அப்துல் கபூர்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அல்லது கட்சியின் தலைமையோ கட்சியின் செயலாளர் ஹஸனலியையோ தவிசாளர் பஷீர் சேகுதாவுத்தையோ புறக்கணித்துவிட்டு இம்மாநாட்டினை நடாத்த முனைகிறது என்பது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
'சமகால அரசியலில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களை அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எத்திவைப்பதும் கட்சிப்போராளிகளுக்கு மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதும்' என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 வது தேசிய மாநாடு எதிர்வரும் 19ம் திகதி அட்டாளைச்சேனை-பாலமுனையில் நடைபெறவுள்ளதனை முன்னிட்டு ஒலுவில் கிறீன் வில்லா விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
கட்சியின் இம்மாநாட்டிற்கான அனைத்து குழுக்களிலும் அவர்களது பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர்களது வேலைப்பளு காரணமாக அவர்களால் சில விடயங்களில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.
கட்சியின் இம்மாநாட்டினை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக கட்சி நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
வட கிழக்கு மீண்டும் நிரந்தரமாக இணைக்கப்படுகின்ற பொழுது அதில் முஸ்லிம்களுக்கான தனிமாகாணம் தரப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வினை தமிழ் தரப்புக்கள் முன்வைக்கின்ற போது அதில் தமிழ் மொழி பேசுகின்ற முஸ்லிம்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் எதுவும் நடைபெற முடியாது. 1957 திருமலை மாநாட்டிலும் 1977 பாராளுமன்ற தேர்தலிலும் செல்வநாயகத்;தின் தீர்வினிலும் முஸ்லிம்களுக்கு தனிமாகாணம் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததனை நாம் மறக்க முடியாது.
கட்சியின் ஒரு தேசியப்பட்டியல் ஆசன விவகாரம் பல பிரதேசங்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி தீர்வு காணப்பட்டிருக்கின்றது. தேசியப்பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் வழங்குவதைத்தவிர வேறு எந்த மாற்று வழியும் கட்சியின் தலைமைக்கு இல்லை. ஏன்எனில் தேசியப்பட்டியல் ஆசன விவகாரம் கட்சியின் வளர்ச்சிக்கான முதலீடாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
கடந்த ஆட்சியினிலே உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிழையான எல்லை நிர்ணயமானது சிறுபான்மை கட்சிகளுக்கடையே பல சர்ச்சைகளை உருவாக்கியது.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் சிபாரிசுகள் கணக்கில் எடுக்கப்பட வில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் எனவும் தெரிவித்தார்.
