முஸ்லிம் மக்கள் எங்களுடைய மக்கள் - மாவை சேனாதிராஜா

என்.எம்.அப்துல்லாஹ்-
னேடிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கெரி ஆனந்த சங்கரி அவர்களுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு இன்று (19-7-2016) யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இங்கு கருத்துக்கூறிய கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவுகளில் இன்னமும் முன்னேற்றங்கள் அவசியப்படுகின்றன, யுத்தம் நிறைவடைந்த பின்னர் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள தமிழ் முஸ்லிம் உறவுகள் சார்ந்த செயற்பாடுகளில் எம்மால் திருப்த்தியடைய முடியாதுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களால் தமிழ் மக்கள் அடக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதேபோன்று வடக்கில் தமிழ் மக்களால் முஸ்லிம் மக்கள் அடக்கப்படுவதாக கூறுகின்றார்கள். மன்னாரிலே இனரீதியான முரண்பாடுகள் இருப்பதை நான் அவதானித்தேன். இவை நல்ல ஆரோக்கியமான விடயமல்ல. இதுவிடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முற்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது என்னுடைய பணிவான அவதானம் என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளிக்கையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள்; முஸ்லிம் மக்களும் எங்களுடைய மக்களே நாங்கள் அவர்களைப் பிரித்து நோக்கவில்லை, ஆரம்பகாலத்தில் எமக்கிடையேயான உறவுகள் சிறப்பாக இருந்தன, ஆனால் பிற்காலத்தில் அதில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒரு கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு மாத்திரமுண்டான கட்சி அல்ல, அதிலே முஸ்லிம் தேசத்தையும் நாம் இணைத்தே இருக்கின்றோம். தந்தை செல்வா இதனை ஆரம்பம் முதல் வலியுறுத்தியிருந்தார். ஆனால் பிற்பட்ட காலங்களில் அதில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

எங்களோடு ஆரம்பகாலங்களில் இணைந்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்தினை மேம்படுத்தினார்கள். தலைவர் அஷ்ரப் அவர்களும் எமது கட்சியின் உறுப்பினரே; பிற்காலத்தில் “முஸ்லிம் விடுதலை முன்னணி” என்ற கட்சியில் இணைந்தார், அதனைத் தொடர்ந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார்; இவை எம்மீது கொண்ட கோபத்தின் வெறுப்பின் அடிப்படையில் உருவானதல்ல, முஸ்லிம் சமூகத்தில் நிலவிய தேவையின் நிமித்தம் உருவாகியவை, முஸ்லிம் காங்கிரஸை உருவாக்குவதிலே அஷ்ரப் அவர்களுக்கு அண்ணன் அமிர்தலிங்கம் போன்றோர் கூடுதல் பக்கபலமாக இருந்தார்கள், ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இப்போது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும்; அரசியல் ரீதியாக துருவப்பட்டு நிற்கின்றார்கள். புலிகள் இருக்கின்ற காலத்தில் இமாம் அவர்களை முஸ்லிம் மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தோம். வடக்கு மாகாணசபையிலே அஸ்மின் அவர்களை நியமித்திருக்கின்றோம். ஆனால் இவை போதுமானதல்ல; முஸ்லிம் மக்களோடு இன்னமும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்ற உங்களது ஆலோசனையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். என்றும் தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பில் கௌரவ எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாணசபையின் பேரவைத் தலைவர் கௌரவ.சி.வி.கே.சிவஞானம் உட்பட கட்சி முக்கியஸ்த்தர்கள் பங்கேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -