அல்குர்ஆனை மனனம் செய்தவர்களாக உள்ளவர்களை ஒன்றிணைத்து அவர்களது நலன்சார்ந்த வேலைத்திட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் திங்களன்று (ஜுலை 04, 2016) தெரிவித்தார்.
இதன் பிரகாரம் நடமாடும் குர்ஆன் என்றழைக்கப்படும் அல்குர்ஆனை மனனம் செய்தவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான தொழில்வாய்ப்புக்கள், பற்றி ஆராய்வதோடு சன்மார்க்க விடயத்தில் அவர்களது அறிவையும் ஆற்றலையும் மேலும் விரிவாக்குவது பற்றியும் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், தூய வடிவில் மக்களிடம் இஸ்லாத்தின் சன்மார்க்க வழிநடத்தல்களை மேற்கொள்ளவேண்டியது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இதன்போது மார்க்க சம்பந்தமான கருத்தரங்குகள், பயிற்சிகள், சுற்றுலாக்கள், மற்றும் இன்னோரன்ன சன்மார்க்க நிகழ்வுகளை தனது சொந்த நிதியில் அமுல்படுத்த உள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை, மட்டக்களப்பு, மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள அல்குர்ஆனை மனனமிட்டுள்ள ஹாபிஸ்கள் தங்களது பெயர் விவரங்களை அநனயை.நயளவஉஅளூபஅயடை.உழஅ எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் 0771276680 என்ற தொலைபேசி எண்ணுடனும் தொடர்பு கொண்டும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் அல்குர்ஆனை தனது ஏழு வயதில் மனனம் செய்த முதலாவது சிறுவர் என்ற பெருமையை தற்போதைய கிழக்கு மாகாண முதலவமைச்சர் பெற்றுக் கொண்டவர் என்பதும், 1969 ஆண்டில் தனது ஏழு வயதில் அல்குர்ஆனை மனனம் செய்த இவர் 1971ஆம் ஆண்டிலேயே இமாமாக (தலைமையேற்று) நின்று தொழுகை நடாத்தியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதனாலேயே அவரது பெயருக்கு முன்னால் 'ஹாபிஸ்' கௌரவப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், 1971, 1972 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு பெரிய பள்ளிவாசலிலும், 1973 தொடக்கம் 1977 வரை கண்டி ராஜவீதியிலிருந்த தைக்காவிலும் புனித நோன்பு கால தஹாவீஹ் தொழுகையை முன்னின்று நடாத்தினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.