பொதுபலசேனாவை அழிப்பதற்கும், முக்கியஸ்தர்களை இல்லாமல் செய்வதற்கும் சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வாகன விபத்துகளை ஏற்படுத்தி எம்மில் சிலரை கொலை செய்வற்குத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த இரகசியத் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன என பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதனாகே தெரிவித்தார்.
அரசாங்கம் ஞானசார தேரருக்குப் பயப்படுகிறது.இதனை விடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கே அரசாங்கம் பயப்பட வேண்டும். அளுத்கமை வன்செயல்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளினாலே நடந்தேறின. ஞானசார தேரர் நீதிமன்றினை அவமதித்தமை குற்றம்தான்.
அதில் பிரச்சினை உள்ளது என்றாலும் அரசாங்கம் அவருக்கு மேலும் பிரச்சினைகளை உருவாக்கவே முயற்சிக்கிறது. பாராளுமன்றத்தில் ஞானசாரதேரர் பற்றி பேசுகிறார்கள். கருத்துவெளியிடுகிறார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். அவரை இனவாதியாக சித்தரிக்கின்றனர்.
ஞானசாரதேரருக்கு பன்சலையில் நிம்மதியாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவுமே வீதியில் இறங்கினார். சவால்களை எதிர்கொண்டார். நாம் எமக்காகவல்ல நாட்டு மக்களுக்காகவே வீதியில் இறங்கி போராடுகிறோம்.
பாராளுமன்றத்தில் ஐ.எஸ்
எமது பாராளுமன்றத்தில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். பொதுபலசேனாவைத் தடைசெய்வதற்கு முன்பு ஐ.எஸ் அமைப்பை இலங்கையில் தடைசெய்யுங்கள். எமது அமைச்சரவையிலும் ஐ.எஸ் ஆதரவு அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
ஜே.வி.பி பொதுபலசேனாவை அடிப்படைவாதிகள் என்று கூறுகிறது. உண்மையில் நாட்டில் இரத்த ஆறு ஓடச் செய்த ஜே.வி.பியே அடிப்படைவாதிகளாவர்.
