எம்.வை.அமீர்-
இலங்கையில் உள்ள அநேக பல்கலைக்கழகங்கள் அவர்கள் அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் சார்ந்த விடயங்களான, இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் அரசியலைமைப்பு மாற்றத்தில் குறித்த சமூகங்களுக்கான பங்குகள் பற்றி, புத்திஜீவிகளையும் அரசியல் வாதிகளையும் ஒன்றுதிரட்டி ஆவணங்கள் தயாரித்து வருகின்றன.
அதுபோன்று முஸ்லிம்களுக்கு நியாயங்களை பெற்றுக்கொடுக்கக் கூடிய புத்திஜீவிகள் நிறைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம், மௌனமாக இருக்காது புத்திஜீவிகளையும் அரசியல்வாதிகளையும் ஒன்றுதிரட்டி முஸ்லிம் சமூகத்தின் இலக்கை அடைவதற்கு விரைந்து செயற்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் முன்னால் இராஜங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி அறைகூவல் விடுத்தார்.
சாய்ந்தமருது பன்னூலாசிரியர் ஹாதிபுல் ஹுதா எம்.எம்.எம்.நூறுல் ஹக் எழுதிய ‘முஸ்லிம் அரசியலின் இயலாமை’ எனும் நூல் வெளியீட்டு விழா 2016-05-21 ஆம் திகதி சாய்ந்தமருது பாரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் வைத்திய கலாநிதி எஸ்.நஜிமுதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஹசன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் வாதிகளுக்கு இடையேயான பிரச்சினைகள் தீரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோன்று அவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர்தான் தீர்வு விடயங்களை யோசிக்க வேண்டும் என்றும் இல்லை உடனடியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தலைமைத்துவத்தின் கீழ் வெளியில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் இணைத்துக்கொண்டு, செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முஸ்லிம் சமூகத்துக்கு அதன் தனித்துவம், அடையாளம், இருப்பு மற்றும் நிலத்தொடர்புள்ள அரசியல் அதிகாரம் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். இங்கு முஸ்லிம் தேசியம் ஒன்றை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.
என்றும், காலப்போக்கில் அக்கட்சி தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், தற்போது இரண்டு மூன்று எனப்பிரிந்து கூறுபோடப்படுகின்றதே தவிர அக்கட்சியின் இலக்கு அடையப்பட வில்லை என்றே கூற வேண்டும். என்றும் தெரிவித்தார்.
எனவேதான் இந்தக்கணத்திலிருந்து புத்திஜீவிகள் குறித்த இலக்கை அடைவதற்காக களத்தில் குதிக்க வேண்டும் என்றும் பாராளமன்றம் தற்போது சட்டமேற்றும் சபையாக மாறியுள்ளது. இவ்வாறன சூழலில் வேறுபாடுகள் எதுவுமின்றி முஸ்லிம் தேசியத்தை நிறுவுவதற்காக புத்திஜீவிகள் ஓரணியில் திரளவேண்டும் என்றும். முஸ்லிம்கள் தொடர்பில் ஆவணங்களை தயாரித்து அரசியலமைப்பு சபையிடம் கையளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்தகாலங்களில் முஸ்லிம்காங்கிரஸின் தலைவருக்கும் தனக்கும் இடையேயான இடைவெளி குறித்து கருத்து எதனையும் இப்போதைக்கு கூறமுடியாது என்றும் தெரிவித்தார்.
நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றிய வைத்திய கலாநிதி எஸ்.நஜிமுதீன், நூலாசிரியர் நூறுல் ஹக் எழுதியுள்ள ‘முஸ்லிம் அரசியலின் இயலாமை’ என்ற இந்த நூல் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளின் இயலாமையையே குறிப்பதாகவும் எங்களுக்கு இடையேயான ஒற்றுமை இல்லாது இருப்பதையே இந்நூல் சுட்டிக்காட்டுவதாக தான் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்களை தலைமை தாங்கக்கூடிய கட்சி என்றால் அது முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று தெரிவித்த நஜிமுதீன், இக்கட்சியை விமர்சிப்பவர்களுக்குக்கூட இது தெரியும் என்றும் தெரிவித்த அவர், அக்கட்சிக்கு எதிராக யாரும் பெரிதாக எதனையும் சாதித்துவிட முடியாது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத்தெரிவித்த நஜிமுதீன்,கடந்தகாலங்களில் அரசியலில் பதவிகளை வகித்த முஸ்லிம் தலைவர்களே மக்களால் தலைவர்களாக பார்க்கப்பட்டதாகவும் 1985 களின் பின்னர், ஆரம்பத்தில் பதவிகள் எதுவும் இல்லாமலேயே முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரப் அவர்கள் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
குறித்த அந்த தலைமைத்துவத்துக்கு ஈடுஇணையான தலைமைத்துவத்தை இன்றுவரைக்கும் காணமுடியவில்லை என்று தெரிவித்த அவர், தற்போதுள்ள முஸ்லிம் தலைமைத்துவங்களுடன் ஒப்பிடும்போது தற்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருக்கின்ற அமைச்சர் றவூப் ஹக்கீம் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு ஈடாக ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருப்பது தனது அசைக்கமுடியாத நம்பிக்கை என்றும் தெரிவித்தார். ஏனைய முஸ்லிம் தலைவர்களை தங்களது ஆளுமையை நிலைநிறுத்துகின்ற முயச்சியில ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதுவரையும் முஸ்லிம் சமூகத்தை தலைமைதாங்கும் அரசியல்வாதிகளால் முஸ்லிம் சமூகத்தின் எதிப்பார்ப்புகள் முடக்கப்பட்டுள்ளதா என்று கேட்கப்படுமானால் இல்லை என்றே தான் பதிலளிப்பதாகவும் தற்போதைக்கு பெற்றிருப்பது அதிகம் என்பதே தனது கருத்து என்றும் தெரிவித்தார்.
நூலின் திறனாய்வை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் நிகழ்த்திய அதேவேளை நூல் தொடர்பான கருத்துரையை நவாஸ்சௌமி நிகழ்த்தினார்.