அமெரிக்கவின் 16வது ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியரிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். இதில் “பிறரை ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும், தனது சுயசிந்தனையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரடர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி அளியுங்கள்.பெருங்கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை அளியுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.ஆப்ரஹாம் லிங்கனின் இவ் அறிவுரையானது இன்றைய அரசிற்கு மிகவும் தேவையான அறிவுரையாகக் கருதுகின்றேன்.
கடந்த டிசெம்பர் மூன்றாம் திகதி அரச மருத்துவ சங்க வைத்தியர்கள் உள்ளிட்ட 18 சங்கங்கள் இணைந்து ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.இவர்கள் 12 பிரதான கோரிக்கைளை முன் வைத்தே இவ் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதில் இவர்களின் பிரதான கோரிக்கைகளாக அடிப்படைச் சம்பள மீளாய்வு,தீர்வையற்ற வாகன இறக்குமதி,ஓய்வூதியக் கொடுப்பனவு முறை மாற்றம்,சம்பள அதிகரிப்பு ஆகியன உள்ளன.இது பற்றி கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இத் தொழிற் சங்கங்களுடன் கடந்த சில தினங்கள் முன்பு பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு சில விடயங்களில் இணக்கப்பாடும் ஏற்பட்டிருந்தது.இறுதியில் இவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக எதுவும் பேசாது திடீரென இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இவர்களின் இப் போராட்டத்தின் மூலம் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள வைத்தியாசலைகளில் நோயாளிகள் அவதியுற்றிருந்தனர். வைத்தியத் துறையானது பணத்தை எதிர்பார்த்து செய்கின்ற ஒரு துறையல்ல. அவ்வாறானவர்கள் வைத்தியத் துறைக்கு எது வித தகுதியும் அற்றவர்கள். இலங்கையில் உள்ள வைத்தியர்கள் இவ்வாறன போராட்டங்களை முன்னெடுக்க சோற்றுக்கு வழி இல்லாதவர்களும் அல்ல.போதியளவு வசதிகளுடனும்,சுகபோகங்களுடனுமே உள்ளதை கண்ணூடாக அவதானிக்க முடிகிறது.
இது போன்ற ஒரு போராட்டம் இவ் வருடம் மே மாதம் 25ம் திகதியும் நடாத்தப்பட்டிருந்தது. இதனை வைத்தியசாலை சிற்றூழியர்கள் மேற்கொண்டிருந்தனர். இவர்களின் அன்றைய கோரிக்கைகளாக மூவாயிரம் ரூபாய் விசேட கொடுப்பனவு, 2006ம் ஆண்டு சுற்று நிரூபத்தின் கீழான அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் படி வழங்க வேண்டிய எஞ்சிய ஊதியம் மற்றும் பல கோரிக்கைளை முன் வைத்து இதனை முன்னெடுத்திருந்தனர்.
இதனை இவ் அரசு சில இறுக்கமான போக்கோடு சுமுக நிலைக்கு கொண்டு வந்திருந்தது.இதன் போது வைத்தியசாலைகளில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவ் விடயத்தில் தலைபோட பாதுகாப்பு படை வீரர்களுக்கு எது வித அவசியமும் இல்லை. அவர்கள் இது எங்கள் வேலை அல்ல எனக் கூறவும் இல்லை. உயிரை துச்சமாய் மதித்து நாட்டிற்காக உள்ளத்தால் போராடியவர்களுக்கு இதனை சிந்திக்க நேரமுமல்ல.உயிரைப் பாதுகாக்க வேண்டிய இவ் வைத்தியர்கள் அற்ப பிரச்சனைகளை தூக்கிப் பிடித்துக்கொண்டு மனித உயிர்களை பற்றி சிறிதும் சிந்திக்காது இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.
மேற்குறித்த பிரச்சினைகள் மஹிந்த அரசு உதித்த காலத்தில் தோற்றம் பெற்ற பிரச்சினைகளாகும். மஹிந்த அரசின் வாக்குறுதிகளை மஹிந்த அரசாலேயே நிறைவேற்றுவது சவாலுக்குரியது என்றால், அது பற்றிய திட்டங்கள் இனித்தான் தீட்ட வேண்டிய இவ் அரசுக்கு சிறிதும் அவகாசம் வழங்காது போராட்டங்களை முன்னெடுப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.
இவர்கள் இது பற்றி மஹிந்த அரசு காலத்தில் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டு இப்போது புது வீரத்துடன் இவ் அரசுக்கு எதிராக போராடுகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் இவ் அரசுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் இல்லை. பசித்திருந்த பிள்ளை தன் தாயைக் கண்டதுடம் பாய்ந்து பால் அருந்த முயற்சிப்பது போன்றும் இப் பிரச்சினையை நோக்கலாம்.
கடந்த அரசாங்கங்களில் தங்களுக்குரிய தீர்வை சரியான விதத்தில் கேட்டுப் பெற முடியாத சூழ் நிலை இருந்தமை உண்மை தான்.மஹிந்த அரசு விட்ட அனைத்துப் பிழைகளையும் இவ் அரசால் உடனடியாக தீர்க்க முடியாது என்பதையும் இலங்கை மக்கள் உணர வேண்டும்.என்னதான் ஒரு தாய் தனது பிள்ளையின் பசியைப் போக்க நினைத்தாலும் தனது மார்பில் பால் இருந்தால் தானே பிள்ளைக்கு பால் கொடுக்க முடியும்.
கடந்த டிசெம்பர் மூன்றாம் திகதி அரச மருத்துவ சங்க வைத்தியர்கள் உள்ளிட்ட 18 சங்கங்கள் இணைந்து நடாத்திய போராட்டத்தில் அவர்கள் முன் வைத்த கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு கவனம் செலுத்த வேண்டுமா என்பதை இந் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நன்கு ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.ஒரு மனிதனின் ஆசையை ஒரு போதும் இன்னுமொரு மனிதனால் நிவர்த்திக்க முடியாது.இன்று ஒன்றைக் கேட்பார்கள்.
அதைக் கொடுத்தால் நாளை வேறு ஒன்றைக் கேட்பார்கள்.இது மனித இயல்பு. கேட்பதையெல்லாம் வழங்கினால் எந்த திட்டத்தையும் திறம்பட செயற்படுத்த முடியாது. அடிப்படை சம்பளத்துடன் கொடுப்பனவுகளை இணைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என இவ் அரசு இவர்கள் போராட்டம் நடாத்துவத்தற்கு முன்பே அறிவித்துவிட்டது. கடந்த டிசெம்பர் 9ம் திகதி பாராளுமன்றத்தில் துறைமுக,கடற்துறை, மீன் பிடி, போக்குவரத்து, நீர்வள அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது உரையாற்றிய பிரதமர் அரச, தனியார் துறைக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியத் திட்டத்தை அமைக்க உள்ளதாகவும் அது தற்போதுள்ளவர்களுக்கு பொருந்தாது எனவும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
இவ் ஓய்வூதிய மாற்றம் தற்போதுள்ள அரச ஊழியர்களுக்கும் பொருந்தும் என திரிவுபடுத்தப்பட்டு அரச ஊழியர்களை சென்றடைந்தது. அரச தொழிலிலுள்ள இவ்வாறன சில சலுகைகளுக்காக தனியார்த் துறையை புறக்கணித்து அரச தொழில் பக்கம் வந்தவர்கள் உள்ளனர்.எனவே,தற்போதுள்ள அரச துறையினருக்கு ஓய்வூதிய முறையை மாற்றுவது அநீதி இழைப்பதாகும் என்பதில் இரட்டைக் கருத்தில்லை. அரச தொழில் பக்கம் இலங்கை மக்கள் அதிக நாட்டம் கொள்வதற்கு இவ் ஓய்வூதியத் திட்டம் தான் பிரதான காரணமாகும்.
இத் திட்டம் ஒழிக்கப்பட்டால் அரச, தனியார் தொழில்களுக்கிடையில் எதுவித வேறுபாடும் இருக்காது. இலங்கை அரசு தனியார் மயப்படுத்தலை நோக்கி சென்று கொண்டிருகின்றதா என்ற வினாவும் இங்கே எழுகிறது. 1961ம் ஆண்டு ஓய்வூதியத்திற்கு 83 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. 2011ம் ஆண்டு 99 961 மில்லியனும், 2050ம் ஆண்டு இத் தொகை நான்கு மடங்கால் அதிகரிக்கப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வராவிட்டால் இப் பாரிய தொகையை எதிர்கால அரசுகளால் சமாளிப்பது சவாலானதொரு விடயமாகும். எனவே, நாட்டின் நலன் கருதி இத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியமாதாகும். சில வேளை இது சிலருக்கு கசப்பாக இருந்தாலும் இதனை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். மேலும், ஓய்வூதியத்தை முற்றாக ஒழிக்கப்போவதாகவும் இவ் அரசு அறிவிக்கவில்லை. ஓய்வூதியத் திட்டங்கள் எதுவும் இன்றித் தானே விவசாயிகள், சுய தொழில் செய்பவர்கள் தங்கள் வாழ்வைக் கொண்டு செல்கிறார்கள்.
