எம்.எல். பைசால் (காஷிபி)-
ஒலுவில் கிராமத்தின் கரையோரப் பிரதேசம் கடந்த ஐந்து வருட காலமாக கடல் அரிப்புக்குள்ளாகி வருகின்றது.இதனால் அங்கு விசேட வளமாகக் காணப்பட்ட தெங்கு உற்பத்தி நிலங்கள் கடலுக்குள்ளாகி அக்கிராமத்திற்கு அழகு சேர்த்த கடற்கரைப் பிரதேசம் அழிந்து, மீனவர்கள் தமது தொழிலில் பாதிப்புற்று, கரையோர குடியிருப்புக்களை கடல் ஊடறுத்து அழித்து விடும் அபாய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
முன்பு கடலுக்கும், குடியிருப்புக்குமிடையிலுள்ள இடைவெளி 1 கிலோ மீற்றர் தூர அளவு காணப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தரும் மக்கள் தென்னை மரங்களால் காட்சி தந்த அப்பிரதேசத்தின் அழகினை இரசித்து தமது ஓய்வுக்காக தரிசித்துச் செல்வர். கடற்கரைக்கும், குடியிருப்புக்குமிடையில் ஊடறுத்துச் சென்ற ஆறு அவ்வழகினை மேலும் மெருகூட்டி இருந்தது. இவை அனைத்தும் அழிந்து வெறும் 150 மீற்றர்கள் தூர அளவே கடலுக்கும்,குடியிருப்புகளுக்குமிடையில் உள்ளன.நாளாந்தம் ஏற்படும் கடல் அரிப்பினால் மக்கள் மிகுந்த மனவேதனையுடனும், அச்சத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அம்பாரை மாவட்டத்தில் கடல் வளத்திற்கும், மற்றும் தெங்கு உற்பத்திற்கும் பிரசித்தி பெற்ற இடமாக ஒலுவில் கிராமம் காணப்பட்டது. கடல் வளத்தின் மூலம் கரைவலை, ஆழ் கடல், நன்னீர் மீன்பிடி போன்ற தொழில் முயற்சிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டன. கோடிக் கணக்கான ரூபாய்களை அத்தொழிலாளர்கள் உழைத்தனர். சுமார் 1500 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் நன்மை பெற்று வந்தன.
மேலும் கடற்கரை பிரதேசத்தில் காணப்பட்ட தென்னந்தோட்டங்களின் மூலம் கிட்டத்தட்ட ஒரு போகத்திற்கு 15000 முதல் 20000 தேங்காய்களை பறித்து வந்துள்ளனர், அவ்வளங்களினால் ஓலை பின்னுதல்,தும்புத் தொழில் போன்ற பல தொழில்களில் ஈடுபட்டு தமது வாழ்க்கையினை நடாத்தி சென்றுள்ளனர்.
ஒலுவில் கிராம மக்களின் பொருளாதாரத்தில் மிகப் பிரதான பாத்திரம் வகித்த இவ்வளங்கள் அனைத்தும் கடல் அரிப்பு மூலம் அழிந்து தமது இருப்பு கேள்விக் குறியாகிய நிலையில் கரையோரத்தில் வாழும் மக்கள் உள்ளனர்.
இக்கடல் அரிப்புக்கான காரணம் என்ன? இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புற்று இக்கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதா? அல்லது மனித செயற்பாடுகள் மூலம் இவ்வழிவு நிகழ்ந்து கொண்டிருக்கின்றதா?
போன்ற கேள்விகளுக்கான விடைகளை ஆராய்வதன் மூலம் சில தெளிவுகளைப் பெறலாம்.இயற்கை அனர்த்தங்கள் மூலமான பாதிப்புக்களை எடுத்து நோக்கும் போது கரையோரப் பிரதேசம் பாதிக்கப்பட்டமைக்கான தடயங்களை அக்கிராம வரலாற்றில் காண முடியாதுள்ளது.
எடுத்துக்காட்டாக 1956 ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி,வெள்ளம்,1978 ம் ஆண்டு நிகழ்ந்த புயல், 2004 ம் ஆண்டின் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் இக்கிராமத்தின் கரையோரம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பாதிப்புக்குள்ளாகவில்லை. மேலும் 2004 ம் ஆண்டின் சுனாமி நாட்டின் பல கரையோரப் பிரதேசங்களை பாதிப்புள்ளாக்கிய நிலையில் கரையோர கிராமங்களான ஒலுவில்,பாலமுனை ஆகிய கிராமங்கள் ஏனைய கிராமங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவை அழிவுக்குள்ளாகவில்லை என்பது சிறந்த சாண்றாகும். இதற்கு அக்கிராமங்களின் கடற்கரைப் பிரதேசத்தில் காணப்பட்ட ஆறு,தோணா,தென்னை மரங்கள் போன்றன காரணமாய் இருந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியதை நினைவிற் கொள்ளலாம்.
மனித செயற்பாடுகள் மூலமாக இக்கடல் அரிப்பு இடம் பெறுகின்றதா என்று ஆராய்ந்து பார்க்கும் போது அவ்வாறான ஒரு நிலைமையினை அவதானிக்க முடியாதுள்ளது. கடற்கரை பிரதேசத்தில் தென்னை மரங்களை நட்டி, அழகு படுத்தி ,கடல் கொந்தழிப்புக் காலங்களில் கடல் அரிப்பினை தடுக்கும் பாதுகாப்பு அரணாக அம்மரங்களை வளர்த்து கடற்கரை பிரதேசத்தினை அவர்கள் பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இக்கடல் அரிப்பு தொடராக ஏற்பட்டு வரக் காரணம் யாது என்ற கேள்விக்கான விடையினை ஆராய்ந்து பார்க்கையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தின் வருகையின் பின்பே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அவதானத்திற் கொள்ள வேண்டியள்ளது.
இத் துறைமுகமானது கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக மு.கா கட்சியினால் விசேடமாக முன்னெடுக்கப்பட்ட ஓர் அபிவிருத்தித் திட்டமாகும்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஒலுவில் கிராமத்தினையே தேர்ந்த்தெடுத்தார்.அம்மக்கள் அவரது இப்பாரிய திட்டத்திற்கு அக்கட்சி மீதும்,குறிப்பாக அவர் மீதும் கொண்ட அதீத பற்றினால் மறுப்புத் தெரிவிக்காது உடன் பட்டனர்.இத்துறைமுகத்தின் மூலம் மீனவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்,இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் பெற்றுத் தரப்படும் போன்ற எதிர் பார்ப்புக்களுடன் கூடிய வாக்குறுதிகள் அம்மக்களுக்கு வழங்கப்பட்டன. இவ்வாசை வார்த்தைகளை நம்பிய மீனவர்கள் அமைதியாகினர்
இந்நிலையில் மீனவர்களின் தொழில் எதிர்காலத்தில் பாதிப்புக்குள்ளாகும் என்று உணர்ந்த சில மீனவ சங்கங்கள் இது பற்றி கருத்துக்களை முன்வைத்த போது பிரமுகர்களால் அவை உதாசீனப் படுத்தப்பட்டதையும், மீனவர்களிடையே மற்றொரு பிரிவினர் இக்கோரிக்கையினை மறுதலித்து துறைமுகத்தினாலேயே எமது வாழ்வு செழிக்கும் என்ற கருத்திற்குள்ளாகிப் போனதையும் இன்று நினைவிற் கொள்ளப்படுகின்றன.
கடல் அரிப்பு ஏற்பட்டு அபாயத்தினை எதிர்கொண்டிருக்கும் இம்மக்கள் இது பற்றி உரியவர்களிடம் முறையிட்டார்களா? இதற்கு காரனமாய் உள்ள துறைமுக்தினைப் பற்றி உயர் மட்டத்தில் எத்தி வைத்தார்களா? அல்லது கவனயீர்ப்புப் பேரணியாவது நடாத்தினார்களா என்று ஆராய வேண்டியுள்ளது.
துறைமுகத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது முதல் கடல் அரிப்பு ஏற்பட ஆரம்பமானது.இதனை அறிந்த அக்கிராம பிரமுகர்கள்,மீனவர்களின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக அம்பாரை மாவட்டத்தின் துறை சார் நிபுணர்களை அழைத்து விழிப்புக் கருத்தரங்கு ஒன்றினை 2008 ம் ஆண்டு ஒலுவில் அல்- ஹம்றா மஹா வித்யாலயத்தில் ஏற்பாடு செய்தனர்.அக்கருத்தரங்கினை நடாத்த விடாது அன்றைய ஆட்யிசில் இருந்த அமைச்சரின் கொந்துராத்து அரசியல்வாதிகள் கலகம் விளைவித்து தடுத்து நிறுத்தினர்.அதில் ஈடுபட்ட பிரமுகர்களுக் கெதிராக பொலிசாரால் வழக்குத் தொடரப்பட்டமை கசப்பான வரலாறாகும்.
துறைமுகத்தினை கட்டுவது பற்றி முறையான கருத்துக்களை அக்கிராமத்தின் பிரமுகர்களிடம் பெறாமலேயே ஆரம்பிக்கப்பட்டது.அதனை நிபர்த்திற்கும் முகமாக கூட்டப்பட்ட கூட்டம் பிரயோசனமற்றுப் போனமை அம்மக்களுக்கு பெரிய ஏமாற்றமே.
இடையிடையே மக்கள் தமது உணர்வுகளை கோசங்களாக வெளிப்படுத்த முயற்சித்த வேளைகளில் கிராமத்தின் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளால் அவை நிறுத்தப்படடுள்ளமையினையும் அறியலாம்.
