பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனையயைச் சேர்ந்த றுடானி ஷாஹிர் சட்டக்கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து சட்டத்தரணியாகும் தகுதியைப் பெற்றுள்ளார் இவர் மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்முனை கூட்டுறவுச் சங்கக் கிளை முகாமையாளர் எஸ்.எம்.ஸாஹிர், எப்.எம்.பௌஸூல் ஹினாயா தம்பதியின் புதல்வரும், ஓய்வு பெற்ற வட்டாரக்கல்வி அதிகாரி மர்ஹூம் அபுல்கலாம் பழீல் மௌலானாவின் பேரனுமாவார்.
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய தொழில்நுட்ப முகாமைத்துவ பீடத்திற்குத் தெரிவானார். 2013ஆம் ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி அகில இலங்கைரீதியில் 8ஆம் இடத்துக்குத் தெரிவானார்.
சட்டக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே புறக்கிருத்திய செயற்பாடுகளில் ஆர்வம் கொண்ட இவர் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தினால் நடாத்தப்பட்ட பல சிறப்பு போட்டிகளில் வெற்றிபெற்று தடம்பதித்தார்.
2014,2015ஆம் ஆண்டகளில் நடாத்தப்பட்ட எஸ்.ஆர்.கனகநாயகம் ஞாபகார்த்த கட்டுரைப்போட்டிகளில் முறையே வெண்கலம் மற்றும் தங்கப்பதக்கங்களையும், 2014, 2015ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த பொது அறிவுப் போட்டிகளிலும் முறையே வெண்கலம் மற்றும் தங்கப்பதக்கங்களையும் வெண்றார்.
மேலும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற மர்ஹூம் பாக்கிர் மாக்கார் ஞாபகார்த்த விவாதப் போட்டியிலும் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தையும் வெண்றார். மேலும் இதே ஆண்டு நடைபெற்ற அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம்; ஞாபகார்த்த பாராளுமன்ற விவாதப் போட்டியிலும் தங்கப்பதக்கத்தை வெண்று சிறந்த விவாதியாகவும்,பாராளுமன்ற விவாதிகள் அணியின் தலைவராகவும் தெரிவானார்.
2014ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட திரு சுவாமிநாதன் வழக்காடு மன்றப் (moot court) போட்டியிலும் 2015ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட திரு குமாரசுவாமி வினோதன் ஞாபகார்த்த வழக்காடு மன்றப் போட்டியிலும் கலந்து சிறந்த வழக்காடு மன்றப் பேச்சாளர் என்ற பட்டத்தை பெற்று தங்கப் பதக்கங்களையும் வென்றார்.
சட்டக்கல்லுரி அரசியலில் தீவிர செயற்பாட்டாளரா தொழில்பட்ட இவர் சட்டக்கல்லூரியின் சுயாதீன கட்சியை (Independent Party) பிரதிநிதித்துவம் செய்து 2015ஆம் ஆண்டில் சட்டமாணவர் சிங்கள சங்கத்தின் உபதலைவராகவும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் சட்டக்கல்லூரி சுற்றாடல் கழகத்தின் சிரேஷ்ட ஊடக இணைப்பாளராக (2014)செயற்பட்ட இவர் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தேசிய பொதுச் செயலாளராகவும் பணியாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.