இப்படி இருக்கையில் அரச துறையினரால் மாத்திரம் வாழ்க்கை நடாத்த முடியாது போன்று கோசம் எழுப்புகின்றனர். மேலும், இலங்கை நாட்டில் இலட்சக் கணக்கான இளைஞர் யுவதிகள் தொழில் ஒன்றை எதிர்பார்த்து ஏங்கி இருப்பதால் இவ் ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் அரச தொழிற் துறைகள் முடங்கப்போவதுமில்லை.
ஒவ்வொரு வருட வரவு செலவுத் திட்டத்தின் போதும் அரச ஊழியர்கள் தங்களது சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என கோசம் எழுப்புவது சம்பிரதாய பூர்வ செயற்பாடாகிவிட்டது. இன்று அரச ஊழியர்களுக்கு தங்கள் அன்றாட வாழ்வை சிறந்த முறையில் நடாத்திச் செல்லும் அளவு சம்பளம் வழங்கப்படுகிறது. இளைஞர், யுவதிகளில் அதிகமானோர் தனியார்த் துறையைப் புறக்கணித்து அரச தொழில் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை இதற்கு போதுமான சான்றாகும்.
எனவே, வரவு செலவுத் திட்டங்களில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை சிந்திப்பதை விட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டான கைத் தொழிற் புரட்சி நோக்கி சிந்திப்பதுவே பொருத்தமானதாக இருக்கும்.எங்கு சென்றாலும் வேலை இல்லா இளைஞர்,யுவதிகள் சூழ்ந்து நிற்கின்றனர்.
ஒரு நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து சிறைச் சாலைகள் நிரம்ப இளைஞர்,யுவதிகள் வேலை இல்லாமல் இருப்பதே பிரதான காரணமாக சுட்டிக் காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இவ் அரசு இவ் வரவு செலவுத் திட்டத்தில் கைத் தொழில் புரட்சி விடயத்தில் கரிசனை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.எனினும்,இதனை திட்டமிடல் அமைச்சு நடைமுறைச் சாத்தியப்படுத்துமா என்பதற்கு எதிர்காலமே பதிலை வழங்கும்.
இலங்கை நாட்டை எத்தனையோ துறைகளில் முன்னேற்ற வேண்டிய தேவை உள்ளது.இதற்கிடையில் சிலருக்கு தீர்வையற்ற வாகனம் வேண்டுமாம்.இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரதமர் “பத்து வருடங்களுக்கு ஒரு முறையே தீர்வையற்ற வாகனம் வழங்கப்படுவதோடு ஒருவருக்கு இரு தடவைகள் மாத்திரமே வழங்கப்படும்” எனக் கூறினார்.
பிரதமரின் இக் கருத்திற்கு பதில் அளித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர் நாளின் ஹேரத் பத்து வருடங்களுக்கு ஒரு முறை தான் வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்பதை தாங்கள் ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.தீர்வையற்ற வாகன இறக்குமதிகளுக்கு 80 மில்லியன் ரூபாய் செலவாவதாகவும்,இத் தொகையே வருடமொன்றிற்கு மருந்து கொள்வனவு செய்யும் தொகையாகும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அரச வைத்தியர்களுக்கு சம்பளமும் அதிகரிக்க வேண்டும்.ஆடம்பரமாக இருக்க அரசு இவ்வாறான சலுகைகளையும் வழங்க வேண்டும்.இப்படியான சலுகைகளை வழங்க இலங்கை நாட்டின் திறைசேரியில் பணம் நிரம்பி வழியவுமில்லை. எனவே, ஒரு வருட மருந்து கொள்வனவு செய்யும் தொகையை இதற்கு செலவு செய்யும் அளவு இது முக்கியமான தேவையும் அல்ல. சொகுசு வாகனங்களில் பயணித்தால் தான் ஒரு வைத்தியர் வைத்தியருக்குரிய முழுத் தகுதியையும் பெறுவதும் இல்லை.
இலங்கை அரசு பல கோடிகளை செலவு செய்தே ஒரு வைத்தியரை உருவாக்குகிறது.மாசற சிந்தித்தால் இவர்கள் தான் இலங்கை அரசுக்கு உதவ வேண்டும். உதவா விட்டாலும் இலங்கை நாட்டின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு இவ்வாறான சலுகைப் போராட்டங்களை முன்னெடுக்காமலாவது இருக்கலாம்.
கடந்த டிசெம்பர் மூன்றாம் திகதி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்த பிறகும் தங்களது பிரச்னைகளுக்கு சரியான தீர்வு வழங்கப்படாத போது நாடு பூராகவும் மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும் என வைத்திய சேவைகள் தொழித் சங்க ஒன்றியக் கூட்டமைப்பின் தலைவர் அஜித், பீ திலகரத்ன தெரிவித்தார்.
எனினும், கடந்த பதினோராம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரசிங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சு நடாத்த சந்தர்ப்பம் வழங்கப்படாது என மிகவும் இறுக்கமாக தெரிவித்திருந்தார். எனினும், சு.காவின் ஆலோசனையின் பேரில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரத்தை வழங்க பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டப் பிரச்சினை சென்று கொண்டிருந்த போது சுகாதாரம், தபால், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட 150 அரச,தனியார் தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தன. 1983ம் ஆண்டு நடைபெற்ற போராட்டமே இலங்கை வரலாற்றின் மிகப் பெரிய போராட்டமாக பதிவாகியுள்ளது.
இதில் அரச தொழிற் சங்கங்கள் மாத்திரமே பங்கு கொண்டிருந்தன. ஆனால், இதில் அரச மற்றும் தனியார் அத்தனை நிறுவனங்களும் பங்குபற்றத் தயாராக இருந்தன.இப் போராட்டத்தை அவர்கள் திட்டமிட்டபடி முன்னெடுத்திருந்தால் இலங்கை நாடே இயக்கமின்றி முடக்கப்பட்டிருக்கும். இதுவே இலங்கை வரலாற்றில் உடைக்க முடியாததொரு தொழிற் சங்கப் போராட்டமாக பதிவாகி இருக்கும். இது நல்லாட்சி என வர்ணிக்கப்படும் இவ் ஆட்சிற்கு வரலாற்றில் ஒரு கரும் புள்ளியை ஏற்படுத்தி இருக்கும்.
இது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் பேச்சு வார்த்தை ஏதும் நடாத்தாமல் இவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு செல்லுவதாக குற்றம் சுமத்தினார்.பிரதமரின் இக் குற்றச் சாட்டிற்கு இத் தொழிற் சங்கங்கள் எதுவித பதிலையும் அளிக்காமை இக் கருத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள போதுமான சான்றாகும்.
பேச்சுவார்த்தைகள் நடாத்தி அதில் சுமுகமான தீர்வுகள் எட்டப்படாத போதே வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பது வழமை. பேச்சு வார்த்தைகள் எதுவும் நடாத்தாது முன்னெடுக்கப்படும் போராட்டங்களை அரசுக்கான ஒரு கண்டிப்பாக மாத்திரமே நோக்கலாம்.போராட்டம் நடாத்துவதற்கு நாள் குறித்துவிட்டு பேச்சு வார்த்தைக்கு வருவதை ஒரு விசித்திர நிகழ்வாகவே பார்க்க வேண்டும்.
விசித்திர திட்டத்தின் பின் விபரீத திட்டங்களும் உள்ளதா என்ற சந்தேகத்தையும் இது கிளறி விடுகிறது.இதற்கு ஏற்றாப் போல் “இவர்கள் இறுதி நேரத்தில் இப் போராட்டத்தை கை விடுவார்கள் என்பதை நான் அறிவேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ குறிப்பிட்டிருந்தார்.இவர்கள் கை விடுவார்கள் என்பது தனக்கு தெரியும் என்ற வார்த்தை இப் போராட்டக்காறர்களுக்கு அண்மையில் மஹிந்த ராஜ பக்ஸ இருந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.
இவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்த நாள் ஓ.எல் பரீட்சை நடைபெற்ற தினமாகும்.இவர்கள் திட்டமிடப்பட்டபடி போராட்டத்தை தொடர்ந்திருந்தால் அன்று அப் பரீட்சையை அரசு பிற்போட்டிருக்க வேண்டும்.இதனால் மாணவர்கள் உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள்.இதை வைத்துப் பார்க்கும் போது இவர்களின் போராட்டத்தில் பொது நலத்தை விட சுய நலம் மிகைத்துக் காணப்படுவதை அறிந்து கொள்ளலாம்.
இவ் 150 தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செவ்வனே செய்து கொண்டிருந்த போது தனியார் போக்குவரத்து சங்கமே முதலில் தலையை உள்ளுக்கு இழுத்தது.தனியார் போக்குவரத்து சங்கத்தின் பிரதான கோரிக்கை வாகன புகை பரிசோதனைக் கட்டணம் அதிகரித்தமையாகும். இரு, மூன்று சக்கர வண்டிகள் தவிர்ந்து மற்றைய வண்டிகளின் புகைப் பரிசோதனைக்கான ஐயாயிரம் ரூபாயை அறவிட இவ் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மைத்திரி தலைமையிலான புதிய ஆட்சியில் எரி பொருட்களின் விலை வெகுவாக குறைத்திருந்தன. இதனால் போக்குவரத்து துறை கடந்த ஆட்சிக் காலங்களை விட இவ் ஆட்சியில் பல மடங்கு இலாபங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இவ் ஆட்சியின் மூலம் அதிக இலாபங்களை பெற்றுக்கொண்ட ஒரு துறையாகவும் போக்குவரத்துத் துறையினை குறிப்பிடலாம். இப் புகைப் பரிசோதனைக் கட்டண அதிகரிப்பானது இவ் ஆட்சியின் எரிபொருள் குறைப்பினால் ஏற்பட்ட ஒரு நாள் இலாபம் அளவுதான் இருக்கும்.
கடந்த அரசின் எரிபொருள் விலையை இவ் அரசும் பேணி இருந்தால் இவ் ஐயாயிரம் கட்டணத்தை இல்லாமல் செய்து இலவசமாகவே இச் சேவையை தொடர்வதற்கான போதுமான வருமானம் இவ் அரசுக்கு கிடைத்திருக்கும்.இவ் வருமானத்தைக் கொண்டு மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி நற்பெயரும் பெற்றிருக்கலாம்.நேர்மையான விதத்தில் சில விடயங்களை எதிர்கொள்ள முடியாது என்பதற்கு இவைகளும் ஒரு சான்றாகும்.இறுதியில் புகைப் பரிசோதனைக் கட்டணத்தைக் குறைக்க அரசு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், போக்குவரத்து சங்கமே முதலில் தலையை உள்ளுக்கு இழுத்து இப் போராட்டத்தின் ஒழுங்கமைப்பை சீர் குலைத்து இவ் அரசு முகம் கொடுக்க இருந்த மிகப் பெரிய சவாலை இல்லாதொழிக்க உதவி புரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து புகையிரத சங்கமும் போராட்டம் செய்யும் எண்ணத்தை கைவிட்டது. இப்படியாக போராட்டமே கை விடப்பட்டது. மிகவும் சீரிய விதத்தில் திட்டமிடப்பட்டிருந்த இப் போராட்டத்தை இவ் அரசு மிகத் திறமையான விதத்தில் எதிர்கொண்டுள்ளமையானது இவ் ஆட்சியின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.
நிலைமை இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் கோவணத்துடன் சிலர் கொழும்பில் களமிறங்கினர்.தற்போது எந்த விவசாயியும் கோமணத்துடன் விவசாயம் செய்வதில்லை.தற்போதைய விவசாயிகளால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக உண்மை விவசாயி கோவணம் அணிவதை வெட்கித்திருப்பான். ஆனால், வெட்கம் இன்றி மிக ஆபாசமான விதத்தில் இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தமையானது இவர்கள் விவசாயிகளா? அல்லது அம்மணத்தை வெளிப்படுத்த விலை கொடுத்து வாங்கப்பட்டவர்களா? என்ற வினாவைத் தோற்றுவிக்கிறது.
