ஜெம்சாத் இக்பால்-
இலங்கையின் தலை சிறந்த பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவராக விளங்கிய கே.கே.இரத்தினசிங்கம் தமிழ் ஊடகத்துறைக்கு பாரிய பங்களிப்பை செய்திருப்பதாகவும், அவரது வழிகாட்டுதலில் எழுத்துத் துறையில் ஈடுபட்டோர் தேசிய நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் முன்னணியில் திகழ்வதாகவும் அன்னாரது மறைவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் எம்.பி. விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பத்திரிகை ஜாம்பவான்களான மறைந்த எஸ்.டீ.சிவநாயகம், கே.கே.இரத்தினசிங்கம் ஆகியோரின் கீழ் ஏக காலத்தில் பணிபுரியும் வாய்ப்பு தினபதி, சிந்தாமணி பத்தரிகைகளினூடாக எனக்கும் வாய்த்திருந்தது. 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டே சுயாதீன பத்திரிகை (தவச) நிறுவனத்தின் ஆசிரிய பீடத்தில் பகுதி நேரம் கடமையாற்றிய காலத்தில் நான் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் ஏராளமானவை.
இரத்தினசிங்கம் அவர்களின் ஆஜானுபாவமானதும், கம்பீரமானதுமான தோற்றப் பொழிவு இந்தத் துக்க கரமான சந்தர்ப்பத்தில் என் கண் முன் தோன்றி மறைகின்றது. தாடியும் மீசையுமாக காட்சியளித்த அந்த உயர்ந்த மனிதர் கண்டிப்பானவராக நடந்துகொண்ட போதிலும், தம்முடன் கடமை புரிந்த சக பத்திரிகையாளர்களுடன் குறும்பாகவும், கனிவாகவும் பேசும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்.
நான் கொழும்பு, மருதானையில் சிகிச்சையளித்துக்கொண்டிருந்த காலத்தில் இரத்தினசிங்கம் ஐயா தாம் வசித்து வந்த மாளிகாவத்தை தொடர்மாடி வீட்டிலிருந்து எனது மருத்துவ நிலையத்திற்கு முன்னாலுள்ள பாதையினூடாக 'தவச' பத்திரிகை அலுவலகத்திற்கு கால் நடையாகவே பயணித்து வந்தார். இடையிடையே அவர் என்னைச் சந்தித்து சற்று நேரம் உரையாடிவிட்டுச் சென்றதை நினைத்துப் பார்க்கின்றேன்.
பத்திரிகை துறையில் எஸ்.டீ.சிவநாயகம், கே.கே.இரத்தினசிங்கம், கானமயில் நாதன், இரத்தினம், மாஸ்டர் சிவலிங்கம், கா.தா. சிவகுருநாதன், பத்மசீலன் போன்றோர் அப்பொழுது எங்களுடன் ஒரே குடும்பமாக பணியாற்றிய அந்தக் காலத்தை என்னால் மறக்க முடியாது.
இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய மொழி நடையை கையாண்டு வந்த மறைந்த இரத்தினசிங்கம் ஆணித்தரமாக செய்திகளை எழுதக் கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தார்.
அவரது மறைவினால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
