மு.கா.உச்சபீட உறுப்பினர் பழீல் BAயின் அறிக்கையில் வெளியான பல இரகசியங்கள்...!

பி. முஹாஜிரீன்-
டந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் தலைவரின் ஆணைகளுக்கு எதிராக இயங்கியமை சிலவேளை தலைவரின் தொடர்புகளைப் புறக்கணித்து திடீரென காணாமல் போனமை தலைவரின் கருத்துக்கு சவாலாக முரண்பட்டு பத்திரிகை அறிக்கைகளை விடுத்து வந்தமை போன்றவை இப்போதைய தலைவருடனான முரண்பாட்டு போக்குக்கான காரணங்களும் என மு.கா. உச்சபீட உறுப்பினரும் கல்வி கலாசார விவகாரச் செயலாளருமான எஸ்.எல்.எம். பழீல் பீஏ தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் மனித நேயம் நாகரிகங்களுக்கு அப்பால் உண்மைக்கு புறம்பாக மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலி விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதையிட்டு வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தலைவர் ஹக்கீம் மற்றும் செயலாளர் நாயகம் ஹஸனலி ஆகியோருக்கிடையில ஏற்பட்டுள்ள விரிசல் நிலைமையை விளக்கும் வகையில் அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த நவம்பர் மாதம் 6 ம் திகதி கண்டியில் நடைபெற்ற மு.கா.வின் 'ஆணை உத்தரவுக்கான உயர்பீடக் கூட்டம்', அதனைத் தொடர்ந்து நவம்பர் 7ம் தகதி பொல்கொல்லவில் வெற்றிகரமாக நடந்தேறிய '26 வது பேராளர் மாநாடு' என்பவற்றில் நிறைவேற்றப்பட்ட யாப்பு மாற்றம் அதற்கான பேராளர்களின் ஏகோபித்த ஒப்புதல் அங்கீகாரம் என்பன மு.கா. தலைவரினால் எதேச்சதிகாரமாக திடீரென கொண்டுவரப்பட்டவை அல்ல. 

ஆனால் செயலாளர் நாயகம் தலைவரையும் இக்கட்சியையும் அதன் ஆவணங்களையும் தொடர்ந்தும் பணயக் கைதியாக வைத்திருந்தார். இதன் விளைவுதான் யாப்பு மாற்றங்களும் மு.கா. விற்கான 5 செயாளர்களின் நியமனங்களுமாகும். 

1995ல் அட்டாளைச்சேனையின் தேசிய கல்வியியற் கல்லூரி ஆரம்ப விழாவில் மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்கள் பேசிய ஒருகருத்தை மறுத்து முன்னாள் 'தவிசாளர் சேகு இஷ்ஸடீன்' அவர்கள் விடுத்த சாதாரண அறிக்கை ஒன்றினால்தான் அடுத்த நாள் தவிசாளர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆனால், தலைவர் ஹக்கீம் கடந்த 15 வருடங்களாக எவ்வளவு மனிதநேயத்துடன் அதி உச்ச பொறுமையோடு செயலாளர் நாயகத்தின் நிலைமைகளை எவ்வளவு பக்குவமாக சமாளித்திருக்கின்றார் என்று நாம் அறியலாம்.

கண்டியில் நடந்தேறிய 'உத்தரவுக்கான உயர்பீடக் கூட்டம்' 06-11-2015ம் திகதியன்று பி.ப.4மணிக்கு நடைபெறுமென அழைப்புக்களை தனது கையொப்பத்துடன் அனுப்பிய செயலாளர் நாயகம் முன்னறிவித்தல் எதுவுமின்றி அன்றைய கூட்டத்திற்கு வந்துசேரும்போது இரவு 9.30 மணியானது. கட்சியின் தலைவரும் உச்சபீட உறுப்பினர்கள் 80 பேரும் பிப.4மணியிலிருந்து அவரின் வருகைக்காக காத்திருந்து இரவு 10 மணிக்குத்தான் கூட்டம் ஆரம்பமானது. 

உலகிலேயே தலைவர் ஒருவர் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்காக 6 மணிநேரம் செயலாளருக்காக பொறுமையுடன் உச்சபீட உறுப்பினர்களுடன் காத்திருந்த 'கின்னஸ் சாதனை' அன்று நடந்தேறியது. மறுபுறத்தில் இத்தலைமை மர்ஹூம் அஷ்ரஃப் ஆக இருந்திருந்தால் ஹசனலியின் சரித்திரம் அன்று முடிவடைந்திருக்கும். 

மு.கா. விற்கும் அதன் தலைமைக்கும் உள்ளிருந்து குழிபறிக்கும் கழுத்தறுப்புக்களும் நயவஞ்சகங்களும் ஒன்றும் புதியவை அல்ல. நீண்ட பட்டியல் வரலாறு அதற்குண்டு. மஹிந்தவின் சட்டாம்பி ஆட்சியில் பெற்ற கசப்பான அனுபவத்துக்கு மேல் சட்டமுதுமானி அறிவுடன் சதிகாரர்களின் சதிவலைகளிலிருந்து எமது பேரியக்கத்தை தலைவரால் பாதுகாக்க முடிந்தது.

ஆகவே எவரும் கிலேசமடைந்து குழம்ப வேண்டியதில்லை அத்தனையும் சட்டப்படி யாப்பின் சரத்துகளுக்கேற்ப நடந்தேறியிருக்கின்றன. தேர்தல் ஆணையாளருக்கு எல்லா மாற்றங்களும் உரிய வேளைகளில் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு சமுதாயத்துக்குரிய அடிப்படைச் சொத்தான இவ்வியக்கத்தை ஒரு தனிமனிதனின் பேராசைக்கு இரையாக்கிவிட்டு இத்தலைவன் அல்லாஹ்வின் முன்னால் நாளை எதைக் கூற முடியும்? 

தலைவர் ஹசனலிக்குச் செய்த கௌரவமும் கைங்கரியங்களும் அஷ்ரஃப் கூட அவருக்கு செய்ததில்லை. கட்சியின் உயர்பதவியான செயலாளர் நாயகமாக அவரை மாற்றி இரண்டு முறை தேசியப்பட்டியல் எம்பியாக்கினார். அவற்றால் தலைவருக்கு ஏற்பட்ட சங்கடங்களும் படுமோசமான விமர்சனங்களும் கட்சிக்கே சவாலாக மாறின. 

மக்களின் வாக்குகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கு மேலதிகமாக ஒரே ஊருக்கு 2 வது எம்பியாக தனது பொறுப்பு வாய்ந்த செயலாளர் பதவியை துஷ்பிரயோகம் செய்து எம்பியை பறித்தெடுத்தவர். பொறுமையோடு அத்தனையும் தாங்கி கட்சியைப் பாதுகாத்தவர்தான் தலைவர் ஹக்கீம்.' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -