கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தில் பக்குவமாய் நடந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.!

அஹமட் இர்ஷாட்-
டந்த இரண்டு வாரங்களாக தேசிய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மிகவும் முக்கிய செய்தியாக எல்லோராலும் பார்க்கப்பட்டு வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அண்மையில் திருகோணமலையில் இடம் பெற்ற நிகழ்வில் கடற்படை அதிகாரியினை அவமானப்படுத்திய சம்பவமாகும். 

இதனை வைத்து முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு எதிராக மாவட்டத்தில் உள்ள அரசியல் வாதிகளும் தேசியத்தில் உள்ள சிறுபான்மை, பெரும்பான்மை அரசியல் வாதிகள் என அனேகமானோர் இதுதான் சந்தர்ப்பம் என்று தமது எதிர்க்கருத்துக்களை கிழக்கு முதலமைச்சருக்கு எதிராக ஊடகங்களில் பரவலாக தெரிவித்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் ஒரு படி மேற்சென்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் திருகோணமலை மாவட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் முதலமைச்சர் எந்த நிபந்தனையும் இன்றி குறித்த கடற்படை அதிகாரியினை அவமானப்படுத்திய செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இதனையும் பலவாறு திரிபுபடுத்தி முதலமைச்சருக்கு எதிரான கோசங்களாக மட்டுமல்லாமல் முஸ்லிம் காங்கிரசின் தலைமையினையும் முதலமைச்சரையும் பிரிப்பதற்கான நல்ல சந்தர்ப்பமும் சிறந்த ஆயுதமும் என கையில் எடுக்க தொடங்கியுள்ளனர்.

மறுபக்கத்திலே பார்க்க போனால் ஒட்டு மொத்த கிழக்கு மாகாண தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களும் முதலமைச்சருக்கு ஆதரவாக குரல் எழுப்பி இருக்கின்ற நிலையில் மேலும் அதற்கு வலு சேர்க்கும் முகமாக தமிழ் அரசு கட்சியின் தலைவர் இரா சம்பந்தன் ஐயாவும் தனது ஆதரவினை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு தெரிவித்துள்ளமையானது இலங்கையிலே முதலாவது சிறுபான்மை சமூகமக இருக்கின்ற வடகிழக்கு தமிழர்களின் ஆதரவு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு எதிர்காலத்திலும் இருக்கத்தான் போகின்றது என்பதனை எடுத்துகாட்டி நிற்கின்றது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய பாரளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் வாய் மூடி மெளனிகளாக இருக்கின்ற நிலை மக்கள் மத்தியில் ஓர் உணர்வினை தூண்டி இருக்கின்ற நிலையில் முதலமைச்சரின் சொந்த ஊரினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி-ஷாஹிர் மெளலான மற்றும் முன்னாள் அமைச்சரும் கட்சியின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் போன்றவர்கள் கூட இவ்விடயத்தில் மெளனம் காத்திருப்பது இன்னும் மக்களை சிந்திக்க தூண்டியயுள்ள விடயமாக மாறியுள்ளது. 

இவ்விடயத்தில் மாகாண அமைச்சர் நசீர் மற்றும் தவம் போன்றவர்கள் முதலமைச்சருக்கு சார்பான கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் பொறியிலாளரும் மாகாண சபை உறுப்பினருமான ஷிப்லி பாரூக் அண்மையில் முதலமைச்சர் மட்டக்களப்பில் கலந்து கொண்ட 25க்கும் மேற்றபட்ட நிகழ்வுகளில் மிகவும் ஆக்ரோசமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் ஊடகங்களுக்கும், மக்களுக்கும் குறித்த விடயம் சம்பந்தமாக முதலமைச்சருக்கு சார்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றமையானது முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகின்றது என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது.

மறுபக்கத்திலே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஏட்டிக்கு போட்டியான முற்றிலும் எதிரான அரசியலினை மாவடத்தில் மட்டுமல்லாது தேசியத்திலேயே முன்னெடுத்து வருகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசானது இவ்விடயத்தில் மிகவும் பக்குவமாகும், முதலமைச்சருக்கு எதிரான அல்லது சார்பான கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்து வருகின்றமையானது தேசியத்திலே தாங்கள் ஓர் கெளரவமான அரசியலினை செய்து வருகின்றோம் என்பதனை காட்டுவதாக தெரிகின்றது. 

அதிலும் மிகவும் முக்கியமாக சில மாதங்களுக்கு முன்பு கல்குடாவிலே நிர்மாணிக்கப்பட்ட கட்டங்களை யார் திறப்பது என்ற விடயம் சம்பந்தமாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுடன் பல கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தி கொண்ட கல்குடாவின் அரசியல் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற பிரதி அமைச்சருமான அமீர் அலி கூட முதலமைச்சருக்கு எதிரான எந்த கருத்துக்களையும் வெளியிடாமல் ஓர் பக்குவமான அரசியல் கலாச்சாரத்தினை நோக்கி தனது பயணத்தினை முன்னெடுத்து செல்வதினை பார்க்கின்ற பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரசானது எதிர்காலத்தில் இன்னும் வித்தியாசமான அரசியல் நடவடிகையினை கிழக்கிலே மேற்கொள்ள போகின்றது என்பது தெளிவாகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -