கல்முனை பாரிய ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது - உலமா கட்சி

எஸ்.அஷ்ரப்கான்-
க‌ல்முனை பாரிய‌ ஆப‌த்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் கல்முனை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக விழித்தெழ வேண்டும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்தார். கல்முனையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேச சபை ஏற்படுத்தப்பட்டால் கல்முனை நகரின் நிலை என்ன என பலரும் எம்மிடம் கேட்கிறார்கள். சாய்நதமருது மக்கள் தனியான பிரதேச சபை கேற்பதற்கு காரணம் முஸ்லிம் காங்கிரஸ் அம்மக்களை ஓரம் கட்டியதும் பிரதேச வாதம் பார்த்ததும்தான். அதிக விருப்பு வாக்கு பெறுபவர் மேயர் என கூறி சாய்நதமருது மக்களை ஏமாற்றியதை அறிவுள்ள எவரும் நியாயம் என ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த மாநகர சபை தேர்தலில் மு. கா வெல்ல வேண்டுமென்பதற்காக சாய்ந்தமருதான் மேயரா கல்முனைக்குடியான் மேயரா என்ற பிரதேசவாதத்தை கிளப்பிவிட்ட முட்டாள் அரசியல்வாதிகளால் வந்த விணையே இது. இத்தகைய பிரதேச வாதம் இல்லாமல் இருந்திருந்தால் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால தலைமை வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட உலமா கட்சியும் கூட்டிணைந்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அ இ மக்கள் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்று; வரலாறு காணாத அபிவிருத்தியை கல்முனை பெற்றிருக்கும். 

இன்று கல்முனை எதிர் நோக்கும் எல்லைகள் சம்பந்தமான பிரச்சினைக்குரிய தீர்வை பல வருடங்களுக்கு முன்னரே உலமா கட்சி மட்டுமே முன் வைத்துள்ளது. கல்முனை தமிழ் மக்களும் தமக்கென பிரதேச சபையை கோருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் பிரதேச சபைகள் இன ரீதியில் அமைவதற்கு நாட்டின் அரசியல் சட்டத்தில் இடமில்லை என்பது புரியப்பட வேண்டும். பிரதேச சபைகள் என்பவை மக்கள் தொகைக்கேற்பவே உருவாக்கப்பட வேண்டுமே தவிர இன ரீதியில் அல்ல.

அந்த வகையில் தமிழ் மக்கள் விரும்பினால் கல்முனையை மூன்றாக பிரித்து சபைகள் வழங்க முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும். கல்முனை மாநகர சபை என்பது கல்முனை ஸாஹிறா கல்லூரி வீதி முதல் கல்முனை நீதிமன்ற வீதி வரை இருக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இதற்கப்பால் எத்தகைய விட்டுக்கொடுப்புக்கும் இடமளிக்க மாட்டோம்.

கல்முனை முஸ்லிம் மக்கள் க‌ல்முனைக்கென‌ சுய‌மான‌, சொந்த‌க்காலில் நிற்கும் அர‌சிய‌ல் த‌லைமையை ஆத‌ரிக்க‌ முடியாமை கார‌ண‌மாக‌ இன்று கபட அரசியல்வாதிகளால் கல்முனை முஸ்லிம்க‌ள் பாரிய‌ இழப்புக்கு முக‌ம் கொடுக்கும் அபாய‌ம் உள்ள‌து.

க‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ ஆட்சியில் க‌ல்முனை முஸ்லிம்க‌ளின் ப‌ல‌த்தை சிதைக்கும் முய‌ற்சி சில தமிழ் பேரினவாதிகளால் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌ போது உலமா கட்சியின் வேண்டுகோளை ஏற்று அத‌ற்கு ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ இட‌ம‌ளிக்க‌வில்லை. இப்போதிருப்ப‌து ட‌யஸ்போராவின் ப‌ண‌த்தில் வ‌ந்த‌ ஆட்சி என்ப‌தால் பாரிய‌ விளைவுகள் ஏற்படலாம்.

க‌ல்முனை ந‌க‌ர‌த்தை தரவைக்கோவிலிலிருந்து அத‌ன் பிர‌தான‌ வீதியின் இரு ப‌குதிக‌ளையும், சந்தையையும் இணைத்து த‌னியான‌ கிராம‌ சேவ‌க‌ர் பிரிவு உருவாக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் அத‌னை த‌னியான‌ வ‌ட்டார‌மாக்க‌ வேண்டும் என்றும் ப‌ல‌ வ‌ருட‌மாக‌ உல‌மா க‌ட்சி சொல்லி வ‌ருகிற‌து. ஆனால் க‌ல்முனையின் அர‌சிய‌ல் அதிகார‌த்தில் உள்ளோர் அதற்குரிய செயற்திட்டத்தில் இறங்காது இன்ன‌மும் சேற்றுக்குள்ளேயே இருக்கின்ற‌ன‌ர். பொது ம‌க்க‌ளும் க‌ண்ணை மூடிக்கொண்டு இருப்பது வேதனையானது. கல்முனை ந‌க‌ர‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ளும் இது விட‌ய‌த்தில் க‌ல்முனையை த‌ள‌மாக‌ கொண்டிய‌ங்கும் அர‌சிய‌ல்வாதிக‌ளை அழைத்து இத‌ற்கான‌ க‌ருத்தாட‌ல்க‌ளை மேற்கொள்வ‌தற்குக்கூட‌ ம‌ன‌மின்றி இருக்கின்ற‌ன‌ர். சமூக பற்றுள்ள இளைஞ‌ர்க‌ள் கூட‌ தாம் நம்பிய முஸ்லிம் காங்கிரசால் ஏமாற்றப்பட்டதன் காரணமாக எல்லா கட்சிகளும் ஒன்றுதான் என்ற பிழையான முடிவுக்கு வந்தவர்களாக சமூக அக்கறையற்று உள்ளனர். இன்னும் சிலர் ஏமாற்று அர‌சிய‌ல் கூட்ட‌த்தை தலையில் தூக்க‌ முய‌ற்சிக்கிறார்க‌ளே த‌விர‌ கல்முனையை த‌ள‌மாக‌ கொண்ட‌ அர‌சிய‌லை இன‌ம்காண‌ முடியாம‌ல் உள்ள‌ன‌ர்.

ஆகவே இனியும் கல்முனை முஸ்லிம்கள் தமக்கான உண்மை அரசியலை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. கல்முனையை தளமாக கொண்டுள்ள முஸ்லிம் கட்சியை இனம் கண்டு அதனை பலப்படுத்துவதினூடாகவும் அத்தலைமை தேசியத்தலைமைகளுடன் இணைந்து கல்முனைக்கான விமோசனங்களை பெற முடியும் என்ற யதார்த்த அரசியலையும் புரிந்து எம்மோடு ஒன்றுபட்டுழைக்க முன்வர வேண்டும். எமது கட்சியை பொறுத்த வரை இவற்றையெல்லாம் சொல்வ‌தற்கு ம‌ட்டுமே எம‌க்கு அதிகார‌ம் உண்டு. செய்விப்ப‌தாயின் க‌ல்முனை மக்க‌ளின் ஆணையும் ஒத்துழைப்பும் எமக்கு வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -