ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-
புத்தளம் மாவட்டம், கற்பிட்டி பிரதேசத்தில் முசல்பட்டி கிராமத்தின் நீண்ட கால பிரச்சினையாக இருந்து வரும் சுத்தமான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கு முடிந்தததையிட்டு தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அங்கு நிறுவப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு இயந்திர தொகுதியை (RO Plant) வியாழக்கிழமை (02) பிற்பகல் சென்று கண்காணித்த பின்னர், கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அங்கு பொருத்தப்படுவதன் பயனாகவும், அந்த இடத்திற்கு அண்மையில் நிறுவப்பட்டுவரும் 1,60,000 கன லீற்றர் கொள்ளளவுடைய நீர் தாங்கியின் ஊடாகவும் 15,000 மக்கள் நன்மையடையவுள்ளதாகவும் குறிப்பட்ட அமைச்சர், இதன் அடுத்த கட்டமாக சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு 30,000 பேருக்கு கிட்டவுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
பொதுவாக கற்பிட்டி பிரதேசத்தில் நிலக்கீழ் நீர் மாசடைந்திருப்பதன் விளைவாக நீலக் குழந்தை சிண்ட்ரோம் (Blue Baby Syndrome) போன்ற பாரதூரமான உயிர் கொல்லி நோய்கள் ஏற்படுவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், அப்பகுதியில் பொதுவாக மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக மருத்துவ நிலையமொன்றை நிறுவுவதற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தம்முடன் அங்கு வந்திருந்த சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் கூறினார்.
அமைச்சருடன் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ், எச்.எம்.ரயீஸ், தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் எம்.ஐ.எம்.லத்தீப், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன், புத்தளம் அமைப்பாளர் ஜவ்பர் மரிக்கார் உட்பட முக்கியஸ்த்தர் பலர் அங்கு வந்திருந்தனர்.