முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணைத்துக் கொள்ளும் தகவல் பொய்யானது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் தலைவராக கோத்தபாய ராஜபக்சவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித அடிப்படையும் கிடையாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமைகளை பொறுப்பேற்றுக் கொள்ள போதியளவு இளைஞர்கள் இருக்கின்றார்கள்.
இரண்டாம் நிலை தலைவர் ஒருவரை கட்சிக்கு வெளியே இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சியிலிருந்து நாட்டை மட்டுமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மீட்டு எடுத்திருந்தார்.
இன்று சுதந்திரக் கட்சியின் உள்ளக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் கட்சியில் குடும்ப மரங்களை உருவாக்கிக் கொள்ள எவருக்கும் இடமளிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.