இலங்கையின் பொது பல சேனா என்ற பௌத்த அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு தண்டனை வழங்குமாறுகோரி, சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மாலபேயில் அமைந்துள்ள கத்தோலிக்க போதனை நிலையமொன்றை, 2008ம் ஆண்டு தாக்கி சேதப்படுத்தியதற்காக கலகோட அத்தே ஞானசார தேரர் உட்பட 13 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், 2014ம் ஆண்டு சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சட்டவிரோதமானது என மேல்முறையீடு செய்த சட்ட மா அதிபர், சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சட்ட மா அதிபரின் வேண்டுகோளை கருத்திற்கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கை மீள விசாரிக்க தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 28ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர், நாட்டில் பௌத்தர்களின் உரிமை பறிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். எத்தகைய இடையூறு வந்தாலும் பௌத்தர்களின் உரிமையை காக்க தொடர்ந்து தான் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
