கொழும்பு ருவான்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லொலுவ பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் 11.02.2016 அன்று அதிகாலை 2 மணியளவில் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை எனும் தோட்டப்பகுதியின் பிரதான வீதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் மூவரை சந்தேகத்தின் பேரில் தலவாக்கலை பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ருவான்வெல்ல அல்லொலுவ பிரதேசத்தை சேர்ந்த எஸ்.ஏ.ஸ்டேன்லி பெரேரா வயது 55 என்பவர் தனக்கு சொந்தமான முச்சக்கரவண்டியில் 10ம் திகதி இரவு கொழும்பு கேஸ்பா சந்தியில் இரவு நேர போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் குறித்த 3 சந்தேக நபர்களும் தாம் திருமண வீடு ஒன்றுக்கு அட்டன் நகரத்திற்கு செல்ல வேண்டும் என இந்த முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
ரூபா 6100 அறவிடப்படும் என கூறியதை ஏற்றுக்கொண்ட சந்தேக நபர்கள் இரவு 9 மணிக்கு முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.
11.02.2016 அன்று அதிகாலை அட்டன் நகரை 1 மணியளவில் வந்த பிறகு இன்னும் சிறிது தூரத்தில் எமது வீடு இருப்பதாக கோரி தலவாக்கலை பிரதேசத்தை நோக்கி வந்துள்ளனர்.
இந்த வேளை தலவாக்கலை வட்டகொடை தோட்டத்தில் பிரதான வீதியில் அதிகாலை 2 மணியளவில் நிறுத்தப்பட்ட முச்சக்கரவண்டியில் பயணித்த 3 சந்தேக நபர்களும் சிறுநீர் கழிப்பதற்காக வண்டியிலிருந்து இறங்கியுள்ளனர்.
அந்தவேளை சாரதியின் இருக்கையில் இருந்த சாரதியான எஸ்.ஏ.ஸ்டேன்லி பெரேராவை மீண்டும் வண்டிக்குள் ஏறிய இம்மூவரில் கொழும்பு சிறிய பொரால்லை பகுதியை சேர்ந்தா நபர் ஒருவரும் தலவாக்கலை வட்டகொடை மடக்கும்புர பகுதியை சேர்ந்த ஒருவரும் மற்றும் இராகலை புரூக்சைட் தோட்டத்தை சேர்ந்த ஆகிய சந்தேக நபர்களான இம் மூன்று இளைஞர்களும் குறித்த சாரதியின் கழுத்து பகுதி மற்றும் கைவிரல் ஆகியவற்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய சாரதி அருகில் உள்ள வனப்பகுதி ஒன்றில் மறைந்திருந்துள்ளார்.
இதேவேளை சந்தேக நபர்கள் பயணத்தை மேற்கொண்ட முச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளனர். இதனையடுத்து சாரதி அருகில் உள்ள வட்டகொடை தேயிலை தொழிற்சாலையில் இரவு வேளையில் பணி புரிந்த ஊழியர்களின் உதவியுடன் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சாரதியை சிகிச்சைக்காக லிந்துலை வைத்தியசாலையில் பொலிஸார் சேர்த்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸார் சந்தேக நபர்களான இந்த மூன்று இளைஞர்களையும் வட்டகொடை மத்திய பிரிவு தோட்டத்தில் வைத்து காலை 10 மணியளவில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் விசாரணைக்குட்படுத்தியுள்ளதாகவும் இவர்களை 11.02.2016 அன்று மாலை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக விசாரணைகளை மேற்கொள்ளும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.


