கிழக்கு மாகாண சபையினால் விசேட நீர்ப்பாசன திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - உதுமாலெப்பை MPC

சலீம் றமீஸ்-
டந்த 03 தசாப்த காலமாக போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண விவசாயத்துறையை கட்டியெழுப்பும் வகையில் கிழக்கு மாகாண சபையினால் விசேட நீர்ப்பாசன திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார். கிழக்கு மாகாண சபை அமர்வு பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நடை பெற்றது. 

தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

2008ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டு வரை கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தில் வாழும் மூன்று சமூகங்களின் வரலாற்று ரீதியான நீர்ப்பாசன குளங்களை அடையாளங்கண்டு புணரமைத்து நீண்ட காலமாக விவசாயம் செய்ய முடியாமல் இருந்த பல ஆயிரக்கணக்கான நெற் காணிகளில் விவசாயம் செய்யக் கூடியதாக மாற்றிக் கொடுத்தோம். 

நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் இந்த விடயத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். நீர்ப்பாசன விடயத்தில் இன பேதமின்றி, மாவட்ட பேதமின்றி பணி புரிந்தோம். திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பாரம்பரிய குளமான நீலப் பணிக்கன் குளத்தினை பார்வையிடுவதற்கு கூட அன்று பாதுகாப்பு படையினர் தடை விதித்திருந்தனர். 

முன்னாள் முதலமைச்சர் திரு.சந்திரகாந்தன், விவசாய அமைச்சர் நவரத்னராசா, இன்றைய வீதி அபிவிருத்தி அமைச்சர் திருமதி ஆரியவதி கலபதி, அமைச்சின் உயர் அதிகாரிகள் புனித றமழான் மாதத்தில் 07 கால் நடையாக நடந்து சென்று நீலப் பணிக்கன் குளத்தை பார்வையிட்டோம். 

உடனடியாக பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கி குளத்தை புணர்நிர்மாணம் செய்துள்ளதுடன், நாங்கள் கால் நடையாக நடந்து சென்ற விவசாய பாதையை வாகனங்கள் செல்லக் கூடியதாக மாற்றி தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான விவசாயக் காணிகளை மீட்டுக் கொடுத்ததனால் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் தமிழ் விவசாயிகள் நெல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று மூன்று மாவட்டங்களில் வாழும் மூவின மக்களின் நீர்ப்பாசன திட்டங்களை புணரமைத்து கொடுத்தோம்.

எதிர் வரும் 2016ம் ஆண்டில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்கு 60மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந் நிதியை கொண்டு முழு கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு முடியாத நிலை உருவாகும். எனவே இன்னும் கூடுதலான நிதியினை நீர்ப்பாசன திணைக்களத்திற்கு ஒதுக்குவதற்கான விசேட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், குச்சவெளி பிரதேச விவசாயிகள் தங்களின் நீர்ப்பாசன விடயங்களை மேற்கொள்வதற்காக நீண்ட தூரம் பிரயானம் செய்து திருமலை நகரில் உள்ள நீர்ப்பாசன காரியாலயத்திற்கு நீண்ட காலமாக வரவேண்டிய நிலமை இருந்தன. 

இதற்காக குச்ச வெளிப் பிரதேசத்தில் உப நீர்ப்பாசனக் காரியலயமும், மூதூர் பிரதேசத்தில் உப நீர்ப்பாசன காரியாலயமும் அமைக்கப்பட்டு பல வருடங்களாக இயங்கி வருகின்றன. இதே போல் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், பாணம, லவுகல பிரதேச விவசாயிகள் தம்பிலுவில் அமைந்துள்ள நீர்ப்பாசன காரியாலயத்திற்கு நீண்ட தூரம் பிரயாணங்களை மேற்கொண்டு தங்களின் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். இதனால் பொத்துவில் பிரதேசத்தில் உப - நீர்ப்பாசன காரியாலயம் அமைக்கப்பட்டு பல வருடங்களாக இயங்கி வருகின்றன.

இப்பிரதேசங்களில் நிரந்தரமான நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயங்களை திறந்து வைப்பதற்கான அனுமதிகள் ஏற்கனவே பெறப்பட்டன. இதுவரை இக்காரியாலயங்களை திறந்து வைக்கப்படாமல் உள்ளன. இது தொடர்பாக விவசாய அமைச்சில் அண்மையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் முன்வைத்த போது விரைவில் குச்சவெளி, பொத்துவில், மூதூர் நீர்ப்பாசன காரியாலயங்கள் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டன. இதுவரை இந்த நீர்ப்பாசன காரியாலயங்களை திறந்து வைப்பதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் நடைபெறவில்லை. எனவே, விரைவாக இக்காரியாலயங்களை திறந்து இப்பிரதேச விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

பொத்துவில் பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாக உள்ள ஹடே ஓயா நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இத்திட்டத்தினை அமுல்படுத்தும் போது மொனராகலை மாவட்ட காணிகள் நீரில் மூழ்குவதாக தெரிவித்தனர். இத்திட்டத்தினை அமுல்படுத்தும் போது மொனாராகலை மாவட்ட காணிகள் நீரில் மூழ்கின்ற நிலமை வரும் போது அந்தக் காணிகளுக்குப் பதிலாக அம்பாறை மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்து பதில் காணிகளை வழங்குவதற்கும் அம்பாறை மாவட்ட அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து சம்மதம் தெரிவித்தோம்.

ஆனால் இத்திட்டம் தொடர்பான எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் அவர்கள் இந்த விடயத்தினை மத்திய அரசாங்க நீர்ப்பாசன அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விடயத்தில் கிழக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சரும் விசேட கவனம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தினை நிறைவேற்றினால் பொத்துவில் பிரதேச மக்களின் பொருளாதார வாழ்வாதார துறையில் பாரிய வளர்ச்சி ஏற்படும். எனவே, கிழக்கு மாகாண சபை இந்த விடயத்தில் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான எல்லா நீர்ப்பாசன குளங்களுக்கும் சென்று வந்துள்ளேன். ஆனால் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான நாவுள்ள குளத்திற்கு விவசாயப் பாதை அமைக்கப்படாததனால் என்னால் இக்குளத்தினை பார்வையிட முடியாமல் போனது. எனவே, 2016ம் வருட நிதியில் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள நாவுள்ள குளத்திற்குச் செல்லும் விவசாயப் பாதையினை புணரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் திரு.வெள்ளிமலை அவர்கள் நீங்கள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் எத்தனை தமிழ் மக்களுக்கு நியமனங்கள் வழங்கினீர்கள் என்று கேட்டார். அமைச்சர் என்ற அடிப்படையில் எனக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட நியமனங்களில் 04 தமிழ் மக்களுக்கு நியமனங்கள் வழங்கியதுடன், நீர்ப்பாசன திணைக்களத்திலும், வீதி அபிவிருத்தி திணைக்களத்திலும் 58 தமிழ் மக்களுக்கு நியமனங்கள் வழங்கி உள்ளேன் என்பதனை இச்சபைக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சராக பதவியில் இருந்த போதும் எனக்காக ஒரு நியமன கூட பெறாமல் தமிழ் மக்களுக்கே அந்த நியமனங்களை வழங்கினேன் என்பதனை இச்சபைக்கு தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.

கரடியன் ஆறு விவசாய பயிற்சி நிலையத்திற்கு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொழிலாளியை அம்பாறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து தருமாறு விவசாய அமைச்சரிடமும், செயலாளரிடமும், உயர் அதிகாரிகளிடமும் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்தேன். அவருக்கான இடமாற்றம் இதுவரை கிடைக்கவில்லை. 

சென்ற மாதம் கரடியனாறு விவசாய பயிற்சி நிலையத்திலிருந்து அதிகாரிகளுடன் இணைந்து பிபிலையில் நடைபெற்ற பயிற்சியை முடித்து விட்டு வருகின்ற போது இந்த நபர் வாகன விபத்து ஏற்பட்டு தற்போது காயமடைந்த நிலையில் உள்ளார். இந்த நிலையில் கூட இந்த தொழிலாளியின் இடமாற்றத்திற்கு கருனை காட்ட முடியாத இதயங்களைக் கொண்டவர்கள் கூட கிகழக்கு மாகாணத்தில் நல்லாட்சி நடைபெறுகின்றது என்று கூறுவது வேதனை தருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -