கார்டியன் பத்திரிகை வெளிப்படுத்திய ஒரு விபச்சார கிராமம் - வீடியோ இணைப்பு (அவலங்கள்)

தெளலத்தியா – பங்களாதேஷ் நாட்டில் விபச்சாரத்திற்கென்றே ஒதுக்கப்பட்ட ஒரு கிராமம். இக்கிராமத்தின் மொத்த வாழ்க்கையும் இயக்கமும் சந்தையும் விபச்சார தொழிலை மையபடுத்தியே செயல் படுகிறது. அவர்களுக்கு தேவையான பொருட்கள், ஆடைகள், அலங்கார பொருட்கள் என சந்தை இதை மையப்படுத்தியே இயங்குகிறது. இங்குள்ள பொருட்களின் விலை பல மடங்கு அதிகம். வெளியில் சென்று வாங்க முடியாததால் இங்குள்ளவர்களின் வருமானத்தில் பாதி இந்த அதிக விலைக்கே போய்விடுகிறது. ஏழைப் பெண்களையும், குழந்தைகளையும் விபச்சாரத்தின் பெயரில் கொடூரமாக வதை செய்யப்படுவதை இந்த வீடியோ காட்டுகிறது.

வங்கதேசத்தில் மட்டும் 20 கிராமங்கள் விபச்சாரம் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் பெரிய அளவில் நடப்பது தெளலத்தியா கிராமம். இங்கே சுமார் 1600 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 600 பெண்கள் 3000 பேர்களை எதிர்கொள்கின்றனர். இங்குள்ளவர்களில் பலர் கடத்தப்பட்டு இங்கே விற்கப்பட்டுள்ளனர். சிலர் தங்களின் சொந்தங்களால் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். ஒரு சிலர் தங்களுடைய கணவர் அல்லது காதலனால் கொண்டுவரப்பட்டவர்கள். தங்களுக்கு விருப்பம் இல்லாத பெண்கள் இத்தொழிலை விட்டும், கிராமத்திலிருந்தும் வெளியேருவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

பெண்களை வதைக்கும் கூடங்களாக இருக்கும் தெளலத்தியாவில் உள்ள ரவுடிகள் மற்றும் விபச்சாரத்தை நடத்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை வங்கதேச அரசு. ஆனால் வங்கதேச அரசியலமைப்பு சட்டமோ விபச்சாரத்தையும் சூதாட்டத்தையும் தடுக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும் குழந்தைகள் மற்றும் கட்டாய விபச்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்று அங்கே சட்டமும் அமலில் இருக்கிறது. ஆனால் வங்கதேசத்தில் போதைப்பொருள் மற்றும் விபச்சாரம் முக்கிய வருமானமாக சிலருக்கு உள்ளதால் அரசு கண்டுகொள்வதில்லை.

கார்டியன் பத்திரிகையில் (The Guardian) வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவின் தொடக்கத்தில் தீஷா என்ற 9 வயது நிரம்பிய சிறுமி கூறுகையில், “என்னை சுற்றி கொடூரமான மனிதர்கள் இருக்கின்றனர். அவர்கள் உடல்களை தொடுவதோடு மட்டுமில்லாமல் மற்ற விஷயங்களை செய்கின்றனர். என்னுடைய தாய் இதனால் கோபமடைகிறார்”. சலீயா, தீஷா அனாதையாக இரயில் நிலையத்தில் இருந்த போது அவளை கூட்டிக்கொண்டு வந்தவள். அவள் பராமரிப்பில் தான் தீஷா வளர்கிறாள். தீஷாவை இப்போதே வாடிகையாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இத்தொழிலில் ஈடுபடுத்துகின்றனர், சலீயாவிற்கோ குடிபழக்கம் உள்ளது.

இக்கிராமத்தில் மட்டும் சுமார் 300 குழந்தைகள் வாழ்கின்றனர், பெரும்பான்மையானவர்கள் இங்கே பிறந்தவர்கள், அவர்களையும் இத்தொழிலில் ஈடுபடுத்தபடாமல் இருக்க செய்வது என்பது மிகப்பெரிய போராட்டம். மேலும் தீஷா கூறுகையில் “இங்கே சுத்தறவங்க எல்லாம் குடிச்சுட்டு வர்றாங்க அப்புறம் உடம்பையெல்லாம் தொடுறாங்க. திடிரென்று சண்டை போடறாங்க. நாங்க தூங்கும்போது தகர கதவை உடைக்கிறாங்க. ஒரு சிலர் அவங்க காருக்குள்ளே அசிங்கமா தொட்டுகிறாங்க. நாங்க வாழ்றதுக்கு ஒரு நல்ல இடம் வேணும்”. ஒரு சிலர் இங்கே பாதுகாப்பான வீடுகளில் தங்களின் குழந்தைகளை விடுகின்றனர். இங்கு குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி சொல்லி தரப்படுகிறது.

அகியே இங்கே பிறந்து வளர்ந்தவர். பாதுகாப்பு வீட்டில் பணிபுரியும் இவர் பெண் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறார். தீஷாவுக்கு டாக்டர் ஆவது என்பது கனவு, சில நாட்களாக தீஷா பாதுகாப்பு வீட்டிற்கு வரவில்லை என்பதால் அவர் தாயிடம் பேசி அழைத்து செல்ல முயற்சிக்கிறார். இங்குள்ள குழந்தைகளுக்கு சீக்கிரம் முதிர்ந்த பெண்களாக மாற்றுவதற்கு டெக்ஸாமீதாசோன் என்கிற ஸ்டீராய்டு மருந்தை உட்கொள்ள செய்கின்றனர்.

child-prostitutionதெளலத்தியாவில் வசிக்கும் பெண்கள் 14 வயது அடைந்தவுடன், இத்தொழிலில் ஈடுபடுத்துபடுகின்றனர். சுமார் 18,000 ரூபாய் பணத்திற்காக குழந்தைகள் இத்தொழிலுக்கு கடத்தப்பட்டோ சம்பந்தப்பட்ட குடும்பத்தினராலோ விற்கப்படுகின்றனர். அவர்கள் வளர்ந்தவுடன் தங்களின் கடனை அடைப்பதற்கு இத்தொழிலை தொடர்ந்து செய்கின்றனர். ஒரு கட்டத்தில் தங்களின் கடன் பாக்கி முடிந்துவிட்டால் ஒரு சிலர் இத்தொழிலை தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் தொடருகின்றனர், ஒரு சிலர் வெளியில் சென்று வாழ முடியாத அளவிற்கு இங்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் செல்வதில்லை.

மாட்லா மற்றும் பூனா இவர்கள் அவர்களுடைய தாய் மற்றும் பாட்டியுடன் வசிக்கின்றனர். இரு தலைமுறையாக இத்தொழிலில் இவர்களுடைய குடும்பம் ஈடுபட்டுவருகிறது. தெளலத்தியா கிராமத்தில் வீடுகள் தகரத்தினால் கட்டப்பட்டுள்ளன. அவர்களுடைய வீட்டிலேயே தான் தொழில் செய்யமுடியும் என்பதால் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்புவதும் கடினம். அவர்களை வீட்டில் வைத்திருக்கவும் முடியாது. வெளியே அனுப்பினாலும் யாராவது தவறா நடத்துவாங்க தவறா பேசுவாங்க அது அவர்களை பாதிக்கும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். மாட்லாவின் தாய் கூறுகையில் “10 வயதாகும் என் மகளுக்கு எல்லாம் புரிகிறது. அவள் முன்னாடிதான் வாடிக்கையாளரை நான் கூட்டிக்கொண்டு போகிறேன். எங்களுக்கு வேற வழியில்லை. நாங்க சாப்பிடறதுக்கும் வாழறதுக்கும் இதுதான் வழி. இங்க தான் சரியா பணம் கிடைக்கிறது இல்லனா என் குழந்தகளுக்கான படிப்பு செலவை என்னால் பார்க்க முடியாது”. மாட்லா இங்க இருக்க விருப்பபடல படிச்சு வேலைக்கு போகணும் அதுதான் தன்னை காப்பாத்தும் என்று தெரிந்து வைத்திருக்கிறாள், தன் தங்கைக்கு எதுவும் நடக்க கூடாது என்றும் பயப்படுகிறாள்.

