அபு அலா-
யுத்த சூழல் ஓய்ந்ததன் பின்னர் பொலிஸ் திணைக்களத்தினான் மூலம் நாடளாவிய ரீதியில் மக்கள் குறைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நடமாடும் சேவை நேற்று (25) சனிக்கிழமை கோளாவில் விநாயகர் வித்தியாலயத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நடமாடும் சேவையில், பிறப்பு இறப்பு சான்றிதழ் வாழங்கள் பிரிவு, சுகாதாரப் பிரிவு, ஆயுர்வேதப் பிரிவு, பொலிஸ் திணைக்கள முறைப்பாட்டுப் பிரிவு, சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, பிரதேச செயலகப் பிரிவின் காணி, திருமணச் சான்றிதழ் பிரிவு மற்றும் ஏனைய சேவைகளின் பிரிவுகளும் அங்கு இடம்பெற்றது.
இந்த சேவையின்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவிற்கான அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, கோளாவில், பணங்காடு, கண்ணகி கிராமம், வாச்சிக்குடா, நாவக்காடு போன்ற பிரதேச மக்களின் பல தேவைகள் கண்டறியப்பட்டு கணிசமானவற்றுக்கு தீர்வுகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டன. இப்பிரதேச மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து முற்று முழுதான சேவைகளை மக்களுக்கு வழங்கியிருந்தன.
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் தொற்றநோய்ப் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.எப்.நப்தா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.இஸ்மாயில் ஆகியோரினால் நடமாடும் சேவைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய சாரணர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.