வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் பற்றி பிரதமர் குறிப்பிடவில்லை ஏன்..? - வை.எல்.எஸ். ஹமீட்

எஸ்.அஷ்ரப்கான்-
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள் தனது வெளிநாட்டுப் பயணத்திலிருந்து நாடு திரும்பியவுடன் நாட்டு மக்களுக்காற்றிய விசேட உரையில் வட புல தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்தை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய இருப்பதாகவும், படையினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் அனைத்தையும் இவ்வருட இறுதிக்குள் மீளளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ள கருத்தை வரவேற்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பிரதம மந்திரியின் கவனத்தை ஈர்க்க மிகவும் சாணக்கியமாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றோம்.

அதேநேரம் எதுவித குற்றமும் செய்யாமல் தம் பரம்பரை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு 25வருடங்கள் அவல வாழ்க்கை வாழ்ந்து இன்னும் மீள் குடியேறுவதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில் நிர்க்கதியாக இருக்கின்ற வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைப் பற்றி பிரதமர் தனது உரையில் குறிப்பிடாதது கவலையளிக்கின்றது. அதற்கான காரணமும் புரியவில்லை. 

வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் முற்றுப்பெற்றுவிட்டது. இனி செய்வதற்கு எதுவுமில்லை என்று பிரதம மந்திரி கருதிகின்றாரா? அல்லது அம்மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான உண்மை நிலை தெரியாமல் இருக்கின்றாரா? அல்லது அம்மக்களின் மீள் குடியேற்றத்தின்மீது அக்கறையில்லாமல் இருக்கின்றாரா? ஏன் தனதுரையில் இம்மக்கள் தொடர்பாக அவர் குறிப்பிடவில்லை. 

இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறாயின் இதன் உண்மை நிலை என்ன ?

பிரதம மந்திரி சிறுபான்மைகள் மீது அனுதாபம் கொண்ட ஒருவர் என்ற ஒரு கருத்து பரவலாக இருக்கின்றது. அவ்வாறாயின் அவருக்கு வட புல முஸ்லிம் மக்களின் உண்மைநிலை இதுவரை எடுத்துக் கூறப்படவில்லையா?

கடந்த அரசாங்க காலத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட சம்பூர் மற்றும் வடபுல காணிகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பல தடவை பாராளுமன்றத்தில் உரத்துக் குரல் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் மலர்ந்துள்ள நல்லாட்சியில் இவைகள் தொடர்பாக அவர்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை. 

ஆனாலும் அனைத்தும் தானாக நடைபெறுகின்றன. காதும் காதும் வைத்தாற்போல் சம்பூர் காணி மீட்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் சுமார் 700 ஏக்கர் தமிழ் மக்களின் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. 

எஞ்சியிருக்கின்ற காணிகளை விடுவிப்பதற்கும் தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்தை பூர்த்தி செய்வதற்கும் பிரதம மந்திரியினால் இப்பொழுது உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது. இவைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நல்லாட்சியில் ஆர்ப்பாட்டம் இன்றி கனகச்சிதமாக காய்களை நகர்த்துகின்றார்கள்; என்று இதிலிருந்து புலனாகின்றது.

இதற்குக் காரணம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தங்களது பேரம் பேசும் சக்தியை அவர்கள் பயன்படுத்தியதாகும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை வழங்குவதற்கு இவ்விடயங்களை முன் நிபந்தனையாக வைத்ததாகும். எனவே இம்மக்களுக்காக சத்தமின்றி ஆர்ப்பாட்டமின்றி இப்பொழுது சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சமாதானமாக காரியம் சாதிக்க முடியாதபோது உரத்துக் குரல் எழுப்பவும் அவர்களுக்கத் தெரியும். சமாதானமாக சாதிக்க முடியும்போது நிசப்தமாக காய்களை நகர்த்தவும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மக்களுக்காக பேசுகின்றார்கள்இ மக்களுக்காக செயற்படுகின்றார்கள்.

இவ்வாறு தான் முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியை 89 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது வெட்டுப்புள்ளித் திட்டத்தை குறைக்கின்ற விடயத்தில் மிகவும் சாணக்கியமாக மறைந்த தலைவர் பாவித்தார். அதன் விளைவு பொதுத் தேர்தலில் பன்னிரன்டரை வீதமாக இருந்த வெட்டுப்புள்ளி 5 வீதமாக குறைக்கப்பட்டது. மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கு வெட்டுப்புள்ளி இல்லாமல் செய்யப்பட்டது. அவ்வாறு அவர் அன்று செய்யாமல் இருந்திருந்தால் இன்று முஸ்லிம் கட்சி மலையகக் கட்சி அரசியல் நடைமுறைச் சாத்தியம் இல்லாமலே போயிருக்கும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இதேபோன்றுதான் சிறுபான்மைகளுக்கு பேரம் பேசும் சக்தி மீண்டும் கிடைத்தது. அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாவித்த்து. இன்று சாதிக்கின்றது. ஆனால் நாம் அதனைத் தவறவிட்டோம். தொடர்ந்து இன்றும் அவஸ்தைப்படுகின்றோம். பிரதமரின் பேச்சிலாவது குறிப்பிடக் கூடியளவு இம்மக்களின் மீள் குடியேற்றம் முக்கியத்துவம் பெறவில்லை என்பதை நினைக்கின்றபொழுது வேதனையாக இருக்கின்றது. இது நாம் பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டியதைப் பேசாமல் வேறு எதை எதையோ பேசியதன் விளைவு. 

ஆனால் இது எதனைப் பற்றியும் நமக்கு கவலையில்லை. நாம் நமது சுய விளம்பரங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றோம். பாவம் மக்களின் மீள் குடியேற்றம் நிறைவு பெற்றுவிட்டால் நமது விளம்பரத்திற்கு தலைப்பு இல்லாமல் போய்விடுமோ என்கின்ற சூழ்நிலை. மறுபுறத்தில் தேசியத்தலைமை என்று பணம், பொருள் செலவில் நமக்கு நாமே பட்டம் சூட்டுவதிலேயே குறியாக இருக்கின்றோம். 

தேசியத்தலைமை என்ற பட்டத்திற்கு ஆசைப்படுகின்ற நமக்கு அதன் பொருள் தெரியுமா? இனவாத அரசு இந்நாட்டில் இருந்தால் தேசியத்தலைவரகளாக பட்டம் சூடுகின்றவர்கள் சில வேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப் பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்பதாவது புரியுமா? ஒருவர் தலைமைத்துவம் கேட்டால் அவருக்கு கொடுக்க கூடாது; என்கின்றது மார்க்கம் . 

ஆனால் நாம் தலைவர் பதவி போதாது, தேசியத்தலைவர் பதவி வேண்டும் என்கின்றோம். நமது மக்களுக்காக எங்கெல்லாம் பேசுவதாக படம் காட்டுகின்றோம். ஆனால் நமது பிரதமரை ' நமது மக்களையும் மீழ் குடியேற்றுவதற்கான ஒரு பகிரங்க உத்தரவாத்த்தைக்கூட தரவைக்க முடியாத' கையாலாகாத ' அரசியலைச் செய்கின்றோம். நம்மிடம் முக நூல்கள் இருக்கின்றனஇ என்கின்ற ம்மதை.மண்ணின் மேல் பேசும் முக நூல்களுக்கு மண்ணறைக்குள் வந்து பேசத்தெரியாது. அங்கு நாம் மட்டும்தான் பேச வேண்டும்.

அதிகாரம் என்பது ஒரு அமானிதம். பேரரசர் கலீபா உமர் (றழி) அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் நாம். நமது கடமையை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற வரலாற்றை எமது கையில் வைத்துக்கொண்டு இவ்வாறெல்லாம் நாம் நடக்கின்றோம்.

முஸ்லிம் தலைமைகள் இனியாவது விழித்துக் கொள்ளட்டும். தேர்தல் காலங்களில் வன்னியை தேடிச் செல்லும் தலைமைகள் தேர்தல் முடிந்ததும் வன்னியை மறக்கின்ற வரலாறு மறையட்டும். மீள் குடியேற்றம் இருக்கும்வரைதான் தங்கள் அரசியல் வண்டியை ஓட்டலாம்; என்று இம்மக்களின் மீள் குடியேற்றத்தை' பிச்சைக்காரனின் புண்ணாக' பார்க்கின்ற அரசியல் கலாச்சாரம் ஒழியட்டும். 

நாம் வடக்குமல்ல, வட புல மக்களின் வாக்குகள் நமக்குமல்ல. எனவே மீள் குடியேற்றத்தில் நமக்குப்பங்குமில்லை என்கின்ற மனோ நிலைக்கு விடை கொடுக்கப்படட்டும். வடக்குத் தலைமைத்துவங்கள், கிழக்குத் தலைமைத்துவங்கள், மேற்குத் தலைமைத்துவங்கள்,தெற்குத் தலைமைத்துவங்கள், தேசியக்கட்சிகளில் முஸ்லிம் தலைமைத்துவங்கள், முஸ்லிம் கட்சிகளில் தேசியத் தலைமைத்துவங்கள் அனைத்தும் இந்த வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் ஒன்றுபடட்டும். 

கலிமாச் சொன்ன தலைமைத்துவங்கள் தெரிவு செய்த மக்களின் ஊழியர்கள் என்ற மனப்பான்மை மலரட்டும். கலிமாச் சொன்ன முஸ்லிம்கள் நாட்டின் எந்தப் புறம் இருந்தாலும் அவர்கள் முஸ்லிம் உம்மாவின் ஒரு அங்கம் என்ற ஈமானிய அன்பு பிறக்கட்டும். ஒன்று கூடுங்கள். அரச உயர் மட்டத்தை உடனடியாக நாடுங்கள். இம்முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும் இவ்வருட முடிவிற்குள் நிறைவடைய உறுதி பூணுங்கள். 

இம்மக்களின் மீள் குடியேற்றம் நிறைவு பெறும்வரை ஓயாமல் உழைப்பதற்கு பிரதிக்ஞை எடுங்கள். விளம்பரத்திற்காக மேளம் கொட்டுவதை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எதிரி விழிப்பாக இருக்கின்றான் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் முயற்சியினால் இம் மீள் குடியேற்றம் நிறைவு பெறுகின்றபொழுது அம்மக்கள் அல்ஹம்துலில்லாஹ் என்பார்கள். அதுதான் உங்களுக்கு உண்மையான அரசியல் விளம்பரம். அதுதான் உங்களுக்கான அரசியல் வெற்றி. அதுதான் மறுமையின் வெற்றி. பொறுத்தது போதும் புறப்படுங்கள். என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -