தொழிநுட்பத்தால் வளர்ந்து கலாச்சாரத்தால் சீரழியும் மனிதன்..!

ந்த உலகம் ஆரம்பத்தில் இறைவனால் எவ்வாறு படைக்கப்பட்டதோ அன்று முதல் இந்த ஐந்தறிவுள்ள உயிர் ஜீவங்கள் எவ்வாறு வாழ்ந்து வந்ததோ இன்று வரை அவ்வாறே வாழ்ந்து வருகின்றது. அவைகளுக்கென்று தங்குவதற்கு நிரந்தரமான வீடுகள் ஏதுமில்லை. பிரேத்தியேகமான ஆடைகளென்றில்லை. பிரேத்தியாகமான உணவு வகைகள் ஏதுமில்லை. கலாச்சாரங்களில் வித்தியாசங்களில்லை. இறைவன் இந்த ஐந்தறிவுள்ள உயிரினங்களை முதன்முதலில் எவ்வாறு படைத்தானோ அது போன்றே அவைகள் இன்று வரை வாழ்ந்து வருகின்றது. ஏன் உலகம் அழியும் வரைக்கும் அவ்வாறே வாழ்ந்து வர வேண்டுமென்பதும் இறைவனின் நியதியாக உள்ளது

அதற்கு முற்றிலும் மாறாக, இறைவனின் படைப்பில் சிறந்த படைப்பாக கருதக்கூடிய மனிதர்களாகிய நாம் ஆரம்பத்தில் எவ்வாறு இறைவன் எம்மை படைத்தானோ அன்று முதல் இன்று வரை எமக்கிடையில் பல் வேறு வேற்றுமைகள் வந்து விட்டது. உணவு, ஆடை, கலாசார, பொருளாதார ரீதியாக என அடிக்கிக் கொண்டே போகலாம்.

மனிதன் தனது முழு அறிவையும் பயன்படுத்தி இப்பூமியில் தொழிநுட்ப ரீதியாக தன்னையே மித மிஞ்சுமளவுக்கு முன்னேறிச் சென்று விட்டான். மனிதனுடைய நவீன கண்டுபுடிப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது. ஆனால், பூமியில் மாத்திரம் தான் மனிதனால் தொழில் நுட்பத்துறையில் சாதிக்க முடிந்ததா? என்றால் இல்லை.

தற்போது மனிதன் அதற்கும் பல மடங்கு மேலாக முன்னேறிச்சென்று, தனது முழு அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி குறிப்பிட்ட காலத்தில் இந்த பூமியில் சனத்தொகை பெருகுமிடத்து, நாம் மேலே பார்க்கக்கூடிய விண்வெளியில் குறிப்பிட்டளவு மக்களை குடியமர்த்தக்கூடிய வேலையை மனிதன் தயார்படுத்தி வருகின்றான் என்றால், நாமெல்லாம் ஆச்சரியப்பட்டு போய் விடுவோம். ஆனால், அது தான் நிதர்சனமான உண்மை.

எவ்வாறெனில் உலகத்திலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளெல்லாம் ஒன்றினைந்து நாம் பார்க்கக்கூடிய இந்த விண்வெளியில் மனிதர்கள் வாழ முடியுமா? என்று எவ்வாறு ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள் என்றால், முதலில் அங்கு மனிதர்களின் அன்றாட வாழ்வுக்கு தேவையான உணவு வகைகளைப் பெற்றுக் கொள்ள தானிய வகைளைப் பயிரிட்டு முளைக்ககூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்று ஆராய்ந்துள்ளனர்.

அதன் பிற்பாடு, இன்டர்நெட், ஈமெயில், பெக்ஸ் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படு்த்த முடியுமா? என்று ஆய்வு நடத்தியுள்ளார்களாம் என்றால், சாதாரண பாமார மக்களாகிய நாமெல்லாம் மூக்கில் கையை வைத்து வியப்படையுமளவுக்கு நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு தன்னுயை அறிவையே மனிதன் மித மிஞ்சி வளர்ந்து விட்டான் என்பது தான் நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எதார்த்தமான உண்மை நிலையாகும்.

இவ்வாறு தன் தேசத்தின் மீதும் தம் சமூகத்தின் மீதும் பற்றுக் கொண்ட இந்த விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் மனிதன் இந்த உலகத்தின் எவ்வாறெல்லாம் இலகுவாக கஷ்டமின்றி வாழ வேண்டுமென்பதற்காக அபரிதமான முயற்சிகளுக்கப்பால் பல சாதனைகளைப் படைத்து, மனித வாழ்க்கையை இலகுபடுத்தித் தந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒரு புறம் மனிதன் நவீன விஞ்ஞான உலகில் வளர்ச்சியடைந்து கொண்டு போக, மறுபுறம் உலகத்தின் கலாசார சீரழிவுகளால் சமூகம் நாளுக்கு நாள் விலை மதிப்பில்லாத உயிர்களையே இழந்து கொண்டிருக்கின்றதென்பதே கவலைக்குரிய விடயமாகும்

இந்த உலகத்தில் வாழ்ந்து மரணித்த அல்லது தற்கால உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் சமூகத்தின் நலனுக்காகப் பல்வேறு அர்ப்பணிப்புக்களையும் வழிகாட்டுதல்களையும் தந்துள்ளார்கள் என்பதை நாம் யாரும் மறுதலிக்க முடியாது.

ஆனால், இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, மனிதனை கலாசார சீரழிவுகளிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்று நினைத்து மனிதன் இவ்வாறு தான் வாழ வேண்டும் அப்போது தான் மனிதன் கண்ணியமாகவும் சம அந்தஸ்துடனும் இந்த உலகத்தில் வாழ முடியுமென்று ஒரு புத்தகத்தையாவது வெளியிட்டு எம் சமூகத்துக்கு தந்துள்ளார்களா என்றால், இல்லை அல்லது இந்த உலகத்தில் ஒருவரையாவது சுட்டிக்காட்டி இவரைப்போல் வாழுங்கள். உங்களை கலாசாரச் சீரழிவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமென்றாவது கூறியுள்ளார்களா என்றால், அதுவும் இல்லை.

பின்பு என்னைப் பின்பற்றி வாழுங்கள். அதுவே உங்களையும் எம் எதிர்கால சந்ததியினரையும் இது போன்ற கலாசாரச் சீரழிவுகளிலிருந்து பாதுகாக்க முடியுமென்றாவது கூறியுள்ளார்களா என்றால், அதுவும் தன்னால் சாத்தியமில்லாத காரணத்தினாலோ கைவிட்டு விட்டார்கள்.

ஆனால், எம்மைப் படைத்த இறைவன் மனிதனைப் படைத்து விட்டு, எவ்வாறு சரி வாழ்ந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடவில்லை. இந்த பூவுலகில் நாம் எவ்வாறு வாழ்ந்தால், எமது கண்ணியம் பாதுகாக்கப்படும். எமக்குரிய சம அந்தஸ்துக்கள் கிடைக்கும். எமது பெண்களின் கற்புக்களைச் சூரையாடாமல் தற்காத்துக் கொள்ள முடியும் என்றெல்லாம் கூறித்தந்துள்ளான்.

அதனை அறிவுறுத்த உலக மக்கள் அனைவருக்குமான இறைவேதமான புனித அல்குர்ஆனை இறக்கித் தந்துள்ளான். அதனை வழிகாட்டித்தருவதற்காக அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை அருட் கொடையாக அனுப்பி வைத்துள்ளான்.

ஆகவே தான் நபி அவர்கள் இந்த உலகத்தில் முழு மனித சமுதாயத்திற்க்கும் இவ்வுலகத்திலும் மறுமையிலும் வெற்றி பெற வேண்டுமென்றால், எவ்வாறு வாழ வேண்டுமென்று கற்றுத்தந்தது மாத்திரமல்லாமல் அதனை தானும் வாழ்ந்து காட்டி விட்டு மரணித்துச் சென்றுள்ளார்கள்.

தனக்கென்று எந்தவித கொள்கையுமில்லாமல், தனக்கென்று எந்தவித வழிகாட்டுதல்களுமில்லாமல் தாம் விரும்பியவாறு எதை வேண்டுமென்றாலும், அனுபவித்து வாழ முடியுமென்று நாமனைவரும் முடிவெடுத்து விட்டால் , இந்த உலகத்தில் நாம் யாரும் நிம்மதியாக வாழ முடியாது. உங்களுடைய தாயும் என்னுடைய மனைவியும் எங்களுடைய சகோதரி மார்களும் இந்தப் பூமியில் சுதந்திரமாக நடமாட முடியாதென்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அற்ப சொற்ப பணத்துக்காக மனித உயிர்களைக்காவு கொள்கின்ற தீவிரவாதிகளில் அநேகர் தாய் தந்தையர் யாரென்று தெறியாமல் வாழ்ந்து வருகின்ற அநாதைகள் தான் என்று அமெரிக்காவின் புள்ளி விபரங்கள் சொல்கின்றது. இதற்கு காரணம் என்ன? கலாசாரச் சீரழிவுகளால் வந்த விபச்சாரமல்லவா...?

எவ்வாறு மிருகங்கள் தமது இனத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக எந்தவொன்றோடும் சேர்ந்து உடலுறவு கொள்கிறதோ, அது போன்று மனிதர்காளகிய நாமும் வாழ்வோமேயானால், எம்மையும் மனித உருவில் வாழ்கின்ற மிருகமென்று தானே சொல்ல முடியும் சகோதரர்களே. கசப்பாக இருந்தாலும் உண்மை அதுவேயாகும்.

இன்று உலகத்தில் நடக்கின்ற கொலை, கொள்ளை, விபச்சாரம், மது போன்றவற்றை ஒழிக்க வேண்டுமென்றால் சவூதி அரேபியாவைப்போல் குற்றங்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று அநேக நாடுகள் இன்று கூறி வருகின்றன. ஏன் சவூதி அரேபியா என்ற நாட்டின் தீர்ப்பானது, ஒரு தனி மனிதன் சல்மான் என்பவரின் தீர்ப்பா? இல்லை. மாறாக, அது எம்மைப்படைத்த இறைவனும் அனுடைய தூதரரும் காட்டித்தந்த வழிமேறையில் உள்ள தீர்ப்பல்லவா?

இன்று எங்கு பார்த்தாலும் பெண்கள் மோகப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்துகின்றதென்று கூறும் அந்நிய சகோதரர்களைப் பார்த்துக் கேட்கின்றேன். இஸ்லாம் காட்டித்தந்த ஆடைக் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்ந்தால் மாத்திரமே, இந்த உலகத்தில் பெண் என்பவள் கண்ணியமாக நடத்தப்படுபவள் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

என்னால் சவால் விட்டுச்செல்ல முடியும். உலகத்திலுள்ள எந்தவொரு மதமும் இஸ்லாமிய மார்க்கம் விபச்சாரத்ததை வலியுறுத்தித்தடை செய்துள்ளதைப் போன்று கூறவும் இல்லை நடைமுறைப் படுத்தவுமில்லை.

இன்று எத்தனையோ அநாச்சாரங்களும் கலாசார சீரழிவுகளும் எம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கின்றதென்பதை கண்கூடாகவும், ஊடகங்களூடாகவும் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சொந்தத் தந்தையால் மகள் கற்பழிக்கப்படுகிறாள். தனது அண்ணணால் தங்கை வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள். தனது காதலுடன் ஊர் சுற்றச்சென்ற காதலி, தனது சக நண்பர்களுடன் கூட்டுப்பாலியலுக்குட்படுத்தப்படுகிறாள். இதுவெல்லாம் எம்மத்தியில் சர்வ சாதரணமான ஒரு செய்தியாகவே நாளுக்கு நாள் வந்த வண்ணமுள்ளன.

ஒன்றை நான் இங்கு குறிப்பிட்டுக்கூறுகிறேன். இந்த உலகத்தில் விபச்சாரத்தையோ பாலியல் வன்முறைகளையோ கலாசார சீரழிவுகளையோ எம் சமூகத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், அதனை இந்த மனிதனின் அற்ப சொற்ப அறிவுக்குற் பட்ட உலகத்தின் சட்டங்களைக் கொண்டு என்ன தண்டனைகள் தான் வழங்கினாலும், இந்தச்சீரழிவுகளிலிருந்து எம் சமூகத்தை துளியளவும் பாதுகாக்க முடியாதென்பதை ஆணித்தரமாக நானும் நீங்களும் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

இன, மத, மொழிக்கப்பால் அனைத்தின மக்களையும் பார்த்து அறைகூவல் விடுகிறேன். இனியும் நீங்கள் இஸ்லாம் அது முஸ்லிம்களுக்குரிய மார்க்கம் என்றோ, அல்குர்ஆன் இஸ்லாமியருக்குரிய இறை வேதமன்றோ இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களோ அது குறிப்பிட்ட மக்காவில் வாழக்கூடிய மக்களுக்காக அனுப்பபட்ட இறைத்தூதர் என்றோ புறக்கணித்து, எந்தவித வழிகாட்டுதலுமின்றி தான் இந்த உலகத்தில் விரும்பியவாறு விரும்பியதை அனுபவதித்து வாழ முடியுமென்று முடிவெடுத்தால், நிச்சயம் எம்மையும் எம் எதிர்காலச் சந்ததியினரையும் இது போன்ற கலாசார சீரழிவுகளுக்குள்ளாக்கப்படுவதை யாராலும் தடுக்கு முடியாது என்பதுடன், மறுமையிலும் நாம் கை சேதப்பட்டு விடுவோம் என்பதையும் புரிந்து கெள்ள வேண்டும்

வை.எம்.பைரூஸ்,
வாழைச்சேனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -