ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்றும் முஸ்லிம் காங்கிரசின் திட்டம் அமீர் அலியிடம் பலிக்குமா...?

அஹமட் இர்ஷாட்-
பிரதி அமைச்சர் அமீர் அலியின் கோட்டையாக கல்குடா கருதப்பட்டாலும் ஓட்டமாவடி பிரதேச சபையே கல்குடா அரசியலினை தீர்மாணிக்கும் முதுகெலும்பாக காணப்படுகின்றது என்பனை எவறாலும் மறுத்துரைக்க முடியாத விடயமாகும். அதனை மேலும் வலுவான முறையில் உறுதிப்படுத்தும் விடயமாக 1994ம் ஆண்டிலிருந்து இற்றை வரைக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஓட்டமாவடி பிரதேச சபை விடயத்தில் வாலாட்ட முடியாமல் இருப்பதாகும்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது பாராளுமன்ற தேர்தல் 1989ம் ஆண்டு இடம் பெற்ற பொழுது ஒட்டு மொத்த கல்குடா வாழ் முஸ்லிம்களும் மர்ஹூம் மொஹைதீன் அப்துர் காதருக்கு பின்னால் ஒன்றிணைந்து வாக்களித்த சரித்திரம் வரலாறாக பதியப்பட்டுள்ளது. இருந்தும் 1994ம் ஆண்டு மொஹைதீன் அப்துர் காதர் கட்சியை விட்டு விலகி பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட காலம் தொடக்கம் இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரசினால் இடம் பெற்ற பிரதேச சபை தேர்தல்களில் எவ்வாறான அரசியல் யுக்திகளை கையண்டும் இரண்டு உறுப்பினர்களுக்கு மேல் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாமலே இருக்கின்றது. இந்த விடயமானது கல்குடாவின் அரசியல் தலைமையினை ஓட்டமாவடி பிரதேச சபையே தீர்மாணிக்கின்றது என்பதனை திட்டவட்டமாக எடுத்துக்காட்டுகின்றது.

2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்குடாவினை பிரதி நிதித்துவப்படுத்தி களமிறக்கப்பட்ட மொஹைதீன் அப்துர்காதர் வெற்றி பெற்றமையானது கல்குடா முஸ்லிம்கள் மரத்தின் நிழலின் கீழ் வளர்க்கப்பட்டவர்கள் என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தது. அதற்கு பிற்பாடு அதாவது மர்ஹும் மொஹைதீன் அப்துர் காதரின் வபாத்திற்கு பின்னர் இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரசில் பிரதி அமைச்சர் அமீர் அலி பொட்டியிட்ட பொழுது ஒட்டு மொத்த கல்குடா முஸ்லிம்களும் அமீர் அலிக்கு வாக்களித்து கல்குடா பிரதேசம் முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என்பதனை நிரூபித்திருந்தார்கள்.

ஆனால் சில மாதங்களின் பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் அமீர் அலி கட்சி மாறிய பின்னர் இடம் பெற்ற பிரதேச சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசினால் ஓட்டமாவடி பிரதேச சபையில் வாலாட்ட முடியாமல் போனது என்பது கல்குட்ட அரசியலினை மட்டுமல்ல கல்குடா பராளுமன்ற அரசியல் பிரதி நிதித்துவத்தினை ஓட்டமாவடி பிரதேச சபையே தீர்மாணிக்கின்றது என்பதனை மேலும் உறுதிப்படுத்தியது. 

அதற்கு பிற்பாடு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் லெப்பை ஹாஜியார், முஸ்லிம் காங்கிரசின் முன்னால் உயர் பீட உறுப்பினர் ஹுசைன் போன்றவர்கள் 2010ம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு எதிராக களமிறக்கப்பட்டு அமீர் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அதனை தொடர்ந்து வந்த பிரதேச சபை தேர்தலில் பிரதி அமைச்சரினால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் ஏழு பேர் சபைக்கு தெரிவு செய்யப்பட்டு ஓன்பது பிரதி நிதிகளை கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையினை இலகுவாக பிரதி அமைச்சர் அமீர் அலி கைப்பற்றியிருந்தார். அந்த தேர்தலும் முஸ்லிம் காங்கிரசினை ஓட்டமாவடி பிரதேச சபையிலிருந்து முற்று முழுதாக ஓரம் கட்டியே இருந்தது.

