ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓராண்டு நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு பிரதான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் இதே தினத்தில் (8 ஆம் திகதி) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொது எதிர்க்கட்சிகளின் வேட்டபாளரான மைத்திரிபால சிறிசேன, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தோல்வியடையச் செய்து ஜனாதிபதியாக தெரிவனார்.
தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகிய 9 ஆம் திகதி மாலையிலேயே மிகவும் எளிமையான முறையில் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட மைத்திரி, ஆடம்பரங்களைத் தவிர்த்து எளிமையான ஜனாதிபதி என மக்களினால் அறியப்பட்டுள்ளதுடன், மக்களின் மனங்களில் ஒரு கதாநாயகனாக தடம்பதித்துள்ளார். தமது ஓராண்டு பதவிக்காலத்தில் பல இக்கட்டான சந்தர்ப்பங்களையும், கடுமையான சூழ்நிலைகளையும் எதிர்கொண்ட அவர் தூரநோக்குடன், அரசியல் சாணக்கியத்துடன் அவற்றை திறமையாக கையாண்டார்.
அதுமாத்திரமன்றி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் மனங்களில் ஒரு நம்பிக்கை ஒளியினையும் ஏற்றியுள்ளார். ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத் தருவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. மைத்திரியின் செயற்பாடுகளில் நம்பிக்கைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவர்களுடன் இணைந்து அரசியலில் ஒரு புதிய புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறன பல நம்பிக்கையூட்டும் விடயங்களைச் செய்த மைத்திரிபால சிறிசேன தமது பதவிக்காலத்தில் ஓராண்டினை மிகவும் பரபரப்பிற்கு மத்தியில் நிறைவு செய்கிறார். எனவே, தமிழ் மக்கள் உட்பட இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புக்களையும் அபிலாசைகளையும் தீர்த்து இந்த நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை வளங்க வேண்டிய பாரிய பொறுப்பு ஜனாதிபதியின் கரங்களில் சுமத்தப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையுடன் அவர் செயற்பட வேண்டியுள்ளது.ஆநி
