திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை பிரதேசத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியோடு பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாகவும்;, அநுராதபுர வடக்கிலுள்ள பெரியதொரு வாவியான வாகல்கட வாவியின் மூலம் அநூராதபுர வடக்கு பிரதேசத்திற்கும், புல்மோட்டை, குச்சவெளி ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் ஏறத்தாழ 400 மில்லியன் டொலர் செலவில் பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புல்மோட்டை பிரதேசத்தில் 450 குடும்பங்குக்கு இலவச குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (17) புல்மோட்டை அரபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
அமைச்சுப் பொறுப்பை ஏற்று ஒருசில மாதத்திற்குள் புல்மோட்டையில் நீர் வழங்கல் திட்டமொன்றை திறந்து வைப்பதற்காக வந்து திறந்து வைத்துவிட்டு சென்றோம். அதன் பின்னர் தான் இத்திட்டத்திலுள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் படிப்படையாக எமக்கு தெரிய வந்தது. உண்மையில் இங்கு வழங்கப்பட்ட திட்டமானது நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் உருவாக்கப்பட்ட திட்டம் அல்ல என்பதை முதலில் இங்கு பதிவு செய்துகொள்கின்றேன்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஜப்பான் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உதவித் தொகையை வைத்து ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு நாங்கள் ஓரளவு உதவி வழங்கி இருந்தோம். அதனை அமுல்படுத்தி வைத்து எங்களை செயற்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், இத் திட்டத்தில் நிறைய தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தன. அத்தோடு நீர் மூலம் சம்பந்தமான பிரச்சினைகளும் இருந்தன. 'டக்வெல்ஸ்' எனப்படும் 4 கிணறுகள் தோண்டப்பட்டு அதன் மூலம் பெறப்படும் நீரின் தரம் குறித்த பிரச்சினையும் எழுந்தது. கிட்டத்தட்ட எங்களுடைய நீர்த்தாங்கியில் 450 கனமீற்றர் நீரை தான் சுத்திகரித்து வழங்குவதற்கு தயார் செய்து இருந்தோம். சில கிணறுகளில் இவ்வளவு நீரை பெற முடியாதிருக்கும் நிலையில் இப்போது மட்டுப்படுத்தப்பட்டளவில் ஒரு நாளைக்கு 2 மணித்தியாலயங்கள் மாத்திரமே நீரை வழங்கும் நிலவரம் காணப்படுகின்றது.
நீரினுடைய தரத்தை அதிகரிப்பதற்கு செலவாகும் நிதித்தொகை அதிகப்படியாக இருப்பதனால் இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யக் கூடிய வழிவகைகளை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கான ஒதுக்கீடுகளை பெற்று அதனை செய்வதற்கு முயற்சிக்கின்றோம். ஏறத்தாழ 3000 குடும்பங்கள் வசிக்கின்ற புல்மோட்டை கிராமத்தில், அதாவது, 15000 மக்கள் வாழ்கின்ற ஒரு ஊரில் ஆரம்ப கட்டமாக 500 இணைப்புக்களை தான் வழங்கினோம். இன்று இந்நிகழ்வின் மூலம் 420 இணைப்புக்களை கூடுதலாக வழங்குகின்றோம். இணைப்புக்களின் தொகையை அதிகரிக்கலாம். ஆனால், அதன் மூலம் பெறப்படும் நீரின் அளவு குறைவாகத் தான் இருக்கும் என்ற சிக்கலொன்றும் உள்ளது.
புல்மோட்டை பிரதேசத்திற்கு நீர் வழங்கும் திட்டத்தை அரைகுறையாக வழங்காமல் நிரந்தரமான தீர்வொன்றை நான் அமைச்சராக இருக்கும் காலத்திலே காணும் விதத்தில் முயற்சிகளை தற்பொழுது முன்னெடுத்துள்ளோம்.
இந்நாட்டிலுள்ள சகல நீர் வழங்கல் திட்டங்களுள் மிகவும் பெரிய செலவினத்தை கொண்டதாக இத்திட்டம் அமையும். கொழும்பில் கூட இவ்வளவு பெருந்தொகை செலவிலான கொண்ட திட்டமொன்றை நாங்கள் இதுவரையில் ஆரம்பிக்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இயங்குகின்ற சிறுநீரக நோய்க்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் செயலணியின் ஊடாக அநுராதபுர வடக்கு மற்றும் புல்மோட்டை பிரதேசத்திற்கு இதனை ஒரு உபாயமார்க்கமாக செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி தற்போது பெரும் பலனளித்துள்ளது.
இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான கடனுதவியை உலக நாணய நிதியிடமிருந்து பெறுவதில் எதுவித சிக்கல்களும் எழாமல் இருப்பதற்காக இப் பிரதேசமானது சிறுநீரக நோய்க்கு பாதிப்புள்ளாகும் பிரதேசமாக காணப்படுவதால் மனிதாபிமான அடிப்படையில் தீர்வொன்றை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையொன்றை முன்வைத்து ஓரளவிற்கு அதில் வெற்றியடைந்துள்ளோம். எனவே, மிக விரைவில் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்போம். இதற்காக சகல விதத்திலும் எமது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் அபிவிருத்தி சம்பந்தமாகவும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரபாத் வித்தியாலய அதிபரினால் இங்கு வடிகால் திட்டம் முறையாக இல்லாமையினால் மாரி காலத்தில் மழை நீர் சுமார் 3 அடி உயரத்திற்கு தேங்கி நிற்பதனால், பூரணமான வடிகால் திட்டமொன்றை அமைத்து தர வேண்டுமென கூறியிருக்கின்றார். எமது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிடம் இதற்காக திட்டவரைவொன்றை சம்பந்தப்பட்ட அமைச்சுடன் இணைந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கின்றேன். அத்தோடு, கேட்போர் கூடமொன்று அமைத்து தரவேண்டுமெனவும் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஆரம்ப கால கட்டத்தில்; கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைகின்ற போது பலவிதமான நெருக்கடிகளை சந்தித்தோம். ஏனென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தனித்துவமான இயக்கம் என்ற அடிப்படையில்; வடகிழக்கு மாகாண சபையாக இருந்து வந்த நிலையில் கிட்டத்தட்ட 2 தசாப்தங்களுக்கு மேல் கலைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபையின் ஆட்சி நிருவாக ரீதியிலான பலருடைய கைகளில் நீண்ட காலம் மாறி மாறி இருந்தது.
அக்கட்டத்தில் ஆளுநர் என்ற பதவி எதுவித அரசியல் தலையீடுகளும் இல்லாத நிலையில் படையதிகாரிகள் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்கள் அப்பதவியை ஏகபோக சர்வதிகார ஆட்சியாக நடத்தி கொண்டு நடத்தினார்கள்.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபைக்கு 2008ஆம் ஆண்டு என்னுடைய பாராளுமன்ற ஆசனத்தை துறந்துவிட்டு திருகோணமலை மாவட்டத்தில் வேட்பாளராக களமிறங்கினேன். அதிலும் அவர்களே நிறைய வாக்கு மோசடிகளை செய்து வெற்றியடைந்து விட்டார்கள். ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் நாம் இணைந்து போட்டியிட்ட காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றது. அதிலும் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெறவேண்டுமென ஹிஸ்புல்லாஹ் சபதம் எடுத்து எங்களுடைய கட்சியை விட்டு வெளியேறி போதியளவிலான வாக்குகளை வெற்றிலை சின்னத்திற்கு பெற்றுக்கொடுத்தார். இருந்தபோதிலும், அன்று அந்த ஆளுநர் பதவி பிள்ளையானுக்கே வழங்கப்பட்டது. இதனை அவர்களால் தடுக்க முடியாது போனது. ஆனால், அந்த ஆட்சியிலும் பிள்ளையான் எவ்வளவு தான் போராடினாலும், ஆளுநருடைய ஏதேசியதிகாரம் கொண்ட அரசியல் என்ற விடயம் தொடரவே செய்தது.
அந்த அடிப்படையில் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு ஒரு நல்லாட்சியை கொண்டு வந்துள்ளோம். இப்பொழுது மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த ஆட்சியில் பாதுகாப்புத் துறையில் அங்கம் வகிக்காத சிவில் ஆளுநர் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே நாம் நல்லாட்சி அரசாங்கத்திடம் முதலாவதாக முன்வைத்த கோரிக்கையாகும். அக்கோரிக்கைய தற்போது அமுல்படுத்தியுளள போதிலும், அந்த ஆளுநரின் சுபாவம் மாறியுள்ளதா என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது.
இத்தகைய சூழலில் பிரச்சினைகள் மீளவும் தலைத்தூக்காதவாறு நாம் பக்குவமாகத்தான் கையாள வேண்டும். எங்களுடைய முதலமைச்சர் ஓர் இடத்தில் சற்று பக்குவம் தவறிவிட்டார் என ஒரு புரளி கிளம்பியது. வருகின்ற பிரச்சினைகள் யாவும் இராணுவம் சார்ந்த புரளியாகத் தான் உள்ளன. வாய் தவறிக்கூட கொஞ்சம் கோபமாக பேச முடியாத நிலையுள்ளது. தவறி பேசிவிட்டால், நாடே அதிர்ந்து போகும் அளவுக்கு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர். இந்த நாட்டிலுள்ள ஒரு சிக்கலான விடயம்.
குறிப்பிட்ட நிகழ்வின் பின்னர் இந்த முதலமைச்சர் உலகமெங்கும் பிரசித்தமடைந்துவிட்டார். தற்போது அதுவல்ல பிரச்சினை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சியை வேறு தலையீடுகள் இல்லாமல் முன்னெடுப்பதற்கு வழி உள்ளதா என்பது தான் கேள்வியாக எழுந்துள்ளது. இது வடமாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள ஒரு பெரிய பிரச்சினையாகவுள்ளது. இதில் தான் முஸ்லிம் காங்கிரஸ் தீவிரமாக அரசியலில் அடுத்த கட்ட நகர்வினை யோசிக்க வேண்டியதாகவுள்ளது.
நல்லாட்சியைக் கொண்டு வந்துவிட்டோம் ஒரு பிசாசை விரட்டியடித்தோம். திரும்பியும் அந்தப் பிசாசு வாராமாதிரி பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாங்கள் கொஞ்சம் பக்குவமாக இருக்கவேண்டும். ஆனால், மேலாதிக்கவாதிகளின் கெடுபிடியிலிருந்து இந்த மண்ணில் இருக்கின்ற சகல விதமான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு வர வேண்டும் என்பது மிக இலேசாக இந்த நல்லாட்சியில் இரவோடு இரவாக செய்யக் கூடிய ஒன்றல்ல.
நடந்த பிரச்சினைகள் இவ்வளவு பூதாரகரமாக வருவதற்கு ஒரு சம்பவம் ஒரு சரித்திரமானதா மாறுகின்ற அளவுக்கு என்ன காரணம் என்று கேட்டால், அது இனவாதமே அன்றி வேறொன்றல்ல என்று எல்லோருக்கும் புரிந்திருக்க வேண்டும். அது நடுநிலைவாதிகளாக சிந்திக்கின்ற எந்த இனத்தவரைச் சார்ந்தவராக இருந்தாலும், அது விளங்கும்.
அண்மையில், பாராளுமன்றத்தில் வடக்கிலுள்ள பிரச்சினைகள் போன்று நாங்கள் கிழக்கிலும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றோம் என்று கூறியிருந்தேன். இது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள விதந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெனீவாவினால் இந்த அரசாங்கத்திற்கு கொடுத்திருக்கின்ற பிரேரணையின் மீதான அழுத்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் போது இதற்கான முக்கிய இடம் புல்மோட்டைக்கும் வழங்கப்பட்டுள்ளது.
13ஆம், 14ஆம் கட்டையிலிருந்து மண்கிண்டி முகாம் வரையிலும் அரிசி மலை வரையிலும் இப்பிரச்சனை வியாபித்து இருக்கின்றது. ஆனால், அதற்கான முடிவுகள் இதுவரையில் எட்டப்படவில்லை.
