எதிர்காலத்தில் தனது அரசியல் பயணமானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தொடரும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
இதன்போது, தான் உத்தியோகபூர்வமாக புதன்கிழமை (22) மு.கா. வுடன் இணைந்துகொண்டதையும் அவர் அறிவித்துள்ளார். நெல்சிப் திட்டத்தின் கீழ் 18.57 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு, ஓட்டமாவடிப் பாலத்தை அண்டி நிர்மாணிக்கப்பட்ட நவீன மீன் சந்தை திறப்பு விழா, புதன்கிழமை (22) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாகவிருந்து அரசியல் செய்து, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராகவும் இருந்து மக்களுக்கு முடிந்தளவு சேவை செய்துவந்த நான் இப்பொழுது மு.கா.வில் இணைந்துள்ளேன். மு.கா.வின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் வழிநடத்தலில் கட்சித் தலைமையுடன் இணைந்து கல்குடாத்தொகுதியில் மு.கா.வை பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளைச் செய்யுமாறு பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமையவும்இக்கட்சியில் நான்; இணைந்துள்ளேன்' என்றார்.
'கடந்த காலத்தில் நான் இருந்த அணியுடன் கல்குடாத்தொகுதியில் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவதற்காக முழுமையாகப் பாடுபட்டேன். இந்நிலையில், என்னைத் துரோகி என்று யாரும் விமர்சிக்க முடியாது. ஏனெனில், இறுதிவரை கல்குடாத்தொகுதி மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிவிருத்தி நலன்களுக்காக பாடுபடுவேன் என்பதைக் கூறுகின்றேன்' என்றார். 'அரசியலுக்கு வருகின்றவர்கள் மக்களாலேயே பிரதேச சபை உறுப்பினர், தவிசாளர், மாகாண சபை உறுப்பினர், மாகாண சபை அமைச்சர், முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சர் என்ற பதவிகளுக்கான அந்தஸ்தை அடைகிறார்கள்.
இவை முழுக்க முழுக்க மக்களால் வழங்கப்பட்ட பதவி அந்தஸ்து. எனவே, அந்தப் பதவிகளை அடைந்துகொள்கின்ற அரசியல்வாதிகள் மக்களை மதித்து மக்களுக்கு கௌரவமளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் என்ன சூழ்ச்சிகள் வந்தாலும் அவற்றை முறியடித்து கல்குடாத்தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக மு.கா.வுடன் எனது அரசியல் பயணம் தொடரும்.' எனவும் அவர் மேலும் கூறினார்.
VIDEOவை பார்க்க...
VIDEOவை பார்க்க...