பைஷல் இஸ்மாயில் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கடந்த சனிக்கிழமை (13) இணைந்துகொண்ட மருதூர் அன்சாருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் கிடையாதென அகில இலங்கை மக்கள் காங்கிஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிஸ் கட்சியின் நாடளாவிய ரீதியில் கட்சி அமைப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைமைக்கும் அதன் உயர்பீட நிருவாகத்துக்கே உள்ளது. இவ்வாறு இருக்கின்ற ஒரு நிலைமையில் கட்சியின் தலைமைக்கும் உயர்பீட குழுவினருக்கும் தெரியாமல் அவர் எவ்வாறு அமைப்பாளர் பதவி வகிக்க முடியும். மருதூர் அன்சாருக்கு இந்தப் பதவியை கட்சி வழங்கவில்லை எனவும் கூறினார்.
அது மாத்திரமல்லாமல் மருதூர் அன்சார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்புரிமை கொண்டவரல்ல, அம்பாறை மாவட்டக் கொள்கைபரப்புச் செயலாளர் என்ற பதவி அவருக்கு எச்சந்தர்பத்திலும் வழங்கப்படவில்ல எனவும் தெரிவித்தார்.
மருதூர் அன்சார் 2006 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர். பின்னர் 2011 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு 43 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார்.
மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீதுடன் நெருக்கமான உறவை வைத்திருந்த இவர் தேசிய பட்டியல் முரண்பாட்டினால் கட்சியிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரசுக்கும், முன்னாள் செயலர் வை.எல்.எஸ்.ஹமீதுக்கும் இடையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள உறவின் அடிப்படையில்தான் மருதூர் அன்சார் முஸ்லிம் காங்கிரசுடன் மீண்டும் இணைந்திருக்கிறார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசைப் பொறுத்தவரையில், உறுப்புரிமை இல்லாத, மக்கள் செல்வாக்கில்லாத எந்தவொரு தனிநபரும், எந்தக் கட்சியில் இணைந்தாலும் அதனை ஒரு பொருட்டாகக் கட்சி கருதுவதில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எகிறிப்போயுள்ள உள்வீட்டு முரண்பாடுகளை மறைப்பதற்காக, எங்கேயோ இருக்கும் சிலரை தேடிப்பிடித்து, பூமாலை போட்டு அவர்கள் றிசாத்தின் கட்சிக்காரர்கள் எனக்கூறி வருவது இப்போது வழக்கமாகிவிட்டது,
அந்தவகையில் இப்போதும் “றிசாத்தின் இன்னுமொரு விக்கட் வீழ்ந்திருக்கின்றது” என்று சமூகவலைத்தளங்களில் போலிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது, அக்கட்சின் கையாலாகாத தனத்தையும், வங்குரோத்தையுமே தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது என்றார்.