இவர்களின் பிரதான கோரிக்கைகளாக நெல் விலையை உறுதிப்படுத்தல்,உரமானிய சலுகை மறுப்பு ஆகியன இருந்தன.2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜ பக்ஸ 350ரூபாய் உரமானிய சலுகையை முன் வைத்திருந்தார். இது பற்றி அவ் ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியிலேயே கருத்துத் தெரிவித்த தற்போதைய பிரதமர் பொய் வாக்குறுதிகளை நான் வழங்க மாட்டேன் என குறிப்பிட்டு இத் திட்டத்தை தன்னால் நடைமுறைப்படுத்த முடியாது என்பதை வெளிப்படுத்தி இருந்தார்.எனினும்,மஹிந்த ராஜ பக்ஸ ஆட்சி செய்த காலப்பகுதி முழுவதும் இத் திட்டத்தை நடைமுறைச் சாத்தியப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த அரசின் உரமானிய அளவு வருடத்திற்கு வருடம் குறைக்கப்பட்டாலும் விவசாயிகளுக்கு போதுமான அளவு உர மானியம் வழங்கப்பட்டிருந்தது.தற்போதைய அரசு உரமானியத்திற்கு வவுச்சர் முறையை அறிமுகம் செய்ய உள்ளது.வவுச்சர்கள் மூலம் சிறு தொகையை வழங்கிவிட்டு தாங்களும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கிவிட்டதான ஒரு ஏமாற்று வேலையை செய்யப் போகிறதா என்ற அச்சம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது. அப்படி இல்லை என்றால் ஒரு விவசாயிக்கு அவர் விவசாயம் செய்யத் தேவையான உரமானியத்தை பெற்றுக் கொள்ளுமளவு வவுச்சர்கள் மூலம் பணம் வழங்கப்படல் வேண்டும்.
அன்றே இது தன்னால் முடியாது எனக் கூறிய தற்போதைய பிரதமர் ரணிலிடம் இதனைக் கேட்பது சரியானதா? என்றும் வினா எழுப்பலாம்.மஹிந்த அரசில் வழங்கப்பட்ட உரமானியப் பாவனையால் சிறு நீராக நோய் ஏற்படுவதாக இவ் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றி மஹிந்த அரசு காலத்தில் யாரும் வாய் திறந்ததாக அறிய முடியவில்லை. மஹிந்த அரசு காலத்தில் ராஜித சேனாரத்தன சுகாதார அமைச்சராக இருந்தவர். ஏன் இவரால் அன்று இப் பிரச்னையை வெளிபடுத்த முடியவில்லை. சிறு நீராக நோயாளர்கள் விடயத்தில் மிகவும் அக்கரை காட்டும் ஜனாதிபதி மைத்திரி அக் காலத்தில் ஏன் மௌனியாக இருந்தார் என்பன இவ் விடயத்தில் சிந்திக்கத் தூண்டுபவைகளாகும்.
விவாசாயம் செய்ய தேவையானவற்றின் விலையை இவ் அரசு அதிகரித்தால்,விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான விலையையும் இவ் அரசு அதிகரிக்க வேண்டும். அரச ஊழியர்களுக்கு சம்பளமும் அதிகரிக்க வேண்டும் சலுகையும் அதிகரிக்க வேண்டும். ஆனால், விவசாயிகளின் கோரிக்கை அவ்வாறானதல்ல. இவ்வாறு விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டாலும் அவ் அதிகரிப்பின் பயனை ஒரு போதும் விவசாயிகள் அனுபவிப்பதுமில்லை.இன்று அரசு விவசாயப் பொருட்களுக்கு ஒரு நிர்ணய விலையை வைத்திருக்கும். ஆனால், விவசாயிகள் அக் குறித்த விலைக்கு ஒரு போதும் விற்பதில்லை.இவ் விடயத்தில் வேளாண்மை விவசாயிகள் அதிகம் பாதிப்புருகின்றனர்.
ஆனால், அரிசி நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலையே விற்கப்படும். இதனால் வசதி படைத்தோரும், இடைத் தரகர்களுமே பயனடைகின்றனர். விவசாய உற்பத்திப் பொருட்களை அரசின் நிர்ணய விலையில் விவசாயிகள் விற்பனை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந் நடவடிக்கை மூலம் நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரம் துரித அபிவிருத்தி காணும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் உரமானியத்திற்கு ஓரளவு நிவாரணம் வழங்கினாலும் விவசாயிகள் பாரிய இலாபங்களை சுவைத்துக் கொள்வார்கள்.
