
மன்னார் பெரியகடையில், மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இன்று (25/06/2016) பிரதம அதிதியாகப் பங்கேற்று அமைச்சர் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் இங்கு உரையாற்றுகையில்;
யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்கியதால் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அநேகர் வீடுகளை இழந்தனர். அந்த வகையில் மன்னாரில் வாழும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டு தமது வீடுகளையும், சொத்துக்களையும் இழந்தனர். யுத்தத்தினால் பல வீடுகள் அழிந்தன. இன்னும் பல வீடுகள் அழிக்கப்பட்டன. சொத்துக்களை இழந்தவர்கள் அழிக்கப்பட்ட தமது வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த காலங்களில் உலக வங்கி வடக்கு, கிழக்கு புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் பல வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கின்றது. ஆனால் மீண்டு மீண்டும் ஏற்பட்ட மோதல்களால் அந்த வீடுகளும் அழிந்த வரலாறுகள் இருக்கின்றன. அதேபோன்று ஐரோப்பிய யூனியன், இந்திய அரசாங்கம் ஆகியவையும், காலத்துக்குக் காலம் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கின்றன. எனினும் வடக்கிலே இன்னும் 130,000 வீடுகளுக்கான தேவை தமக்கிருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகவும் இருக்கின்றது.
65000 வீடுகளை அமைப்பதற்கான கருத்திட்டம், அரசியல் கருத்து வேறுபாடுகளின் காரணமாக காலதாமதமாகிக் கொண்டிருப்பது வேதனையானது. எனினும், இதனை வெகுவிரைவில் சரிசெய்ய முடியுமென நான் பெரிதும் நம்புகின்றேன்.
மன்னார் நகரத்தைப் பொறுத்தவரையில் நான் நடந்து திரிந்த இடம். பாடசாலைக் காலங்களில் மன்னார் நகருக்கு நான் அடிக்கடி வந்து போவதுண்டு. எனது தந்தையார் கூட மன்னார், பெரியகடையில் கடையொன்ற வைத்திருந்தார்.

நமக்குள் அரசியலில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் நலன் என்று வரும்போது விட்டுக்கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் செயற்படுவதே காலத்தின் கட்டாயமாக உள்ளது.
அத்தனையையும் இழந்து வாழும் நமது சமூகத்தை முன்னேற்ற, சில்லறைப் பிரச்சினைகளைக் களைந்துவிட்டு, ஐக்கியமாக செயற்பட வேண்டுமென நான் அன்பாகக் கோருகின்றேன். இதன் மூலமே மன்னார் மாவட்டத்தின் வீட்டுப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை ஆகியவற்றைத் தீர்த்துவைக்க முடியும் என்பதே எனது பணிவான கருத்தாகும் என அமைச்சர் கூறினார்.