அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-மூதூர் பிரதான வீதியில் இன்று (25) மாலை 6-15 மணியளவில் பிரயாணிகளை ஏற்றிச்செல்லும் தனியார் பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்- இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் முற்சக்கர வண்டியில் சென்ற மூதூர்-அக்கறைச்சேனையைச்சேர்ந்த டி.சப்ரி (23) ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் அதே இடத்தைச்சேர்ந்த எம்.எம்.இபாம்(22 வயது) மற்றும் மூதூர்-ஜாயா நகரைச்சேர்ந்த எஸ்.ரம்ஸாத் (20 வயது) ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மூதூர் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
இதேவேளை விபத்துக்குள்ளான தனியார் பஸ்ஸில் வந்த கிண்ணியா-பைசல்நகர் பகுதியைச்சேர்ந்த கனேஸ் பானுப்பிரியா (22வயது) கை முறிவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக மூதூர் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.