எம்.வை.அமீர் -
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வின் வெற்றிக்கு துணை நின்றவர்களை மறக்காமலிருப்பதும் அவர்களை நன்றியுடன் நினைவு கூருவதும், மனிதாபிமானத்தின் மிகப்பெரிய வகிபாகமாகும் என கல்முனை தமிழ் எழுத்தாள் சங்கத்தின் தலைவரும் உலமா கட்சியின் தலைவருமான தெரிவித்தார்.
கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் லக்ஸ்டோ அமைப்பின் வழிநடத்தலில் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் நடை பெற்ற இப்தார் நிகழ்வின் போது தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
அண்மைக்காலமாக நமது நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் நோன்பு திறக்கும் நிகழ்வான இப்தார் நிகழ்வு மிக அதிகமாக காணக்கிடைப்பது என்பது ஒரு சந்தோசமான விடயமாகும். ஒரு நோன்பாளிக்கு நோன்பு துறக்க வைப்பது என்பது நபிகள் நாயகத்தால் மிகவும் விதந்துரைக்கப்பட்ட விடயமாகும். இது விடயத்தில் பணக்காரர்கள் மட்டுமல்ல ஏழைகளும் தமது சக்திக்கேற்ப தமது அயலவர்களுடன் இப்தார் செய்வித்தலை நடத்த முடியும்.
இத்தகைய இப்தார் நிகழ்வுகள் மூலம் பரஸ்பர சந்திப்புக்கள் எற்படுவதுடன் நமது ஒற்றுமையையும் எடுத்துக்காட்டக்கூடியதாக உள்ளது.
நாங்கள் முஸ்லிம்களாக இருந்த போதும் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் என்ற வகையில் நாம் தமிழ் எழுத்தாளர்கள் என்ற யதார்த்தத்தை மறுக்க முடியாது. அதன் காரணமாகவே கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கம் என பெயரிட்டு இன்று எமது இரண்டாவது வருட இப்தார் நிகழ்வை இங்கு நடாத்துகின்றோம். எமது சங்கம் இன மத பேதங்களுக்கப்பால் தமிழ் எழுத்தாளர்களின் சங்கமாக தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே எமது அவா. எந்த வொரு விடயத்துக்கும் அடித்தளம் முதலில் இடப்பட வேண்டும் என்ற வகையில் கல்முனை தமிழ் எழத்தாளர் சங்கம் என்பதற்கான அடித்தளத்தை நாம் இட்டுள்ளோம். இதனை எழுத்தாளர்கள் முன்னெடுக்கும் போது அவர்களுக்கு வழி விட்டு வழி நடாத்த நாம் தயாராக உள்ளோம்.
இன்று நாம் பல எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் என பார்க்கும் போது நமது வெற்றிக்கு துணை நின்ற பலரை நாம் மறந்து விடுகிறோம். அதே நேரம் நமது முன்னேற்றத்துக்கு தடையாக நின்றவர்களை நாம் மறப்பதில்லை. ஆகவே நமக்கு துணை நின்றவர்களை மறந்து விடுவது மனிதப்பண்பல்ல. குறிப்பாக நமக்கு கல்வி கற்றுத்தந்தோர், வாழ்க்கைக்கான பாதைகளை காட்டித்தந்தோர் தமது வயதான காலத்தில் கஷ்டத்தில் இருக்கும் போது அவர்களை சந்தித்து அவர்களுக்கு நன்றி கூறுவதும், முடிந்தளவு அவர்களுக்கு உதவி செய்வதும் நமது கடமை என்பதை நாம் மறக்கக் கூடாது என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.
லக்ஸ்டோ அமைப்பின் சார்பில் அதன் தலைவர் மருதூர் அன்சாரின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சப்னா அமீனின் உள்ளம் கேட்குமே கவிதை இருவட்டும் இமயம் சஞ்சிகை அறிமுகமும் சிறந்து கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கத்து.
கல்முனை மாநகரசபை உறுப்பினரும் வரலாற்று ஆய்வாளருமான பரக்கத்துல்லாஹ் மற்றும் முதிர்ந்த எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.