8 வயதில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது சாக்லேட்டை காட்டி கடத்தி வரப்பட்டு இங்கு விற்கப்பட்டவள் – முன்னி. தன்னுடைய தாய் கண்டிப்பா தன்னை மீட்டு கொண்டு போவாங்க என்று நெடுநாள் நம்பி இருந்தாள். தற்போது 30 வயதாகும் அவள் ஒரு நாளைக்கு 5-6 வாடிக்கையாளர்களை நபருக்கு 200 ரூபாய் வீதம் வாங்குகிறாள். ”நான் முதல் வகுப்பு தான் முடிச்சிருந்தேன். அப்புறம் என்னை 40,000 ரூபாய் கொடுத்து வாங்கினதால, நான் அவங்களொடு இருக்கணும்னு சொல்லிட்டாங்க. பிறகு என்னை பயமுறுத்தி இங்க தங்க வைச்சாங்க. நான் சூழ்நிலை கைதியா மாறினேன். கொஞ்ச நாளைக்கு நிறைய அழுதேன் வேற எங்க போக முடியும். எனக்கு வேற வழியுமில்லை”. பொதுவாக குழந்தைகளை கடத்திக் கொண்டு வந்து இத்தொழிலை ஈடுபடுத்துவது என்பது அதிக அளவு நடைபெறுகிறது. இதற்கு உள்ளூர் அரசாங்க அதிகாரிகளும் போலிசும் லஞ்சத்தை வாங்கி கொண்டு அவர்களுக்கு உடந்தையாக செயல்படுகிறது.

”நான் என் கடனை கழித்துவிட்டேன். இப்போது நானே தொழிலை சொந்தமாக செய்கிறேன். என்னுடைய குழந்தையை வெளியில் தங்க வைத்து படிக்க வைக்கிறேன். எனக்கு பிடிக்கலனா வெளியே போ சொல்லிவிடுவேன். ஆனா நாங்க சாப்பிடணும், குழந்தையை பார்த்துக்கணும் வீட்டு வாடகை கட்டணும் அதற்காக பல நேரங்கல்ல இதைச் செய்யறன்.”

தெளலட்டியா, நகரத்திற்கு செல்லும் வழியில் இருப்பதால் வியாபாரம் வேலை சம்பந்தமாக செல்பவர்கள் பலர் இக்கிராமத்திற்கு வருவது என்பது வாடிக்கையாக உள்ளது. வங்கதேசத்தில் உள்ள எல்லா தவறான மனிதர்களும், தவறான பழக்கங்களை கொண்டவங்க எல்லாம் இங்கதான் வர்றாங்க – சுமான் தெளலட்டியாவில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர். “இங்கே வருவங்க எதாவது ஒரு குற்றப்பின்னணில இருந்துதான் வராங்க. கெட்டவங்க கெட்ட இடத்துக்கு தான் வருவாங்க. இந்நாட்டில உள்ள மற்ற பகுதியில இவ்வளவு தெரியமா விபச்சாரத்தையும், போதை பொருளையும் விற்பனை பண்ணமுடியாது. இந்த இடத்தில் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.”

நகரத்தில் ஒரு எலக்ட்ரானிக் கடையை சைத்திருக்கும் ரூமான் ”நான் கடுமையாக உழைக்கிறேன் நான் இங்க வந்தா நிம்மதியா இருக்கிறேன். எந்த பொண்ண நான் விரும்புறேனோ நான் எடுத்துக்குவேன். மாநிறமா இருக்கிற பொண்ணு எனக்கு பிடிக்கும். எனக்கு இது தவறா தெரியல. எல்லாருக்கும் சந்தோசம் வேணும் அதுக்காதான் இங்க வர்றோம்“ இவருடைய உறவினர்களுக்கு இவர் வழக்கமாக இங்க வருகிறார் என்பது தெரியும்.

ஏழை நாடான வங்கதேசத்தில் ஒரு புறம் பன்னாட்டு ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள் மக்கள் ஒடுக்கி வதைக்கின்றன. மறுபுறம் இஸ்லாமிய மதவெறியர்கள் பயங்கரவாத செயல்களை நடத்தி வருகின்றனர். இதற்கேற்ப இத்தகைய சட்டவிரோத தொழில்கள் அங்கே தடையின்றி நடக்கின்றன. அரசோ இல்லை முஸ்லீம் அமைப்புக்களோ இத்தகைய மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட விபச்சார கிராமங்களை தடை செய்வதில்லை. இறுதியில் வங்க தேசத்தின் ஏழைப் பெண் குழந்தைகள் தமது எதிர்கால வாழ்க்கையை இங்கே பலி கொடுக்க வேண்டியிருக்கின்றது. வங்க தேச தொழிலாளி வர்க்கம் விழித்தெழுந்து போராடும் போது இத்தகைய சமூக அவலம் அங்கே ஒழிக்கப்படும். ஆயத்த ஆடை பெண்களின் போராட்டம் அதை நிச்சயம் செய்து காட்டும்.

இது தொடர்பில் காடியன் பத்திரிகையின் ஆவணப்படம். https://www.theguardian.com/world/video/2016/may/17/children-trapped-bangladesh-brothel-village-video

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -