புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு அநீதி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஆர்.எம்.அன்வர்

றிசாத் ஏ காதர்-

நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு அநீதி இழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாண மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்காமல், மத்திய அரசாங்கத்தை சாட்டிக்கொண்டு தப்பிக்கும் கிழக்கு மாகாணக் காணி அமைச்சர், இம்மாகாணத்திலுள்ள காணிகளை வெளிமாவட்ட முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதில் ஆர்வமாகவுள்ளார் எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

புல்மோட்டையில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த மாகாண சபைக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் பிரேரணையை முன்வைத்தார்.

இன்றைய அமர்வுக்கு காணி அமைச்சர் ஆரியவதி கலபதி சமூகமளிக்காமையைத் தொடர்ந்து, இந்தப் பிரேரணைக்கு கடிதம் மூலம் அவர் பதிலளித்தார். அதில் இந்தக் காணிப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்க்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு இன்றைய அமர்வில் பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் புல்மோட்டைக் காணி தொடர்பாக சில பிரச்சினைகள் உள்ளன என்பதை நான் அறிவேன். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -