சுலைமான் றாபி-
சமூகத்தில் வருமானம் ஈட்டித்தரும் துறையினருற்கே நிதி ஒதுக்கீடுகளில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் இன்றைய தினம் (12) மாளிகைக்காடு அல் அறபா வெளியினை இயந்திரப்படகு மீனவர் கூட்டுறவுச் சங்கத்திற்கான தளபாடப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் ;
தனி நபர்களின் சொந்த தேவைகளை நிறைவேற்றுவதை விட பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆத்மா திருப்தி அதிகம் காணப்படுகிறது. அரசியலில் மூலம் ஏதாவது தேட வேண்டும் எனும் தேவை எமக்கில்லை. ஆனால் மக்களின் தேவைகளை நன்கறிந்து அதனை நிபர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலில் பிரவேசித்தேன்.
மேலும் இந்த பிரவேசத்தின் மூலமாகவே கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றுக் கொள்வதில் எனது பங்கும் பிரதான காரணிகளில் ஒன்றாக காணப்படுகின்றது என அண்மையில் பொத்துவிலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கூறியது நிறைந்த திருப்தியை பெற்றுத் தருகிறது. ஏனென்றால் நமது ஒவ்வொருத்தரின் சிந்தனைகளும் சமூகத்தைப் பற்றியதாக அமையுமாயின் அதன் மூல நமக்கு வரும் எல்லா விடயங்களும் நன்மை பயக்கும் விடயமாகவே அமையும்.
அதேபோன்று மீனவர்களும் மக்களின் தேவையறிந்து தங்கள் தொழிலில் ஈடுபடும் போது நிச்சயமாக அதில் பல்வேறு அபிவிருத்திகள் உள்ளன. அதேபோன்று மீனவ சங்கங்களானது மீன்பிடித்துறையில் மக்களின் தேவையறிந்து செயற்படவேண்டும். நமது கிழக்கு மாகாணம்தான் மீன்பிடித்துறையில் தலை சிறந்து விளங்கும் ஒரு மாகாணமாகும். இதனாலேயே கிழக்கில் எவ்வித குறைபாடுகளும் இல்லை என லலித் கொத்தலாவல அன்று கூறியிருந்தார்.
அதே போன்று நமது பகுதியில் மீன்பிடி அபிவிருத்திக்கு முன்னாள் அரசியல் தலைவர்கள் பல்வேறு பிரயத்தனங்களை செய்து இத்துறைக்கு ஊக்குவிப்புக்களை வழங்கினார்கள். நாமும் எதிர்காலத்தில் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்கள் மூலம் மீனவ சமூகத்தை வளப்படுத்துவோம். மாளிகைக்காடு சிறிய கிராமமாகக் காணப்பட்டாலும் மீன்பிடித்துறையில் அதிக வருமானம் ஈட்டித்தரும் ஒரு பிரதேசமாகும்.
எனவே எதிர்வரும் காலங்களில் மீன்பிடித்துறைக்கு நேரடியாக உதவக்கூடிய பல பொருட்களை வழங்குவோம். அதேபோன்று எதிர்வரும் வருடங்களில் வருமானம் ஈட்டித்தரும் துறையினருற்கே எமது வருடாந்த நிதி ஒதுக்கீடுகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் கட்டாய தேவைகளில் ஒன்றான மீன்பிடித்தொழிலானது இறைவனால் வழங்கப்படும் மிகப்பெரிய கொடைகளில் ஒன்றாகும். எனவே இத்தொழில் மூலம் விலையினைக் கூட்டுகின்ற போதும், குறைக்கின்ற போதும் அதனை சிறந்த முறையில் நிர்வகிக்கும் சக்தி மீனவர்களிடத்திலும் அதன் சங்கங்களிடத்திலும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு, மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மாளிகைக்காடு மஸ்ஜிதுல் நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கு நிலவும் குறைகளைக் கேட்டறிந்ததோடு இப்பள்ளிவாசலின் சுற்று மதிலை அமைத்துத்தருவதாகவும் தெரிவித்தார்.