அடிக்கடி வலிகாமம் வடக்கிலுள்ள காணிப் பிரச்சினைகள் பேசப்படுகின்றதை போல் புல்மோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் முழு கிழக்கு மாகாணத்திலும் அதே மாதிரியான காணிப் பிரச்சினைகள் உள்ளன. இங்குள்ள 30 ஏக்கரிலும் மேலான நிலப்பகுதி இராணுவ முகாமின் தேவைக்கு மேலதிகமாக மக்கள் காலம் காலமாக பயிர் செய்கைக்காக பயன்படுத்திய காணிகளில் வேலி அடைக்கப்பட்டு 'உட்புகுதல் தடை' அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது. இப்போழுது விசேட அதிரடி படையினருக்கும் 10 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகக் கூறுகின்றார்கள்.
முன்னைய ஆட்சியில் இந்நடவடிக்கைகளை சகித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், இந்த நல்லாட்சியிலும் இந் நிலைமை நீடிப்பதால் மக்கள் கேள்வி கேட்பதற்கு தொடங்கியுள்ளனர். இதற்கான விடைகளை தலைமைகள் தான் காண வேண்டும் என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இவற்றுக்கெல்லாம் விடை காண வேண்டுமெனில், எந்தவொரு நிலையிலும் பேரம் பேசும் அரசியல் சக்தி எங்களிடம் இருக்க வேண்டும். அதற்காகத் நாங்கள் ஒருபோதும் தேர்தலில் வெற்றிலையுடன் போய் சரணடைந்து, சங்கமமாகவில்லை. எங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிடுவது இல்லையென்றால் எதிர்கட்சியில் ஐ.தே.க.உடன் சேர்ந்து போட்டியிடுவது என்ற அடிப்படையில் தான் எங்களுடைய அணுகுமுறை இருந்தது.
இதைவிட வேறு வியூகங்களை நாங்கள் எதிர்காலத்தில் வகுக்கலாம். ஜனாதிபதியும், பிரதமரும் இந்த நல்லாட்சியில் இந்த புதிய தேசிய ஆட்சியில் உளப்பூர்வமாக மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். தங்களை இந்த ஆட்சியில் அமர்த்தியவர்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினர்கள் என்ற பாரிய நல்லெண்ணம் அவர்களிடம் இருக்கின்றது. இதன் வெளிப்பாடாக வடக்கின் மீள்குடியேற்றம் சம்பந்தமான விடயங்களையும், காணி மீள் கையளித்தல் சம்பந்தமாகவும் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தன்னுடைய தலைமையில் ஆளணி அமைத்து செயற்பட்டு வருகின்றார். அவருடைய கவனம் இப்போது கிழக்கு மாகாணம் மீது திரும்பியுள்ளது.
சில விடயங்களை கிழக்கு மாகாண காணி ஆணையாளர், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் ஆகியோர் முதலில் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பாதுகாப்பு அமைச்சோடு நாங்கள் ஒரு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பாதுகாப்புச் செயலாளரையும் அழைத்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசி புல்மோட்டையில் பல இடங்களிலுமுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவாக நாங்கள் ஒரு கலந்துரையாடலொன்றை நடத்த வேண்டும்.
பாதுகாப்புக்கு குந்தமாக நாங்கள் ஒருபோதும் இருக்க விரும்பவில்லை. உக்கிரமான யுத்தம் இடம்பெற்ற வேளையில் மிக நெருக்கடிக்குள் சிக்கிய மக்கள் இந்த புல்மோட்டை பிரதேச மக்களாவர். ஒருபுறம் விடுதலைப் புலி மறுபுறம், இராணுவம். அக்காலத்தில் புல்மோட்டைக்குப் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் ஹெலிகொப்டர் மூலம் வந்துள்ளேன். அத்தகைய காலத்தில் செய்தவற்றைக் கூட இந்தக் காலத்தில் செய்ய முடியாத அளவுக்கு கெடுபிடி நிலவரம் இருக்க முடியாது. இதற்கு நல்லதொரு அணுகுமுறையில் தீர்வு காண வேண்டும். இதற்காக அரசியல் பிரமுகர்களும், மேடையிலுள்ள அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஸீர் அஹ்மட், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், சட்டத்தரணி லாஹிர், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் முபாரக், முன்னாள் கிழக்கு மாகாண சபை தவிசாளர், சட்டத்தரணி பாயிஸ், அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் நிதா நிறுவனத்தின் பொறுப்பாளர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.