்படுத்தி 48000 மின் அலகுகளை (unit) அதாவது நாளொன்றுக்கு 16000 குடும்பங்களுடைய மின் சக்தி தேவையை பூர்த்தி செய்து எமது நாட்டின் மின் சக்தி தேவைக்கு பங்களிப்பு செய்கிறது. விவசாயக் கழிவுகள் நடுநிலை காபன் (Carbon netural) என்று அழைக்கப்படுகிறது. அதாவது இவ்விவசாயக் கழிவுகள் பூரண தகனத்துக்கு உட்படுத்தப்படும் போது விடுவிக்கப்படும் CO2 வாயு ஒளித்தொகுப்பு மூலமாக மீண்டும் புத்துயிக்கப்படுகிறது. இச்சமனிலை தொடர்ச்சியாக சூழலில் தொடர்ந்தும் நடைபெறுகிறது. மாறாக புதுப்பிக்க முடியாத (non renewable energy) வளங்களான நிலக்கரி¸ பெற்றோலிய எரிபொருட்கள் மூலமாக மின் உற்பத்தி நடைபெறுகின்ற போது விடுவிக்கப்படுகின்ற அதிகளவான NOx ¸SO2 ¸CO¸ CO2 போன்ற வாயுக்கள் சூழல் சமநிலையை பேணாமலும்¸ வெப்பத்தையும் அதிகரித்து சூழலையும் மாசு படுத்துகிறது.
இதனாலேயே மத்திய சுற்றாடல் சபை ( Central Environmental Authority ),Sustainable Energy Authority போன்ற அரச நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களைக் ( Hydro, Wind, Biomass, Solar power Generation) கொண்ட மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு பரிந்துரைக்கின்றது. இதில் வெளியிடப்படும் புகையிலுள்ள தூசி துணிக்கைகள் இரண்டு வகையான பொறிமுறைகள் மூலம் (Mechanical filter, Bag filter) பல முறைகள் வடிகட்டப்பட்டு சுற்றாடல் சபையின் வரையறுக்கப்பட்ட நியமங்களுக்கமைய வெளியிடப்படுகிறது.
அதேநேரம் ஆண்டுக்கு 03 தடவை¸ இவைகள் பரிசோதிக்கப்பட்டு மத்திய சுற்றாடல் சபைக்கு அறிக்கைகள்(Emission test report) சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் வெளியிடப்படும் திண்மக்கழிவான சாம்பல் விவசாய உரமாகவும்¸ நீர் தேங்கி நிற்கும் பள்ளக்காணிகளை நிரப்புவதற்கும் (Land filling) ,Ash block, Ash concrete சீமெந்து தயாரிப்பு போன்ற பிரயோசனமான கழிவாக சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பான முறையில் வெளியிடப்படுகிறது. அதேநேரம் எங்களது நிறுவனம் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்த திண்மக்கழிவை எவ்வாறு நேர்த்தியான நுகர்வுப் பொருளாக மாற்ற முடியும் என்பதனையும் ஆய்வு செய்து வருகிறது.
இம்மின்நிலையத்தின் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற நீர் நிலத்திலுருந்து புவியியல் திணைக்களத்தின் (Geological Department) நியமனத்துடனும் மத்திய சுற்றாடல் சபையின் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்ட அளவில் எடுக்கப்பட்டு¸ பயன்படுத்தப்பட்டு மீண்டும் நிலத்தை சென்றடைகின்றது இதன்மூலமாக நீர் வட்டம் (Water cycle) சமனிலை பேணப்படுகிறது நீர் மட்டமும் பேணப்படுகிறது. அத்துடன் இப்பிரதேசத்தில் கிடைக்கப்பெறும் இரண்டு பருவப்பெயர்ச்சி மழைகள் மூலமாக நில நீர் மட்டம் நிரம்பல் அடைகின்றது. இம்மின்நிலையமானது விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட அபிவிருத்தியையும் (Sustainable Development) இப்பிரதேச மக்களின் பொருளாதார அபிவிருத்தியையும் சூழல் பாதுகாப்பையும் நோக்காகக்கொண்டே நிறுவப்பட்டுள்ளது.
இந்நிறுவனமானது இலங்கை நாட்டின் நிறுவனம் என்றவகையில்; இப்பிரதேச மக்களுடைய அபிவிருத்தி¸ சூழல் பாதுகாப்பு¸ இப்பிரதேசத்தில் காணப்படும் கைத்தொழில் அபிவிருத்திக்கு தீர்வு வழங்குதல் போன்ற விடயங்களில் மிகவும் பாரிய பொறுப்பையும் கடப்பாடையும் கொண்டுள்ளது. இந்தவகையில் இந்நிறுவனமானது 70 க்கு மேட்பட்டவர்களுக்கு நேரடி தொழில் வாய்ப்பும் 150 க்கு மேட்பட்டவர்களுக்கு மறைமுகமான தொழில் வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்துள்ளது. கழிவுப்பொருளாக, முறையான பராமரிப்பு இல்லாமல் அரிசி ஆலைகளால் வெளியேற்றப்பட்ட உமிக்கு பாரிய கேள்வியை ஏட்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாது இப்பிரதேசத்தில் இயங்கிவருகின்ற அரிசி ஆலைகளின் செயன்முறைகளில் விருத்தி ஏட்படுத்த மற்றும் முறையான திண்மக்கழிவு அகற்றல் போன்ற துறையில் தனது நிபுணத்துவதையும் வழங்கி வருகின்றது.
நிலைமை இவ்வாறிருக்க அண்மைக்காலமாக இம்மின்நிலையம் பற்றி பல்வேறான தவறான எண்ணக்கருக்களும் சந்தேகங்களும் சமூக வலைத்தளங்களினுடாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றது. இதனால் இந்நிறுவனத்துக்கு பாரிய அவப்பெயர் ஏட்பட்டுள்ளது. முறையற்ற அரிசி உலர்திகளை உபயோகித்து கழிவினை வெளியேற்றும் அரிசி ஆலைகளும், திறந்த வெளி செங்கல் சூளைகளும் நிறைந்து காணப்படும் இப்பிரதேசத்தில் முறையான கட்டுப்பாட்டு நியமங்களுடன் நிறுவப்பெற்றுள்ள இம்மின்உற்பத்திச்சாலையால் சூழலுக்கு சாம்பல் வெளித்தள்ளப்படுகின்றது என்பது பக்கச்சார்பான குற்றச்சாட்டாகவே நோக்கப்படுகிறது. இந்நிலை குறித்து பக்கச்சார்பற்ற நடுநிலையான தகவல்கள் மக்களை சென்றடைய வேண்டும்.
இத்தொனிப்பொருளிலேயே இந்நிறுவனம் இயங்கிவருவதுடன், இதன் உண்மை நிலையை அறிய பாதிக்கப்பட்ட பிரதேசம் என்று சொல்லப்படும் பகுதிகளுக்கு சென்று மாதிரிகளை பெற்று மேல் பகுப்பாய்வு செய்துவருகிறது. ஆகவே வீணான வதந்திகளையும் தவறான தகவல்களையும் நம்பாமல் இந்நிறுவனத்திடம் நேரடியாகவோ அல்லது இது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களான Central Environmental Authority,Sustainable Energy Authority யிடமிருந்து மாத்திரம் இது சம்பந்தமான தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.