எது எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் ஆண்டிற்கு ஐ.தே.கவினால் வரையப்பட்ட வரவு செலவுத் திட்டம் பல திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதாவது ஐ.தே.கவின் வரவு செலவுத் திட்டம் தோல்வியைத் தழுவியுள்ளது என்பது தான் உண்மை. ஐ.தே.கவின் வரவு செலவுத் திட்ட செம்மைப்படுத்தலுக்கு இறுதி நேரத்தில் சு.காவின் சிந்தனைகளையும் உள்ளடக்க வேண்டிய ஒரு நிலைக்கு ஐ.தே.க தள்ளப்பட்டிருந்தது.தனித்து மக்களை சமாளிக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைக்க முடியாத ஒரு கட்சி எப்படி இந் நாட்டினை வழி நடாத்திச் செல்லப்போகிறது.
இவ் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள விசேடம் எதிர்க் கட்சித் தலைவர் இவ் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமையாகும். இப்படியான ஒரு ஆதரவு பெற்ற வரவு செலவுத் திட்டம் பல திருத்தங்களுக்கு உள்ளானமை எமது நாட்டின் எதிர்கால முன்னெடுப்புக்களை கேள்விக்குட்படுத்துகிறது. நாட்டின் பிழையான போக்குகளை சுட்டிக் காட்ட வேண்டிய கடப்பாடுடைய எதிர்க் கட்சி, எதிர்க் கட்சிக்குரிய சீரிய பண்பை இவ் விடத்தில் வெளிப்படுத்த தவறியுள்ளது.
அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான அனைத்துக் கோசங்களையும் சரியானது எனக் குறிப்பிட முடியாது. எனினும், ஒரு திட்டத்தை முன் வைக்கின்ற போது எழச் சாத்தியமான விமர்சங்களை, போராட்டங்களை யூகித்து அதனை எதிர்கொள்ளவும் குறித்த அரசு தயாராக இருக்க வேண்டும். அவ்வாறனதொரு தயார்படுத்தலை இவ் அரசு மேற்கொண்டிருக்கவில்லை. இவ்வாறானவை இவ் அரசின் முதலாளித்துவப் பண்பை வெளிப்படுத்துகிறது.
போராட்டக்காறர்கள் முன் வைத்த பல கோரிக்கைகளுக்கு அடி பணிந்தே இவ் அரசு பல சவால்களை முகம் கொடுத்துள்ளது. இது வெளிப்பார்வையில் வெற்றியாக தென் பட்டாலும் மறைமுகமாக பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது திட்டமிட்டதை விட அரசிற்கு அதிக பணம் தேவைப்படும். அல்லது இதனை சமாளிக்க வரவு செலவுத் திட்டத்திலுள்ள சில விடயங்களை நடைமுறைப்படுத்தாது தவிர்க்க வேண்டும்.ஒரு வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ள விடயத்தை நடைமுறைப்படுத்தாமல் தவிர்ப்பது அக் குறித்த அரசுக்கு பாரிய இழுக்கை ஏற்படுத்துவது மாத்திரமின்றி வரவு செலவுத் திட்டம் என்ற ஒன்றை வரைந்ததிலும் அர்த்தமற்றதாகிவிடும்.
இதனை சிந்தித்து அனைத்தையும் நடைமுறைப்படுத்தினால் துண்டு விழும் தொகை அதிகரிக்கும்.இது நாட்டின் சீரிய பயணத்திற்கு பாரிய சவாலை ஏற்படுத்தும். போராட்டகாறர்களின் போராட்டங்களுக்கு அடிபணியாது இருக்க பயணிக்க வேண்டுமானால் சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ முன்னெடுத்தது போன்று மிகக் கடுமையான நடவடிக்கைகளைத் தான் முன்னெடுக்க வேண்டும். அக் கடுமையான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுப்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று. போராட்டத்திற்கு அடிபணிந்தாலும் பிரச்சினைதான், அடிபணியாவிட்டாலும் பிரச்சினைதான். தற்போதைய அரசு இவ் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனை இவ் அரசு திறம்பட சமாளிக்கத் தவறினால் இது எதிர்காலத்தில் இவ் அரசுக்கெதிரான போராக உருவெடுக்கும்.
குறிப்பு: இக் கட்டுரை 1/1/2016ம் திகதி வெள்ளிக் கிழமை நவமணி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
