றிசாத் ஏ காதர்-
பாடசாலை சீருடையினை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட கூப்பனைக்கொண்டு சீருடை துணியினை கொள்வனவு செய்வதில் பெற்றோர்களும், மாணவர்களும் பல அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெனார்த்தனன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பொருட்டு இவ்வாண்டு கல்வி அமைச்சினால் பதிய முறையொன்று அமுல்படுத்தப்பட்டு துணிகளை கொள்வனவு செய்வதற்காக கூப்பன்கள் வழங்கப்பட்டது, இக்கூப்பனைக்கொண்டு துணிகளை கொள்வனவு செய்வதில் மாணவர்களும், பெற்றோர்களும் பல கஷ்டங்களை எதிர் நோக்கியதை அண்மைக்காலமாக எமது கண்களுடாக பார்க்கக்கிடைத்தது.
விசேடமாக ஒரு பெற்றோர் சீருடை துணிகளை கொள்வனவு செய்த போது அச்சமயம் அந்த நிறுவனத்தில் நானும் அருகில் இருந்தேன். அந்த பெற்றோர் கூப்பன்களை வழங்கி சீருடைகளை கொள்வனவு செய்ய முற்பட்ட போது நிறுவனத்தின் உரிமையாளர் 200ரூபாய் கூப்பனுக்கு தரமான சட்டைத்துணிகளை கொள்வனவு செய்ய முடியாது எனவும் தரமான துணிக்கு 240ரூபாய் எனவும் குறிப்பிட்டார்.
தரமான துணியை கொள்வனவு செய்வதற்காக அந்தப் பெற்றோரிடம் 40ரூபா மேலதிக பணம் இருக்கவில்லை இதன்போது அவர் பெரும் சங்கடப்பட்டதனை அவதானிக்கக்கிடைத்தது.
அது மாத்திரமல்ல மிகவும் கஷ்டப்பிரதேச கிராமங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் தங்கள் பிள்ளைகளின் சீருடை துணிகளை கொள்வனவு செய்வதற்காக நகர்ப்புற கடைகளுக்கே வரவேண்டியுள்ளது இதற்காக ஆட்டோ மற்றும் போக்குவரத்துக்காக கூப்பனின் தொகையையும் விட அதிகமான பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது தேசிய ரீதியில் இந்தப்பிரச்சினையை காணமுடிகின்றது.
எனவே தற்போதைய முறைப்படி சீருடை துணிகளை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் கஷ்டங்களுக்கு சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளதுடன் பழைய முறைப்படி சீருடையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக எமது மாகாண கல்வி அமைச்சர் ஏனை மாகாண கல்வி அமைச்சர்களுடனும் இதுபற்றி கலந்தாலோசிக்க முடியும் என்பதுடன் அதற்காக சரியான தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
