ஹஜ், உம்ரா கடமையினை நிறைவேற்றுவதற்கான விடுமுறை உரிய முறையில் வழங்கப்படவேண்டும்

சலீம் றமீஸ்-

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மக்கா சென்று புனித மார்க்க கடமையான ஹஜ், உம்றா நிறைவேற்றுவதற்கான விடுமுறையினை உரிய முறையில் வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள் மார்க்கக் கடமையினை நிறைவேற்றுவதற்காக அனுமதி கோருகின்ற போது சேமிக்கப்பட்ட விடுமுறை இருந்தால் மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதாகவும், சம்பளமற்ற விடுமுறையில் மார்க்க கடமையினை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் மார்க்க கடமையினை மேற்கொள்வதற்கான விடுமுறையினை உரிய முறையில் வழங்க வேண்டுமென கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களினால் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் 60வது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி அவர்களின் தலைமையில் (21) நடைபெற்றது. 

இதில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில்;

நமது நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களில் மக்கா சென்று மார்க்க கடமையினை மேற்கொள்வதற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றது. சொந்த விடுமுறை இல்லாவிட்டாலும் சம்பளமற்ற விடுமுறைக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. ஆனால் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் இவ்வாரான நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் முஸ்லிம்களின் மனங்கள் புன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல பேச்சு வார்த்தைகள் நடாத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் இந்த விடயம் முஸ்லிம்களின் மத உரிமை என்று சொன்னோம். நீதி மன்றத்திற்கு வழக்கு தாக்கல் செய்யக் கூடிய ஒரு விடயமாகவும் உள்ளது. மனித உரிமை ஆணைக் குழுவானது முஸ்லிம்களின் மதக் கடமைகளை நிறைவேற்ற செல்வதற்கான சம்பளமற்ற விடுமுறையாவது வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இருந்த போதிலும் இவ்விடயம் அமுல்படுத்தப்படவில்லை வேதனையாக இருக்கின்றது.

இலங்கை முஸ்லிம்கள் தங்களது புனித ஹஜ், உம்ரா கடமைகளை மேற்கொள்வதற்காக மக்கா நகர் செல்லுவதற்கு சவுதி அரசாங்கத்தினால் ஒவ்வொரு வருடமும் விஷா வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விஷா தொகை அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகின்றது. இதனால் முன் கூட்டியே அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்கின்ற போது அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

எனவே தான் ஏனைய மாகாண சபைகளிலும் அமுல்படுத்தும் விடயங்களை கிழக்கு மாகாணத்திலும் அமுல்படுத்துவதற்கான நிலைக்கு நாம் வந்துள்ளோம். கட்சித் தலைவர்களின் கூட்டங்களிலும் இது தொடர்பாக பேசி வருகின்றோம்.

மார்க்க கடமையினை மேற்கொள்வதற்காக உரிய முறையில் விடுமுறை வழங்காததினால் சில அரச உத்தியோகத்தர்கள் தாம் செய்கின்ற தொழிலை இழந்தாவது புனித மார்க்க கடமையினை நிறைவேற்ற வேண்டுமென்ற முடிவுக்கு வந்துள்ளனர். முஸ்லிம்களை பொறுத்தவரையில் ஹஜ், உம்ரா என்பது முக்கிய மார்க்க விடயமாகும். தொழிலை இழந்தாவது செய்ய வேண்டுமென்ற நிலைமை உள்ளது.

இவ்வாறு புனித மார்க்க கடமையை நிறைவேற்ற செல்லவுள்ள கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள் மார்க்க கடமை முடிந்தவுடன் மார்க்க கடமைக்கான விடுமுறை(லீவு) வழங்கப்படாத துர்ப்பாக்கிய நிலைமையும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

எனவே, முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் மார்க்க கடமையினை நிவர்த்தி செய்வதற்கென உரிய முறையிலான அனுமதி, விடுமுறை வழங்க வேண்டும்;. இந்த விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் , தவிசாளர், கல்வி அமைச்சர் கவனம் எடுக்க வேண்டும். விசேடமாக இந்த விடயத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் பணி முக்கியமானது எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்;.உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -