சுலைமான் றாபி-
நிந்தவூர் பிரதேசத்தில் மக்கள் பயன்படுத்தும் முக்கிய வீதிகளில் நிந்தவூர் வைத்தியசாலை வீதியும் ஒன்றாகும். அந்தவகையில் சென்றவருடங்களில் இந்த வீதியின் அபிவிருத்தி வேலைக்காக உலக வங்கியால் பல மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டிருந்த போதும், இவ்வீதிக்கான அபிவிருத்தி வேலைகள் அரசியல் காரணங்களுக்காக பாதியளவில் கைவிடப்பட்டு, முடக்கப்பட்ட நிலையில் தற்போது மழைகாலம் என்றபடியால் அதிகளவான குன்றுகளும், குழிகளும் இவ்வீதியில் காணப்படுவதனை அவதானிக்க முடிந்துள்ளது.
உண்மையில் இந்த வீதியானது அன்றாடம் அதிகளவான பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும், மற்றும் பிரயாணிகள் அனைவரும் பயன்படுத்தும் வீதியாகக் காணப்படுகின்றது. மேலும் இவ்வீதியில் சுகாதார பிரதியமைச்சரின் பிராந்திய காரியாலயம், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல், அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை, மருந்தகம், அரபிக் கல்லூரி, பள்ளிவாசல், மகளிர் அரபிக் கல்லூரி, வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் உள்ளிட்ட இன்னும் பல முக்கியமான இடங்களும் காணப்படுகின்றது.
இருந்த போதும் மழை காலத்தில் இவ்வீதி அநேகமான இடங்களில் சேறு நிறைந்ததாகவும், சில இடங்கள் சதுப்புக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. மேலும் சில இடங்களில் மழை ஓய்ந்தாலும் நீர் வற்றாத நிலையில் அது ஆழக் குழிகளாகவும் காணப்படுகின்றது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பயணம் செய்பவர்கள் பல்வேறு ஆபத்துக்களுக்கு முகம் கொடுத்து வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வந்ததும் மிகவும் வேதனை தரும் விடயமாகக் காணப்படுகின்றது.
இதேவேளை இவ்வீதியில் காணப்படும் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை, மற்றும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளில் அதிகளவான குன்றுகளும், குழிகளும் காணப்படுவதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து க.பொ.த (சா/த) பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களும், இந்தப் பகுதியினூடாக பிரயாணம் செய்யும் சிறுவர்களும், ஏனையோர்களும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதோடு, இவ்வீதியினூடாக கடமைக்குச் செல்லும் பிரதேசசபை உத்தியோகத்தர்களின் கண்களுக்கும் இவைகள் புலப்படாமல் போனதும் ஆச்சரியமே !
எனவே இந்த வீதியை தற்போது முற்றாக அபிவிருத்தி செய்ய முடியாவிட்டாலும், பிரதேச சபையில் காணப்படும் நிதியினைக் கொண்டும் பொது மக்கள் பிரயாணம் செய்ய ஓரளவிற்காவது சீரமைத்துக் கொடுப்பது பிரதேச சபையின் கடமையல்லவா? நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளரே ! இது உங்களின் கவனதிற்கு..!



