லயனோ காணியோ சொந்தமில்லை - ஜ.நா.மனித உரிமைஆணையாளரிடம் எடுத்துரைப்பு

காரைதீவு நிருபர்வி.ரி.சகாதேவராஜா-
லையக தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக பல்வேறு பாகுபாடுகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாக்கபட்டு வருகின்ற ஒரு சமூகமாகக் காணப்படுகின்றனர். இலங்கையில் நான்காவது சிறுபான்மை இனமாக அடையாளம் காணப்பட்டுள்ள மலையக தமிழ் மக்கள் ஏறக்குறைய 1.5 மில்லியன் சனத்தொகையைக் கொண்டுள்ளனர்.

அவர்களில் 56வீதமானோர் இன்றும் பிரித்தானியர் அமைத்துக்கொடுத்த லயன் காம்பராக்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அந்த லயன் காம்பராவோ அது அமைந்துள்ள நிலமோ அவர்களுக்கு உரிமையாக்கப்படவில்லை. அதாவது நிலமற்ற சமுதாயமாகவே இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹீசைனைச் சந்தித்து கருத்து தெரிவித்த மனித அபிவிருத்தி தாபன தலைவரும், சர்வதேச விவசாய தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான. பி.பி. சிவப்பிரகாசம் குறிப்பிட்டார். 

இலங்கை சிவில் சமூகத்தின் குழு சார்பாக ஜ.நா. மனித உரிமை ஆணையாளர் திரு. செயிட் அல் ஹீசைன் அவர்களை கொழும்பு ஜ.நா. தலைமையகத்தில் சந்தித்தார்.

திரு.சிவப்பிரகாசம் மேலும் கூறியதாவது,

இலங்கையில் கடந்த ஜனவரி 2015ன் பின் தெரிவுசெய்யப்பட்டுள்ள நல்லாட்சிக்கான அரசாங்கம் இலங்கை சிறுபான்மைமக்களின் நலன்கள், உரிமைகள் குறித்து கரிசனை செலுத்திவருகின்றமை பாராட்டுக்குரியது. என்றாலும், அந்நடவடிக்கைகள் சிறுபான்மைமக்களை பொறுத்தவரையில் திருப்திகரமானதாக இல்லை. மேலும் அரசாங்கங்கள் சடுதியான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

அதேவேளை மலையக தோட்டப் பிரதேச மக்களைப் பொறுத்தவரையில், வரலாற்றுரீதியாக பல்வேறு பாகுபாடுகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கபட்டு வந்துள்ளனர். 

இலங்கையில் மிகவறுமைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகமாகக் காணப்பட்டனர். ஆனால் அது 2009/10 இல் 9% வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இப்புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. 

மலையக பெருந்தோட்ட மக்களின் நிலம்-மற்றும் வீட்டு உரிமை சர்ச்சைக்குரியவிடயமாகக் காணப்படுகின்றது. இன்றுவரையும் 56மூ மக்கள் பிரித்தானியர் அமைத்த “லயன்” வீடுகளிலேயே வாழ்கின்றனர். ஆனால் இந்தலயன் அறையோ, அந்த நிலமோ அவர்களின் உரிமையாக காணப்படவில்லை. 

மொழி உரிமை மற்றுமொரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. மலையகத்தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மலை நாட்டுப் பகுதியில் - அரசநிறுவனங்களில் போதியளவு தமிழர்கள் நியமிக்கப்படாமை மொழிஉரிமையை கேள்விக்குறியாகியுள்ளது. 

அரச சேவைகளை அணுகுவதற்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாமா வட்டத்தில், அம்பகமுவ, நுவரெலியாபோன்ற பிரதெசசெயலகங்கள் இரண்டு இலட்சமக்கள் தொகைக்கு மேலாகக் கொண்டு காணப்படுகின்றன. இது மக்கள் அரசசேவைகளை அணுகுவதற்கான உரிமையை கேள்விக்குறியாகியுள்ளது. 

பிரதேச சபை சட்டத்தின் 33வது சரத்து, தோட்ட மக்கள் உள்ளுராட்சி அமைப்புகளின் சேவையை பெற்றுக்கொள்வதில் தடைகளை ஏற்பத்திவருகின்றது. இது சட்ட சீர்த்திருத்தம் தேவை என்பதை உணர்த்தி நிற்கின்றது. 

பெருந்தோட்ட மக்களின் கல்வி, சுகாதார-வைத்திய சேவைக்கான உரிமை கவனிக்கப்படவேண்டியதொன்றாகும். பெருந்தோட்ட சுகாதார-வைத்தியதுறை தேசிய-சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப தேசிய மயமாக்கப்பட வேண்டும். குறிப்பாகசிறுவர், பெண்கள் இனவிருத்தி சுகாதார விடயங்கள் கவணத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். 

மேலும், மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை மிக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஓப்பந்த அடிப்படையில் நாட்சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனால் கடந்த ஒரு வருடகாலமாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. 

தொழிற்சங்க - முதலாளிமார் சம்மேளன கூட்டு ஓப்பந்த பேச்சுவார்த்தை தோழ்வியைத் தழுவியுள்ளது. இங்கு ஒழுக்கவிதிகளை அவர்கள் பின்பற்றுகின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. 

இம்மக்களைப் பொறுத்தவரையில் அபிவிருத்திக்கான உரிமையை அணுகுவதில் பல்வேறுதடைகளும், பாகுபாடுகளும் காட்டப்படுகின்றன. இம்மக்களின் அபிவிருத்தி உரிமையானது, சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளுடன் சம்பந்தப்பட்டதாகக் காணப்படுகின்றது. 

எவ்வாறெனினும், பெரும்பாலான பெருந்தோட்டங்கள் கம்பனிகளினாலும், மற்றும் அரச நிறுவனங்களினாலும் நிர்வகிக்கப்படுகின்றமையால் தேசிய அபிவிருத்தி திட்டங்கள், அபிவிருத்தி நலன்கள் தோட்டங்களை அணுகுவதில், அல்லது பெருந்தோட்ட மக்கள் அத்திட்டங்களை அணுகுவதில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் தடைகள் காணப்படுகின்றன. 

சிறுவர்கள், பெண்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறைகளும், பாகுபாடுகளும் அதிகரித்தவண்ணமுள்ளன. தோட்ட சூழ்நிலை, வாழ்வாதார நிலைமை, மதுபாவனை என்பவை இவ்வாறான வன்முறைகளுக்கு வழிகோளுகின்றன. இலங்கை போன்ற நாடுகள் பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளையும் மனித உரிமை நியமங்களையும் ஏற்றுக்கொண்ட நாடு என்ற அடிப்படையில் சட்ட ஆட்சியும் நல்லாட்சியும் உறுதிப்படுத்தப்படவேண்டும். 

தயாரிக்கப்பட்டுவருகின்ற புதிய யாப்பு சீர்த்திருத்தம் மேற்படி விடயங்களை உள்ளடக்கும் என நம்புகின்றோம் என்று திரு. பி.பி. சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -