சகல மதங்களின் தலைவர்களும் இந்நாட்டின் ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கும் பாடுபட வேண்டும். அதற்கான செயற்றிட்டங்களை வகுக்க வேண்டும். இடைக்கிடையே உருவாகும் சமய தீவிரவாதத்தினை தடுப்பதற்கான பங்களிப்பினைச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி சிறிசேன சகல மதங்களின் தலைவர்களையும் வேண்டிக் கொண்டார். மதமாற்றம் மற்றும் தீவிரவாதம் போன்றவற்றைத் தடுத்து பிரச்சினைகள் உருவாகாமலிருக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கோரினார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வமத தலைவர்களுடனான சந்திப்புக்கு தலைமை வகித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்தார்.
நாட்டில் சமயங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் தேசிய ஒருமைப்பாட்டினையும் பலப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுள்ள ஆர்வத்தை சமயத் தலைவர்கள் பாராட்டியதுடன் இந்தத் திட்டத்துக்கு தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாகத் தெரிவித்தனர்.
பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த 25 மதத்தலைவர்கள் கலந்துரையாடலில் பங்குகொண்டனர். பௌத்த மதத் தலைவர்கள் 10 பேரும் ஏனைய மதங்களான இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களின் தலா 5 தலைவர்களும் இதில் அடங்குகின்றனர்.
முஸ்லிம்களின் தரப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஷ்வி முப்தி, பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ. முபாரக், பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மட், அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல், மௌலவி ஹஸ்புல்லாஹ் என்போர் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஷ்வி முப்தி கலந்துரையாடலில் இஸ்லாமிய மதம் தொடர்பான விளக்கங்களை வழங்கினார். அவர் தனது உரையில், இவ்வாறான ஒரு நற்காரியத்தை சர்வமதத் தலைவர்கள் ஆரம்பித்திருப்பதை இனவாதிகள் பலவாறாக விமர்சிக்கலாம்.
விமர்சனங்களுக்கு அஞ்சாது நாட்டின் நலன்கருதி புரிந்துணர்வுக்கும் நல்லிணக்கத்துக்குமாக நாம் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். இஸ்லாம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் போதித்துள்ளது. குர்ஆன் இதனைத் தெளிவாக விளக்கியுள்ளது. சமாதானத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தில் பலாத்கார மதமாற்றம் மறுக்கப்பட்டுள்ளது. பலாத்கார மதமாற்றம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை. ஒருவர் மதம் மாறிக் கொள்வது அவரது சுய விருப்பமாகும். மதமாற்றம் இஸ்லாத்தில் பலவந்தப்படுத்தப்பட வில்லை.
இஸ்லாம் பிற மதங்களை நிந்திப்பதையும் கொச்சைப்படுத்துவதையும் அனுமதிக்கவில்லை. பிற மதங்களை நிந்திப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. உங்களது மதம் உங்களுக்காகும். எமது மதம் எங்களுக்காகும்.
ஒவ்வொரு மதத்தலைவர்களும் இந்த செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்காக தங்களது திட்டங்களை முன்வைக்க வேண்டும். செயலமர்வொன்றினை ஏற்பாடு செய்து அந்தத் திட்டங்கள் கலந்துரையாடப்பட்டு செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
பெல்லன்வில தேரர் கலந்துரையாடலில் கருத்து வெளியிடுகையில் சர்வ மதத் தலைவர்களான நாம் முன்னெடுக்கும் திட்டங்களை சிலர் எதிர்ப்பார்கள். சமூக வலைத்தளங்கள் முகநூல்களில் விமர்சிப்பார்கள். இவற்றை நாம் பொருட்படுத்தக் கூடாது.
நாட்டினதும் நாட்டின் பல்லின மக்களினதும் நலன் கருதி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார். மாலை 5 மணிக்கு ஆரம்பித்த கலந்துரையாடல் நோன்பு துறக்கும் நேரம் வரை நீடித்தது. சர்வமதத் தலைவர்கள் அங்கு இடம்பெற்ற இப்தார் வைபவத்திலும் கலந்துகொண்டு விடைபெற்றனர்.
சர்வ மதத் தலைவர்களின் அடுத்த அமர்வு எதிர் வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. அடுத்த அமர்வில் அனைத்து மதங்களும் இது தொடர்பான தமது திட்டங்களை முன்வைக்கவுள்ளன. -ARA.Fareel-