தற்பொழுது பிரதேச சபைகள் களைக்கப்பட்டு மீண்டு ஒரு பிரதேச சபை தேர்தலினை நாடு எதிர் நோக்கியுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கல்குடாவில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளானது ஓட்டமாவடி பிரதேச சபையினை எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற துணிச்சலுடனான திட்டமாகவே இருக்கின்றது. அதற்கு முற்றிலும் பக்கபலமாகவும், தனக்கு இருக்கின்ற மாகாண சபை உள்ளூராட்சி அதிகாரங்களை பாவித்து கட்சி சார்ந்த தீவிர அதிரடி முன்னெடுப்புக்களை கிழக்கின் முதலமைச்சர் நசீட் அஹமட் மேற்கொள்வதானது கல்குடாவில் மட்டுமல்ல முழு கிழக்கு மாகாணத்திலும் கட்சியினை வளர்ச்சி பாதையில் இட்டு செல்லக்கூடியது என முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் மத்தியில் பேசப்படும் விடயமாக மாற்றமடைந்துள்ளது.

பிரதி அமைச்சர் அமீர் அலியின் வலது கையான முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கேபிஎஸ்.ஹமீட் மற்றும் காவத்தமுணை பிரதேசத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் உறுப்பினர் மீரான் ஹாஜி போன்றவர்கள் முதலமைச்சருடன் பகிரங்கமக ஓட்டமாவடியில் வைத்து கைகோர்த்து இணைந்து கொண்டார்கள். இதனை பார்க்கின்ற பொழுது முதலமைச்சரின் அதிரடி அரசியல் காய் நகர்த்தல்கள் மூலம் ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்றுவதே முஸ்லிம் காங்கிரசிற்கு சமகால அரசியலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் முக்கிய விடயம் எனலாம். 

அது மட்டுமல்லாமல் இன்னும் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு வலது கைகளாகவும், ஆதரவாகவும் செயற்படும் முக்கிய பிரதேச சபை உறுப்பினர்களும், ஆதரவாளர்கள் மட்டுமல்லாது பரவலாக அடுத்த ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் என்று பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படுபவர்கள் கூட தன்னுடன் மிக விரைவில் பகிரங்கமாக இணைந்து கொள்ள இருக்கின்றார்கள் என முதலமைச்சர் நம்பிக்கையுடன் கூறிவருகின்றார். 

முதலமைச்சரின் நம்பிக்கையான குறித்த விடயத்தினை பார்க்கின்ற பொழுது எப்படியாவது இம்முறை ஓட்டமாவடி பிரதேச சபையினை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் யுக்திகளிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றது என்பதை இலகுவாக புறிந்து கொள்ளக்கூடிய மாறியுள்ளது.

மறுபக்கத்திலே பிரதி அமைச்சர் எனும் அதிகாரத்துடன் இருக்கும் அமீர் அலியினை முதலமைச்சரோ அல்லது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களோ குறைத்து மதிப்பிடுவார்களாயின் இது வரைக்கும் முஸ்லிம் காங்கிரசினால் ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தினை கைப்பற்ற முடியாமல் போன வரலாறே அவர்களுக்கு மீண்டும் பரிசாக கிடைக்கப்பபோகின்றது என்பதுதான் எதிர்வு கூறலாக அமையும். 

பிரதி அமைச்சர் அமீர் அலி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்துடன் ஆரம்ப காலங்களில் அதிக நட்பினை கொண்டிருந்த படியினால் ஒரு போராட்ட அமைப்பின் தலைவன் எவ்வாறான முடிவுகளை எடுப்பானோ அதைப்போன்றே தேர்தல் காலங்களில் பிரதி அமைச்சர் அமீர் அலி சில தேர்தல் வியூகங்களையும், எதிர்க்கட்சியிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காக பல அரசியல் காய் நகர்த்தல்களையும் சாதுரியமான முறையில் மேற்கொள்வார். அதனால் ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்றும் முஸ்லிம் காங்கிரசின் திட்டமானது இறுதியில் தவிடு பொடியாக்கப்படலாம் என்பதும் இங்கு நிதானமக யோசிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

கடந்த அரசாங்கத்திலே சகல அதிகாரத்தினையும் தன்னிடம் வைத்திருந்த முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்சவிடம் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொண்டு மஹிந்தைக்கே தண்ணீர் காட்டிய அமிர் அலியிடம் மாகாண சபை அதிகாரத்தினை வைத்திருக்கும் முதலமைச்சரின் ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்றும் என்ற திட்டம் பலிக்குமா என்ற கேள்வியும் இருக்கத்தான் செய்கின்றது. 

ஆனால் விடாப்பிடியாக முஸ்லிம் காங்கிரசினை மாவட்டத்தில் மட்டுமல்லாது முழு கிழக்கு மாகாணத்திலேயுமே தூக்கி நிறுத்த போவதாக களத்தில் இறங்கி அதிகாரம் கலந்த அரசியல் சானக்கியத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கிழக்கின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் ஆளுமைமிக்க அதிரடி நடவடிகைகளின் ஒரு பிரிவான ஓட்டமாவடி பிரதேச சபையினை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவது என்ற திட்டம் முக்கியமான விடயமாக கல்குடாவில் மாற்றமடைந்துள்ளது என்பது கல்குடாவில் சூடு பிடித்துள்ள சமகால அரசியலாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -