க.கிஷாந்தன்-
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்த விபத்து 14.03.2016 அன்று மாலை 6.30 மணியளவில் தலவாக்கலை புகையிரத நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
பதுளையிலிருந்து கண்டி நோக்கி மேற்படி புகையிரதம் சென்று கொண்டிருந்த வேளை தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இளைஞர் இவ்வாறு புகையிரதத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இதனால் உடல் நசுங்கி குறித்த இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் தலவாக்கலை புகையிரத நிலைய உத்தியோகத்தரிடம் அவரது சடலம் கையளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அறிந்த தலவாக்கலை பொலிஸார் இளைஞரின் சடலத்தினை பொறுப்பேற்றுள்ளனர்.
எனினும் இவ்வாறு உயிரிழந்தவர் 30 வயது மதிக்கதக்க யட்டியாந்தோட்ட மீப்பிட்டிகந்தவத்த பகுதியை சேர்ந்த என்.எம். குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் லிந்துலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