இத்துறைமுகம் முறையான பகுப்பாய்வுடன் நிர்மானிக்ப்பட்டதா என்று ஆராய்கின்ற பொழுது சில அறிக்கைகள் கேள்விக்குட்படுத்தியுள்ளதை காணலாம். எடுத்துக் காட்டாக 2015.02.16 ம் திகதி துறைமுக அமைச்சர் கௌரவ அர்ஜூனா ரனதுங்க அவர்கள் இத்துறைமுகத்தினையும் அதனால் ஏற்பட்டிருக்கும் கடல் அரிப்பினையும் பார்வையிட்டதன் பிறகு "முன்னாள் ஜனாதிபதி முறையான பகுப்பாய்வின்றி இதனை அமைத்துள்ளார் , இது நாட்டுக்குப் பாதிப்பினை ஏற்படுதித்தியுள்ளது" என குற்றம் சுமத்தியதை சுட்டிக்கட்டலாம்.மேலும் துறைமுகத்தின் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு ஆய்வினை மேற்கொண்ட வெளிநாட்டு ஆய்வாளர் குழு துறைமுகம் அமைப்பதற்கு இப்பிரதேசம் பொருத்தமற்றது, இதனால் இப்பிரதேசம் அழிவுகளை சந்திக்கும் என்று அறிக்கை சமர்பித்ததாக கூறப்படும் தகவலுக்கு மேற்படி கூற்று சான்று பகர்ந்து நிற்கின்றது.
மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றப்படும் என்று சொல்லப்பட்ட கூற்று எந்தளவிற்கு உண்மைப்படுத்தி நிற்கின்றது என்பதை திறந்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒலுவில் மீனவ குடும்பங்களின் தொழில் வாய்ப்பு உறுதிப் படுத்தப்பட்டுள்ளதா? அதன் மூலம் ஒலுவில் மீனவர்களில் எத்தனை பேர் தங்களது மீன்பிடியினை மேற்கொள்கின்றனர்? இன்றும் அவர்கள் பாரம்பரிய மீன் பிடியினை அல்லவா முன்னெடுக்கின்றனர்.
இத்துறைமுகத்தின் பிரதி பலனில் ஒலுவில் மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல்,நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் அளவிற்கு இது மாறியுள்ளது என்றால் இத்துறைமுகம் அமைக்கப்பட்டதன் நோக்கம்தான் என்ன ?
வயல் பிரதேசங்களின் தென்னந் தோப்புக்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டு, பயிர்ச் செய்கை காணிகள் அரசாங்கத்தின் திட்டங்களுக்காவும், சகோதர இனத்தவர்களால் ஆக்கிமிக்கப்பட்ட நிலையிலுள்ள இக்கிராம மக்களுக்கு கடல் அரிப்பின் மூலமான பாதிப்பு மிகுந்த ஆத்திரத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை உரியவர்கள் கவனத்திற் கொள்ளல் அவசியம் .
இதனை கட்டுப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகள் அவ்வப்போது முன்னெடுக்கப்படடாலும் நிலைமை தலைக்கு மேற் செல்லும் அளவிற்கு மோசமாகியுள்ளது.
அமைச்சர்கள் உட்பட பல மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டுச் செல்லும் காட்சிப் பொருளாக அழிந்து கொண்டிருககும் ஒலுவில் கிராமத்தின் கடற்கரை கரையோரம் மாறியுள்ளது.
யார் பார்வையிட்டுச் சென்றாலும் தீர்க்கமான உரிய தீர்மானத்தினை எடுத்து அவசரமாக செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பு மு.கா கட்சி மீது இருக்கின்றது.
ஒலுவில் கிராமத்தினை பொறுத்தளவில் களத்தில் நின்று விடயங்களை கையாள்வதற்கான அரசியல் அதிகாரத்தனை எந்தவொரு கட்சியும் வழங்காத நிலையில் மு.கா கட்சியின் மக்கள் பிரதிநிதிகளே கூடுதல் கவனம் செலத்த வேண்டிய தேவையுள்ளது.
நிலைமை கட்டுப்பாட்டினை இழப்பதற்கு முன்பு கிழக்கின் அதிகாரத்தினையும்,மத்தியில் முக்கிய பங்கினையும் வகிக்கும் மு.கா பிரதிநிதிகள் தூரத்தில் நின்று அனுதாபம் தெரிவிப்பவர்களாக இல்லாமல் களத்தில் நின்று வகை சொல்லக் கூடியவர்களாக இருந்து அவதியுற்றுக் கொண்டிருக்கும் ஒலுவில் கிராம மக்களுக்கு சிறந்த தீர்வினை பெற்றுத்தரல் வேண்டும். இதுவே அம்மக்களின் எதிர் பார்ப்புமாகும்