இக்பால் அலி-
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இருப்பது பாடசாலை அதிபரை, நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல. அதேபோல் பழைய மாணவர் சங்கம் இருப்பது அதிபரை நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதற்கு அல்ல. அரசியல் வாதிகளின் உதவியும் ஆதரவும் இருப்பது அதிபரை நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துதற்கு அல்ல. அதிபருக்கும் ஆசிரியருக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை நாங்கள் அதிகாரம் பண்ணுவதற்கோ அல்லது நிர்வாகம் பண்ணுவதற்கோ அல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் அதிபருக்கும் ஆசிரியருக்கும் ஒத்தாசையாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு வெளியே உள்ள முஸ்லிம் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் எல்லாம் நேர்மாற்றமாக நடைபெறுகின்றது. இவர்கள் தங்களுடைய பொறுப்புக்கள் எவை தங்களுடைய பணிகள் எவை என தெரிந்து கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக பொறுப்பின்றி நடப்பதன் காரணமாக எமது பாடசாலை மாணவர்களின் கல்வி சீரழிந்து கொண்டு போகின்றது என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் முத்தலீப் ஹாஜியார் தெரிவித்தார்.
முத்தலீப் பொது அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் தெல்தோட்டையிலுள்ள பாடசாலைககளில் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு தெல்தோட்டை முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் 14-08-20106 நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் முத்தலீப் ஹாஜியார் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
தம் பகுதியில் க. பொ. த உயர் தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஏழை மாணவி ஒருவர் தம் வீட்டின் வறுமை நிலை காரணமாக கல்வியைத் தொடரமுடியாமல் இடைநடுவில் விட்டு விலகி கடவுச் சீட்டை முறையற்ற விதத்தில் சரி செய்து கொண்டு வெளிநாடு சென்றுள்ள சோகச் சம்பவங்கள் எமது பகுதிகளில் பதிவாகியுள்ளன. போக்குரவதுக்காக செலவு செய்ய முடியாது என்ற நிலையிலும் பாடப்புத்தகங்கள் வாங்க முடியாதென்ற நிலையிலும் வறுமையின் காரணமாகவும் பாடசாலையை விட்டு விலகி விடுகின்றார்கள். நம்பக் கூடிய உண்மையான கவலைகள் தரும் எண்ணற்ற செய்திகள் எம் மத்தியில் பதிவாகியுள்ளன.
ஒரு மரத்தை நாட்டி காய் பறிக்க வேண்டும் எனில் அந்த நிலம் சூழல், காலம் ஒத்துப் போக வேண்டும். அவற்றில் ஒன்று மட்டும் ஒத்துப் போகா விட்டால் அந்த மரத்தில் காயை காண முடியாது, அதற்கு எவ்வளவுதான் தண்ணீர் ஊற்றினாலும் எவ்வளவுதான் பசளையிட்டாலும் அது காயைத் தந்தாலும் ஒழுங்கான கனியைப் பெற்றுக் கொள்ள முடியாது.
எனவே பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் என்பது அதிபர் ஆசிரியர் குழாத்துடன் இணைந்து சேவையாற்ற வேண்டுமே தவிர அவர்களுக்கு இடையூறாக இருத்தல் கூடாது.
தம் பிரதேசத்திலுள்ள மாணவர் மாணவிகளின் நிலைமைய அறிந்து நாங்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். எமது இலக்குகள் வெற்றியடைவதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள் இருப்பது போல் பெற்றோர்கள் பங்கு முக்கியமானதாகும்.
பெற்றோர்களுக்கும் பாடசாலைக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருத்தல் வேண்டும். அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்கு உதவிகள் பங்களிப்புக்களை வழங்கலாம். ஆனால் தங்களுடைய செல்வாக்கை அதிகாரத்தை பிரயோகிக்கக் கூடாது. தூர நின்று தம் பிரதேச பாடசாலைக்கு உதவி செய்தால் செல்வாக்கு தனாகவே தேடி வரும். இன்னுமொரு விடயம் படித்தவர்கள் பாடசாலையின் விடயத்தில் பெரியளவு அக்கறை செலுத்த முன்வருவதில்லை. படித்த சமூகம் பாடசாலையின் மீது அதிக கவனம் செலுத்துமானால் அந்தப் பாடசாலை உரிய இலக்கை தானாகவே அடைந்து விடும். எனவே பிரதேசத்திலுள்ள படித்தவர்களின் பங்களிப்பு மிக மிக அவசியமானதாகும். ஆனால் கற்றோர்கள் ஒதுங்கி நின்று புதினம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கதை எமது மத்தியில் இருக்கிறது. ஆனால் நாங்கள் படித்த பாடசாலை உயர் தரமிக்க மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற இலட்சிய எண்ணம் படித்தவர்கள் ஒவ்வொருடைய மனதிலும் இருத்தல் வேண்டும்.
நாங்கள் பொறுப்புக்களை சரிவரச் செய்வோமானால் முழுமையான ஆளுமையுடைய நாற்றுப்பற்றுள்ள இஸ்லாமிய உணர்மிக்க கல்வியில் திறன்வாய்ந்த மாணவர்கைள எங்களால் உருவாக்க முடியும். இதற்கு நாங்கள் நீண்ட தூரம் பயணம் செல்லத் தேவையில்லை. எங்களுடைய பொறுப்புக்கள் எவை என அறிந்து காலத்தை நேரத்தை விணாக்காமல் செயற்படுவதற்கு நாங்கள் ஒன்றுபடுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான சாதிக் ஹாஜியார்; யூசுப் ஹாஜியார், பாடசாலை அதிபர்மார்கள். வளவாளர் அனஸ் பெற்றோர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்மாதரிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.