ஊடகவியலாளர்கள் ‘கூலிக்கு எழுதுகிறார்கள்’ என்று மேடைகளில் கூறுவது கண்டிக்கத்தக்கது - ADJF

றிசாத் ஏ காதர்-

டகவியலாளர்கள் கூலிக்கு எழுதுகின்றார்கள் என்று கூறி ஊடகத் தொழிலை தரக் குறைவாக பேசுவதை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் வன்மையாக கண்டிக்கின்ற அதேநேரத்தில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியாளர் போரத்தின் மாதாந்த கூட்டம் ஆலையடிவேம்பில் 29.05.2016 ஆம் திகதி போரத்தின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிராந்திய ஊடகவியாளர் ஒருவரினால் ‘ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுதல்’ தொடர்பான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது. இப்பிரேரணை சபையில் விவாதிக்கப்பட்டுரூபவ் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன்ரூபவ் போரத்தின் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் எம்.சஹாப்தீனின் ஒப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

ஊடகத்துறை என்பது மிக உன்னதமான தொழிலாகும். ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் நான்காவது பெரிய தூணாக ஊடகத்துறை இருக்கின்றது. இத்துறை எந்தளவுக்கு பலம் வாய்ந்தது என்பதற்கு உலகளவில் பிரபலமான "வோட்டர் கேற்" விவகாரம் தொடக்கம் அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் வரை பல உதாரணங்களை எடுத்துக் கூறலாம். இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் உண்மையை எழுதியதற்காக அரசியல்வாதிகளை விமர்சித்தமைக்காக நமது நாட்டில் சுமார் 20 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். 

இன்னும் சிலர் காணாமல் போய் இருக்கின்றார்கள். இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்கு மத்தியிலும் இலங்கையில் பல நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் முழுநேரமாகவும் பகுதி நேரமாகவும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டில் உள்ள மக்களின் நலன்களுக்காகவும் நியாயத்திற்காகவும் குரல் கொடுப்பதே அவர்களது தார்மீக கடமையாக இருக்கின்றது. ஊடகவியலாளர்கள் எப்போதும் தமக்கு சாதகமாகவே எழுத வேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகளும் நினைக்கின்றார்கள். இது நடைமுறைச் சாத்தியமற்றது.

எனவே, இந்த நிலைப்பாட்டை நல்லாட்சி அரசாங்கம் மாற்றியமைக்க வழிசெய்ய வேண்டும். ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளுக்கு பொறுப்புக் கூறுபவர்கள் அல்லர். அவர்கள் மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள். அரசியல்வாதிகளுக்கு பின்னால் திரிபவர்களும் அவர்களுக்கு பொறுப்புக்கூறுபவர்களும் உண்மையான ஊடகவியலாளர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.

சில சிறுபான்மையின அரசியல்வாதிகள் தம்மை விமர்சிக்கின்ற ஊடகவியலாளர்களை அழுத்தத்தின் மூலமும் வேறு வழிமுறைகளிலும் அடக்கி ஆளுவதற்கு நினைப்பது யுத்தத்திற்கு பின்னரும் அவதானிக்கப்பட்டு வருகின்றது. ஒரு அரசியல்வாதியின் தவறை சுட்டிக்காட்டும் ஊடகவியலாளர் மற்றைய தரப்பு அரசியல்வாதியிடம் கையூட்டல் பெற்றுவிட்டதாக அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுகின்றனர்.

பின்பு மற்றைய அரசியல்வாதி பற்றி எழுதினால் பணம் பெற்றுவிட்டதாக இந்த அரசியல்வாதி சொல்கின்றார். உண்மையில் பொதுவாக அநேகமான ஊடகவியாளர்கள் அரசியல்வாதிகளைப் போல பட்டம் பதவிகளுக்கோ பணத்திற்கு சோரம் போகின்றவர்கள் அல்லர். அரசியல்வாதிகளே ஊடகவியலாளர்களால் பயன்பெற்றுள்ளனர். ஊடகவியலாளர்களை ஏணியைப் போல் பயன்படுத்தி விட்டு காலத்துக்கு காலம் எட்டி உதைக்கின்றனர்.

இந்த அபத்தமான செயற்பாடுகளை சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த போரம் கோருகின்றது.

அண்மைக்காலமாக சில அரசியல்வாதிகள் ஊடக சுதந்திரத்தின் மீது கை வைத்துள்ளனதாக அறியவருகின்றது. தகவல் அறியும் சட்டமூலம்அமுலுக்கு வரவிருக்கின்ற சூழலில் அதற்கு எதிரான செயற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. 

ஓரிரு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் ‘கூலிக்கு எழுதுகின்றார்கள்’ என்றும் அடிப்படையற்ற விதத்தில் ‘பக்கச் சார்பாக செயற்படுகின்றார்கள்’ என்றும் கூறி வருவதை எமது போரம் கவனத்திற்கு எடுத்துள்ளது. இவ்வாறு இவர்கள் ஊடகவியாளர்களை தரக் குறைவாக சித்தரிக்கும் மட்டமான கருத்தை ஒன்றுக்கு மேற்பட்ட மேடைகளில் பகிரங்கமாக பேசியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

ஊடகவியலாளர்களின் செய்தியில் ,கட்டுரைகளில் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அதற்கு கருத்தினால் பதிலளிக்கலாம். அல்லது பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக் குழுவில் முறையிடலாம் அதைவிடுத்து ‘கூலிக்கு எழுதுகிறார்கள்’ என்று மேடைகளில் கூறுவது கண்டிக்கத்தக்கதாகும். அத்தோடு ஊடகவியலாளர்கள் பெரும்பாலும் மக்களின் எண்ணங்களையே எழுதுகின்றனர். ஆகையால் ‘அவர்கள் எழுதும் விடயங்கள் குறித்து நாம் அலட்டிக் கொள்ள மாட்டோம்’ என்று கூறுவதும் மக்களை புறக்கணிப்பதற்கு ஒப்பானதாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே ஊடகவியலாளர்களை தரக் குறைவாக பேசுவதை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரம் கண்டிக்கின்ற அதே நேரத்தில் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான கருத்துக்களை அரசியல்வாதிகள் யாரும் வெளியிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கின்றது.

அத்தோடு இனிவரும் காலங்களில் ஊடகத்துறையை கேவலமாக பேசுகின்ற யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு போரம் அழுத்தம் கொடுக்கும் என்பதையும் இத்தால் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -