முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் எமது கட்சி எப்போதும் போலவே மிகப் பலமானதொரு நிலையிலேயே இருக்கின்றது. அதில் எந்தவிதமான தளம்பலோ அல்லது சலசலப்போ துளியளவும் கிடையாது. இதுவே உண்மை. ஆனால் ஒருசிலர் இதற்கு நேர் மாறாக ஊடகங்களில் அறிக்கைகளை விட்டு வருகின்றனர்.
அது அவர்களது சுயதேவைக்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம். அத்தகையவர்களை ஏறெடுத்தும் பார்க்க வேண்டிய எந்தவிதமான தேவையோ அவசியமோ எமக்குக் கிடையாது என்று மு. கா வின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கட்சிக்குள் தளம்பல் நிலையொன்று காணப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் உலாவுகின்றன. அதில் உண்மை ஏதும் உள்ளதா எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
எமது கட்சியின் வரலாற்றில் நாங்கள் பல சவால்களைச் சந்தித்துள்ளோம். கட்சியைக் கூறுபோட்டு சிதறடித்துப் பலவீனமாக்க முனையும் தீய நோக்குடைய வெளிச் சக்திகளுடன் இணைந்து அவ்வப்போது எம்முடன் கூடவே இருந்துவந்த சிலர் துரோகமிழைத்தனர்.
ஆனால் இறுதியில் அவர்கள்தான் இருந்த இடம்தெரியாது போயுள்ளனர். உண்மையில் சவால்கள் வருகின்றபோதுதான் கட்சியை மேலும் பலமுள்ளதாக்க வேண்டும் எனும் உத்வேகம் கட்சித் தொண்டர்களிடம் ஏற்படுகிறது.
தேசியப்பட்டியல் விவகாரம் இழுபறியில் இருந்து வருவது தொடர்பாக வினவியபோது, சுடுகுது மடியைப் பிடி என இவ்விடயத்தில் எம்மால் செயற்பட முடியாது. அது தொடர்பாக நாம் ஆழமாக ஆராய்ந்து வருகின்றோம். விரைவில் வெற்றிடமாகவுள்ள அவ்விடத்திற்குத் தகுதியுள்ள ஒருவர் தலைமையினால் நியமிக்கப்படுவார்.
சிலருக்கு ஒரு தடவை தேசியப் பட்டியலில் அங்கம் வகித்தமை போதாதாம். இன்னும் சிலருக்கு இரண்டு மூன்று தடவைகள் இருந்தும் அடுத்தவருக்கு விட்டுக் கொடுக்க மனமில்லாது இருக்கிறது எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் கிழக்கிலிருந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரை நியமிக்குமாறு சம்பந்தப்பட்டவரிடமிருந்தும், வேறுசில ஊடகவியலாளர்கள் மூலமும் கோரிக்கை விடுக்கப்பட்டதா எனக் கேட்டபோது, இவ்வாறு ஒருவர் இருவர் அல்ல பலரும் கேட்டு வருகின்றனர். கேட்பவர்கள் எல்லோருக்கும் தூக்கி வழங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றும் சாதாரண பதவி அல்ல.
அது எமது மக்களுடனும் சமூகத்துடனும் தொடர்புபட்டதொன்று. அதனால் அதுகுறித்து மேலெழுந்தவாரியாக முடிவு செய்ய முடியாது. கட்சித் தலைமை சரியான முடிவை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
கடந்த வெள்ளியன்று தாருஸ்ஸலாமில் இடம்பெறவிருந்த கூட்டம் இரத்தானது தொடர்பாகக் கேட்டபோது, விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வந்தமையினால் அந்தக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதே தவிரவும் அதில் விசேடமாகக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. விரைவில் அக்கூட்டம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
