மலேசியாவிலுள்ள Erican சர்வதேச கல்லூரியினுடன் மட்டக்களப்பு கெம்பஸ் நேற்று மாலை உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டது. இதன் பிரகாரம் சர்வதேச ரீதியிலே புகழ் பெற்ற மிகப் பிரபலமான மலேசியாவில் உள்ள Erican கல்லூரியில் இருக்கின்ற பட்டப்படிப்புக்களில் Architecture, Interior,English Language இந்த 3 துறைகளையும் இணைத்து மட்டக்களப்பு கெம்பஸுக்கும் Erican சர்வதேச கல்லூரிக்கும் இடையிலே உடன்படிக்கை காணப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மட்டக்களப்பு கெம்பஸுக்குத் தேவையான ஆளணி மற்றும் அது தொடர்பான விஷேட அனுபவங்கள், பாடவிதானம், உபகரணங்கள் போன்ற விடயங்களிலும் இரண்டு பல்கலைக்கழகங்களும் இணைந்து செயற்படுவது என தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு சீன மொழியை கற்பிப்பதிலே மிகப் பிரபல்யம் பெற்ற இந்த கல்லூரி சீன மொழியை மட்டக்களப்பு கெம்பஸில் கற்பிப்பதற்கான ஆலோசனையையும் முன் வைத்துள்ளனர்.
ஆகவே இரண்டு பல்கலைக்கழகங்களுக்குமிடையில் மாணவர் புரிந்துணர்வு, பரிமாற்றம், ஆராய்ச்சி, பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர் பகிர்வு ,அனுபவங்கள் பகிர்வு போன்ற விடயங்கள் இணைந்து செயற்படுவது என தீர்மானிக்கப்பட்டது. சுமார் 25 வருடம் பழைமை வாய்ந்த இக் கல்லூரி மட்டக்களப்பு கெம்பஸுடன் இணைவதால் மட்டக்களப்பு கெம்பஸ் சர்வதேச தரத்திலான பல்கலைக்கழகமாக மாறுவதற்கும் அதற்கான உயர்வுக்கு இவ்வுடன்படிக்கை வழிவகுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் M.L.A.M ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.
இவ்வுடன்படிக்கையில் Erican கல்லூரி சார்பாக டொக்டர் டட்டு எரிக் சொங் அவர்களும் மட்டக்களப்பு கெம்பஸ் சார்பாக அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களும் நேற்று கைச்சாத்திட்டனர். இந் நிகழ்வில் S.M. இஸ்மாயில் அவர்களும் முகாமைத்துவப்பணிப்பாளர் அஹமட் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டதோடு Erican கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இது மட்டக்களப்பு கெம்பஸினுடைய துறைகளுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றியாகும் என இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.