க.கிஷாந்தன்-
கொழும்பிலிருந்து டயகம பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் முன்பகுதி சில்லில் சிக்கி 28 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் 17.02.2016 அன்று மாலை 06.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து வழமையாக அட்டன் பேரூந்து தரிப்பு நிலையத்திற்கு வருகை தந்து டயகமயை நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் குறித்த பேரூந்து 17.02.2016 அன்று வழமையான நேரத்திற்கு அட்டனை நோக்கி வந்தடைந்துள்ளது.
இதில் பயணித்த குறித்த நபர் பேரூந்து தரிப்பு நிலையத்தில் பேரூந்தை நிறுத்துவதற்கு முன்பாக பேரூந்திலிருந்து இறங்க முற்பட்ட வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து உடனடியாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததன் பின் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பேரூந்தின் சாரதியை கைது செய்ததுடன் உயிரிழந்த நபரை கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் தொடர்பாக அடையாளங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


