நிஸாம் காரியப்பரின் முயற்சியால் கல்முனையில் 8 அபிவிருத்தி திட்டங்கள் - உடனடி நடவடிக்கை

அஸ்லம் எஸ்.மௌலானா-
16 கோடி 80 இலட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள கல்முனை மாநகர சபையின் எட்டு அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கல்முனை மாநகர சபையின் முதல்வராக சடடமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்கள் பதவி வகித்தபோது கடந்த ஏப்ரல் மாதம் அவரினால் முன்மொழியப்பட்ட எட்டு அபிவிருத்தி திட்டங்களுக்காக நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் இந்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட நிதியில் இருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் 16 கோடி 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மாதம் நடுப்பகுதியில் திறைசேரி அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சு, கிழக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி ஆணையாளருக்கு பரிந்துரை செய்து, குறித்த வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியதற்கமைவாக விரைவில் ஒப்பந்தக்காரர்களிடம் அவற்றுக்கான கேள்விப் பத்திரங்கள் கோரப்படவிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலக புனர்நிர்மாணத்திற்காக மூன்று கோடி 25 இலட்சம் ரூபாவும் கல்முனை பொதுச் சந்தை புனர்நிர்மாணத்திற்காக இரண்டு கோடி அறுபது இலட்சம் ரூபாவும் கல்முனை சந்தாங்க்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கு நிர்மாணப் பணியை பூர்த்தி செய்வதற்காக ஒரு கோடி எழுபது இலட்சம் ரூபாவும் மருதமுனை பொது நூலகத்தில் மாநாட்டு மண்டபம் ஒன்றை அமைப்பதற்காக ஆறு கோடி 90 இலட்சம் ரூபாவும் நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ஒரு கோடி ரூபாவும் சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் சமூக வைத்திய நிலையங்கள் அமைப்பதற்கு தலா 45 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் காணி மீட்பு கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள சாய்ந்தமருது தோணாவை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்காக நிஸாம் காரியப்பரின் வேண்டுகோளின் பேரில் இரண்டாம் கட்ட நிதியாக சுமார் ஒரு கோடி ரூபா அமைச்சர் ஹக்கீமினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 

கல்முனை தொகுதியின் வரலாற்றில் ஒரே தடவையில் இந்தளவு பெரும்தொகை (17 கோடி 80 இலட்சம் ரூபா) 
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும். கடந்த காலங்களில் இவ்வாறான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாமையினால் கல்முனை பொதுச் சந்தை, பொது நூலகம் போன்றவை முறையான புனரமைப்பு எதுவுமின்றி, வர்த்தகர்களும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் முழுமையான பங்களிப்புடன் முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பர் மேற்கொண்ட அயராத முயற்சி காரணமாக அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறித்து நன்றியம் பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் மற்றும் கல்முனை மாநகர சபையின் பொறியியலாளர் சர்வானந்தன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -