சலீம் றமீஸ்-
பொத்துவில் உப-வலயப் பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக் குறையை விரைவில் தீர்ப்பதுடன், தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி
பொத்துவில் உப-வலய பாடசாலைகளில் 60 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் விரைவில் பொத்துவில் உப-வலய பாடசாலைகளில் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதுடன், பொத்துவில் பிரதேசத்துக்கான தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (26) ஆம் திகதி தவிசாளர் திரு. சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றபோது பொத்துவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவும் ஆசிரியர் வெற்றிடம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பையினால் கல்வி அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கல்வி அமைச்சர் கூறுகையில், பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் தெரிவித்த விடயத்தினை ஏற்றுக் கொள்கின்றேன்.
இப் பிரதேசத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிலிருந்து கல்விப் பணிப்பாளர்களைக் கொண்ட உயர் மட்டக் குழுவொன்றினை அங்கு அனுப்பியுள்ளேன்.
பொத்துவில் ஆத்திமுனை கிராமத்திலுள்ள கவிவாணர் அப்துல் அஸீஸ் வித்தியாலத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கு விஷேட கவனமெடுக்கப்படும் எனவும், அக்கரைப்பற்று வலய, பொத்தவில் உப-வலயங்களின் கல்வி வளர்ச்சி தொடர்பாக இப் பிரதேசங்களுக்கு மிக விரைவில் வருகை தருவேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொத்துவில் உப-வலய பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இப் பிரதேச கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், எனவே அவசரமாக பொத்துவில் பிரதேசத்திற்கான ஆசிரியர்களை நியமிக்க கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மேற் கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் கிழக்கு மாகாண சபை மூன்று தடவைகள் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைப்பதற்கு ஏகமானதான அனுமதியினை வழங்கியும் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பாக இதுவரை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கிழக்கு மாகாண சபைக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விபரங்களை தெரிவிப்பதுடன்,
பொத்துவில் உப-வலய பாடசாலைகளில் கல்முனை,அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளிலிருந்து இரண்டு வருட கால சேவையினை நிறைவு செய்த 19 ஆசிரியர்கள் தங்களின் பழைய பாடசாலைகளில்; கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதால் இவ் ஆசிரியர்களுக்குப் பதிலாக 19 ஆசிரியர்களை பொத்துவில் உப-வலய பாடசாலைகளுக்கு நியமிக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் மக்கள் பிரதிநிதிகளும்,
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், பொத்துவில் உப-வலயப் பணிப்பாளர் உட்பட பிரதேச கல்வியாளர்கள் ஒரு மாத காலத்திற்கு முன்பு வேண்டுகோள் விடுத்தனர். இவ் வேண்டுகோள் உரிய காலத்தில் கல்வி அமைச்சரினால் நிறைவேற்றப் படாததினால் பொத்துவில் பிரதேசத்தில் ஆத்திமுனை எனும் கிராமத்தில் அமைந்துள்ள கவிவாணர் அப்துல் அஸீஸ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஆசிரியர் பற்றாக குறைக்கு அவசரமாக ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி இப் பிரதேச பொது மக்களும், மாணவர்களும், பாடசாலை அபிவிருத்திக் குழுவும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை மேற் கொண்டதுடன், இப் பாடசாலையில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வரை இப் பாடசாலையினை மூடியுள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
அக்கரைப்பற்று வலய, பொத்துவில் உப-வலய கல்வி வளர்ச்சி தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் இப் பிரதேசங்களுக்கு வருகை தருமாறு மாகாண சபை உறுப்பினர்களும், இப் பிரதேச கல்வியாளர்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.