பொதுவாக வறட்சியான பாலைவன நாடுகளாக விளங்கும் சவூதி அரேபியா, யேமன், ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் வழமைக்கு மாறாக இடம்பெற்ற கடும் மழைவீழ்ச்சியால் பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் மட்டும் இந்த வெள்ள அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் றியாத் மற்றும் மக்கா ஆகிய பிராந்தியங்களிலுள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்தப் பிராந்தியங்களில் வெள்ளத்தில் சிக்கியிருந்த வாகனங்களிலிருந்து பலரை மீட்புப் பணியாளர்கள் வியாழக்கிழமை மீட்டுள்ளனர். அதேசமயம் தென்மேற்கு நகரான அபாவும் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த வெள்ள அனர்த்தத்தால் சவூதி அரேபிய தலைநகரிலும் ஏனைய பிராந்தியங்களிலுமுள்ள பாடசாலைகளை பல நாட்களுக்கு மூடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.
அந்நாட்டின் அயல்நாடான யேமனில் கடும் மழைவீழ்ச்சி காரணமாக தலைநகர் சனாவுக்கு வடக்கேயுள்ள ஹஜ்ஜா மற்றும் ஒம்ரான் மாகாணங்களிலுள்ள இரு அணைகள் உட்பட பல சிறிய அணைகள் சேதமடைந்ததால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் ஈரானின் மேற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கட்டாரிலும் இடி மின்னலுடன் கடும் மழை பெய்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

