
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஆனந்த தேரருக்குமிடையிலான ஹிரு தொலைக்காட்சி விவாதத்தின் பின்னர் பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்ட வண்ணமே உள்ளன. குறித்த விவாதத்தில் அமைச்சர் தோற்று விட்டார் என்கிறது ஒரு தரப்பு . இல்லை.. இல்லை அவர் வெற்றி பெற்றார் என்கிறது இன்னொரு தரப்பு. ரிஷாத் இந்த விவாதத்தில் கலந்து கொண்டமை தப்பு என்கின்றனர் ஒரு சாரார். மற்றைய தரப்போ அவர் கலந்து கொண்டது சரி என்கிறது.
என்னைப் பொறுத்த வரையில் அவர் விவாதத்தில் கலந்து கொண்டது சரி என்றும் அதில் அவர் வெற்றி பெற்றார் என்றுமே கூறுவேன். ஆனால், அவரது 100 சத வீத வெற்றி சதி காரணமாக தடுக்கப்பட்டுள்ளது என்பதனையும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வில்பத்துவில் முஸ்லிம்கள் அத்துமீறிய குடியேற்றம், முஸ்லிம் மக்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்., ரிஷாத் பதியுதீன் ஒரு போதைப் பொருள் வியாபாரி என்பனவே விவாதத்தின் கருப்பொருள்களாகும்.
இந்த மூன்று விடயங்கள் தொடர்பிலும் அவர் சரியானதும் உண்மையானதுமான ஆதாரங்களை முன்வைத்து தனது பக்க நியாயத்தை, விவாத்தைப் புரிந்து கொண்டிருந்த நிலையில், அமைசச்ர் ரிஷாத்துக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டு விவாதமே வேறு திசைக்கு மாற்றப்பட்டது, அமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மக்களை விசேடமாக, சிங்கள மக்களை வேறு திசைக்கு கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இது உண்மையில் கவலைக்குரிய விடயம்.
உண்மைகள் மெதுவாக வாசற்படி ஏறிக் கொண்டிருந்த போது பொய்களும் வீண் பழிகளும் விரைவாக உள்ளே நுழைந்தன என்பதே மொத்த உண்மை. இவைகளே அமைச்சர் ரிஷாதின் முழுமையான வெற்றிக்கு தடையாகவிருந்தன.
மேலும், அமைச்சர் ரிஷாத் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் மட்டுமே விவாதிப்பார் என்றே நான் நினைத்தேன் ஆனால் அன்று அவர் இந்த நாட்டு முழு முஸ்லிம் சமூகத்துக்காவும் தனியனாக நின்று போராடினார். இலங்கையின் கரையோரங்களில் முஸ்லிம்களை குடியேற்றக் கூடாது. அவர்களால் நாட்டின் இறைமைக்கு சவால் ஏற்படும். தேசிய பாதுகாப்பே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றெல்லாம் சிங்கள இனவாதிகள் அரசின் உயர் மட்டத்துக்கு அறிக்கை சமர்ப்பித்த விடயத்தை அமைச்சர் தெளிவாக அம்பலப்படுத்தினார். முஸ்லிம்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர் என்பதனை கடந்த கால வரலாற்று நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு நிரூபித்தார்.
ஒருவருடன் விவாதிப்பதற்காகச் சென்ற அவர் நால்வருடன் விவாதம் விவாதம் புரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. விவாதம் முடிந்த பின்னர் அவர் கண்கலங்கிய நிலையில் வெளியேறினார் என பலராலும் தெரிவிக்கப்பட்டது.
அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட அபாண்டங்களுக்காகவோ அவர் கண்ணீர் விடவில்லை. தனது சமூகம் தோற்று விடுமோ என்று எண்ணியே கண்ணீர் வடித்தார் வடித்தார் என்றும் பலர் என்னிடம் தெரிவித்தனர்.
அன்று மாமனிதர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள், முஸ்லிம்களுக்காக சிங்கள அரசியல் தலைமைகள், சிங்கள இனவாதிகள், பௌத்த தேரர்களுடன் விவாதம் புரிந்து எமது சமூகத்துக்காப் போராடி எத்தனையோ வெற்றிகளை பெற்றுத் தந்தார். முஸ்லிம்கள் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட தவறான அபிப்பிராயங்களைக் களைந்தெறிந்தார்.
அதே போன்றதொரு நிலைமையே இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் இன்றும் எதிர்நோக்கியுள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் வாய்மூடி கைகட்டி நிற்பது ஏன்? இது மஹிந்த அரசு அல்ல.. மைத்திரி ரணில் அரசு என்பதற்காகவா? இன்றேல் வேறு ஏதும் காரணங்களா?
இவ்வாறானதொரு நிலையில், சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் பார்க்க சண்டைக்காரனின் காலில் விழுவது மேல். என்பது போல் அமைசச்ர் ரிஷாத் பதியுதீன் துணிச்சலுடன் முன்வந்து முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள், அபாண்டங்களை இல்லாமல் செய்து அவர்களது பக்க நியாயங்களுக்கு நீதி கோரி பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுக்கும் போது எமது சமூகத்துக்குள் இருந்தே சகுனிகளும் கூனிகளும் உருவாகியிருப்பது மிகுந்த கவலை தருகிறது.
மாமனிதர் அஷ்ரபுடன் சமனாகப் பார்க்கவே முடியாத அமைச்சர் ரிஷாத் அவர்கள் தனக்குரிய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப, அவை அனைத்தையும் சமூகத்துக்காகப் பயன்படுத்த முயற்சிக்கும் போது முகச்சுழிப்புடன் பார்ப்பது எந்த வகையில் நியாயமானது?
குட்டிகள் குரைப்பதெல்லாம் முடிவில் தாய் தலையில் விழும் என்று கூறுவார்கள்.. ஆனால், தாய் எப்போதும் தூக்கத்திலிருக்கும் போது, குட்டிகளும் குரைக்காமல் இருந்தால் அனைத்தையுமே இழந்து விடும் நிலையே ஏற்படும்.
அந்தக் குட்டிகளாவது உஷாராக குரைத்துக் கொண்டிருந்தால்தானே எதிரிகள் உள்ளே நுழைவதற்காவது சற்று அச்சமடைவர் அல்லவா? அதனைத்தான் அமைச்சர் ரிஷாத் செய்துள்ளார்.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்